(Reading time: 24 - 48 minutes)

ப்பா ஃபோட்டோவை பார்க்கனும்னா இங்க எடுத்து பார்த்துக்கோ..” என்றாள் பார்கவி. ரவீன் அவளது செயலை ரசித்துக் கொண்டு அமைதியாய் இருக்கவும், சூழ்நிலையை இயல்பாக்கும் நோக்கத்தில்,

“ரவீன் உன் பிறந்தநாள் எப்போ?”என்று கேட்டாள் பார்கவி.

“மார்ச் 10”

“என்னது ? மார்ச் பத்தா? நிஜமாவா?” என்றவளின் கண்களில் ஆர்வம் மின்னியதைக் கண்டவன்,

“உனக்கும் மார்ச் 10 தான் பிறந்தநாளா?” என்று வினவினான்.

“ம்ம்ஹ்ம்ம்.. எனக்கில்லை.. என் அம்மாவுக்கு.. சூப்பர்ல ரவீன்? உனக்கும் அம்மாவுக்கும் ஒரே நாளில் பெர்த்டே ..சோ உன் பிறந்தநாளை நான் மறக்கவே மாட்டேன்.. உன் வீட்டு ஃபோன் நம்பர் கொடு.. உன் பெர்த்டேக்கு நான் விஷ் பண்ணுவேன்!” என்று அவனிடமிருந்து வாங்கிக் கொண்டவள், தான் சொன்னது போலவே வருடா வருடம் தவறாது விஷ் பண்ணினாள். ரவீனின் 25 ஆவது வயது வரை பார்கவியின் பிறந்தநாள் வாழ்த்து ரவீனை வந்தடைந்தது. அதன்பின் திருமண வாழ்க்கையில் நுழைந்தவள், தன் நண்பனை மறந்துவிட்டாளா? அல்லது நினைப்பதை குறைத்துக் கொண்டாளா? என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

வீனின் நினைவுகளை அசைப்போட்டவளுக்கு, அவர்களது முதல் சண்டை ஞாபகத்திற்கு வந்தது. அதுவே முதல் சண்டை என்றாலும், அந்த சண்டை தான் அவர்களது நட்பை இன்னும் வலுவாக்கியது எனலாம். மீண்டும் அந்த நாளின் நினைவிற்குள் பயணித்தாள் பார்கவி.

“ரவீன்..”

“என்ன பவி?”

“ உனக்கொரு குட் நியூஸ் சொல்லவா?”

“ சொல்லு என்ன குட் நியூஸ்?”

“இன்னைக்கு நமக்கு லன்ச் ப்ரேக் முடிஞ்ச பிறகு எந்த க்லாஸும் நடக்காதாம்!”

“ஹேய் நிஜமாவா? உனக்கு எப்படி தெரியும?”

“ நான் காலையிலேயே ரேணுகா டீச்சரை பார்த்துட்டேனே! அவங்க தான் என்கிட்ட இந்த கேள்விகளை எல்லாம் போர்ட்ல எழுதி எல்லாரையும் காப்பி பண்ண சொல்ல சொன்னாங்க.. கேள்விக்கு எல்லாம் பதிலும் எழுதி வைக்கனும்னு சொல்லி இருக்காங்க.. மண்டே செக் பண்ணுவாங்க..”

“மண்டேயா? அப்போ நாளைக்கும் டீச்சர் வர மாட்டாங்களா?” என்று ரவீன் ஆர்வமாக கேட்கவும்,

“யெஸ்” என்றாள் பார்கவி.

“ ஆனா, லன்ச் முடிஞ்சு மியூசிக் க்லாஸ் இருக்கே? சுபாஷினி டீச்சருமா வரல? அவங்களை நான் பார்த்தேனே?”

“ ஹா ஹா மியூசிக் க்லாஸ் எப்பவுமே ஜாலியா தானே இருக்கும்.. பாட்டுத்தானே பாடுவோம்? இதுல என்ன இருக்கு ?”என்று கேட்ட பார்கவி, இப்போதே லன்ச் ப்ரேக் முடிந்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தாள்.

எப்போதும் புத்தகமும் கையுமாய் இருப்பவள், ரவீன் வந்தபிறகு கொஞ்சம் இலகுவாய் மாற ஆரம்பித்திருந்தாள். ரவீன் தனது கலகலப்பான பேச்சினால் மற்ற நான்கு தோழிகளிடமும் நண்பனாகி விட்டிருந்ததால் அறுவருமே எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள்.

லன்ச் ப்ரேக்கிற்கு முன்னால் நடந்த வகுப்பு முடிந்ததுமே உற்சாகமானான் ரவீன்.

“ஹையா.. இதுக்குமேல படிக்க வேணாமே!” என்று அவன் ஆர்ப்பரிக்கவும்,

“ஆனால், ரேணுகா டீச்சர் கொடுத்த பாடம் எழுதனும்ல?”என்று பார்கவி சொல்லவும்,

“எனக்காக நீ எழுதி தர மாட்டியா பவி?”என்று பாவமாய் கேட்டான் ரவீன். அவனது பழைய அஞ்சு காசு முகத்தை பார்த்தாலே பார்கவிக்கு மனம் உருகிவிடும்.

“ சரி உன் புக் கொடு.. நான் இப்போவே எழுதி தரேன்.. எனக்கு பசிக்கல.. நான் கேண்டீன் போகல!”

“ ஹேய் .. நீ ஏன் ஒழுங்காவே சாப்பிட மாட்டுற? உன் அம்மா  கிட்ட சொல்லுறேன் இரு.. ரிசர்ஸ் டைம்ல க்லாஸ்ல இருக்க கூடாது பவி..”

“அது எனக்கு தெரியாதா? நான் லைப்ரரி போறேன்”என்று பார்கவி சொல்லவும்,

“ சரி நான் உனக்கு ப்ரெட் ஏதாவது வாங்கிட்டு லைப்ரரிக்கு வரேன்” என்று கூறியவன் சிட்டாய் பறந்துவிட்டான். இதுதான் ரவீனின் குணம். எல்லாருக்கும் அன்பினை வழங்கிடுவான். அதுவும் தன்னிடம் காட்டப்படும் அன்பினை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பான்.

லன்ச் வரை உற்சாகமாக இருந்த பார்கவி, வகுப்புக்கு வந்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ரவீன் புத்தகப்பையோ, புத்தகங்களோ எதுவுமே அங்கில்லை.

“ கவி, ரவீனை பார்த்தியா ? வீட்டுக்கு போயிட்டானா? என்னாச்சு?”என்று பதட்டமாய் பார்கவி கேட்க,

“ ஹா ஹா ரவீனா? அங்கே பாரு!’ என்று கைக்காட்டினாள் பார்கவியின் தோழி கவிதா.

அன்று சதீஷின் பக்கத்தில் அமரும் மாணவி விடுப்பு எடுத்ததினால் ரவீன் அந்த இடத்தில் அமர்ந்திருந்தான். கோபம்! ஏன் என்றே புரியாத கோபம் தலைக்கேறியது பார்கவிக்கு. தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் போய் அங்கு உட்கார்ந்து கொண்டான் என்ற கோபம் ஒரு புறம், நண்பர்களுடன் விளையாடலாம் என்று நினைத்த திட்டம் உடைந்துவிட்ட ஏமாற்றம் மறுபுறமென ரவீன் மீது பார்கவிக்கு கோபம் கோபமாய் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.