(Reading time: 24 - 48 minutes)

துவும் பேசாமல் புத்தகப்பையை துலாவியவள், வழக்கம் போல கதை புத்தகம் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். பார்வை புத்தகத்தின் மீது இருக்க, விழிகளில் மட்டும் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. சட்டென துடைத்துக் கொண்டாள். பள்ளியில் படிக்கும்போது இது ஒரு சங்கடம்! கொஞ்சம் அழுதாலே, அருகில் உள்ள மாணவர் மாணவியர் அதைக் கண்டு கொண்டால், உடனே ஆசிரியரிடம் சொல்லி விடுவார்கள்.

முடிந்த அளவு புத்தகம் படிப்பது போல நடித்தவள், ரவீனை என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அப்போதுதான் சற்று முன் தான் அவனுக்கு பாடம் எழுதி தந்த புத்தகம் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டவள், விடுவிடுவென நடந்து வந்து அவன்முன் நின்றாள்.

“ என்ன பவி?”

“ உன் புக்!”

“ எழுதிட்டியா? தேங்க்ஸ் பவி..” என்று ரவீன் புன்னகைக்கவும் பதில் பேசாமல் திரும்பி போனாள்.

“பவி.. பவீ.. பவீ” என்று ரவீன் கூப்பிடுவது காதில் கேட்டது. இருந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள். ஆனால் மனதிற்குள் சின்ன மகிழ்ச்சி. தான் கோபமாய் இருப்பதை அவனுக்கு உணர்த்திவிட்டோம் என்ற திருப்தி தந்த மகிழ்ச்சி அது.

தோழியின் கோபத்தின் அர்த்தம் புரியாமல் அவளைத் தேடி போனான் ரவீன்.

“ பவி ஏன் பேச மாட்டுற?”

“..”

“பவி..”

“ப்ச்ச் .. நான் புக் படிக்கணும்.. போ.. நீ போயி சதீஷ் கூட பேசு ..!” என்று கோபமாய் முறுக்கிக் கொண்டாள். சதீஷும் ரவீனை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல, “மவனே உனக்கு நாளைக்கு இருக்கு!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் பார்கவி. மறுநாள் அவளுக்கு சாதகமாகத்தான் அமைந்தது.

றுநாள், ரவீனுக்கு முன்பதாகவே வகுப்பறைக்கு வந்துவிட்டாள் பார்கவி. அந்த வகுப்பில் மாணவர்களின் மேஜைகள் இரண்டிரண்டாய் சேர்த்து வைத்து அடுக்கப்பட்டிருக்கும். ரவீனுடன் சேர்ந்திருந்த தனது மேஜையை பிரித்து வைத்துக் கொண்டாள் பார்கவி. தங்களுக்கு முன்னால், பின்னால் அமர்ந்திருக்கும் தோழிகளிடமும், கொஞ்ச நேரம் ரவீனுடன் பேச கூடாது என்று சொல்லி திட்டம் போட்டு வைத்திருந்தாள் அவள்.

அந்த கொதிக்கும் எரிமலையின் கண்களில் பனிமழைச்சாரலாய் வந்து நின்றான் ரவீன். அவனது ஸ்னேகமான புன்னகை அவளையும் புன்னகைக்க வைக்க, சட்டென முகத்தை திருப்பி கொண்டாள் பார்கவி.

தன் இடத்தில் அமர்ந்த ரவீன், பார்கவி அவளது மேஜையை பிரித்து நகர்த்தி வைத்திருப்பதை கவனித்தான். தான் அவளுக்காக வாங்கி வந்த சாக்லெட்டை அவள் மேஜை மீது அவன் வைத்தான்.

ஒரு சாக்லெட்டுக்கெல்லாம் அசரும் ஆளா அவள்? அந்த சாக்லெட்டை அவன் மேஜையில் வைத்தாள். மீண்டும் அது பார்கவியின் மேஜைக்கு சென்றது. இப்படியே கொஞ்ச நேரம் அந்த சாக்லெட்டை இருவரும் படாதபாடு படுத்தினர். ஒருவழியாய் ரவீன் தன் மேஜை மீது வைத்த சாக்லெட்டை தொடாமல் அதை அப்படியே வைத்து விட்டாள் பார்கவி.

மற்ற தோழிகளிடம் பேச முயற்சித்தான் ரவீன். ஆனால் பார்கவியின்  பேச்சுக்கு கட்டுப்பட்டு யாருமே பேசவில்லை அவனுடன். இன்றும் அவர்களது வகுப்பு ஆசிரியர் வர மாட்டார் என்ற மகிழ்ச்சி கூட அவனிடமிருந்து மறைந்து விட்டது. அவர்களது வகுப்பு ஆசிரியை கற்றுக் கொடுக்கும் பாடம் அறிவியல்.

சரியாய் அறிவியல் பாடம் நேரத்தில் எழுந்து எங்கேயோ கிளம்ப எத்தனித்தாள் பார்கவி.

“பவி.. பவி..”

“என்ன ரவீன்?”

“ எங்க போற?”

“ லைப்ரரி..ஏன்?”

“அங்க உனக்கு இப்போ என்ன வேலை? நாம கேம் விளையாடலாமா?” . தோழி தனக்கு பதில் அளித்து விட்ட சந்தோஷத்தில் அவன் உற்சாகமாய் கேட்கவும்,

“ விளையாட்டா என் கூடவா? அதான் சதீஷ் இருக்கானே? நீ அவன்கூட விளையாடு” என்று கோபமான குரலில் பார்கவி சொல்லவும்தான் ரவீனுக்கு பார்கவியின் மனநிலை புரிந்தது. தான் சதீஷுடன் நேற்று விளையாட சென்றதின் விளைவுதான் இது என்று புரிந்து கொண்டவன், தன்னிலை விளக்கம் கொடுக்க நினைக்க, பார்கவி எப்போதோ அங்கிருந்து சென்றிருந்தாள்.

எப்போதடா அடுத்த பாட வகுப்பு ஆரம்பிக்கும் என்று காத்திருந்தான் ரவீன். பார்கவியின் கோபத்தை உணர்ந்து கொண்டவன், அன்று சதீஷின் இடத்திற்கு போகாமல், மேஜை மீது தலை கவிழ்த்து அப்படியே படுத்திருந்தான். லைபரரியிலிருந்து வந்தவளின் கண்களில் அவன் சோகமாய் படுத்திருந்த காட்சிதான் முதலில் பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.