(Reading time: 24 - 48 minutes)

ட்டமும் நடையுமாய் அவன் அருகில் அமர்ந்தவள் தொண்டையை செருமிக் கொள்ளவும், இப்போது முறுக்கி கொள்வது ரவீனின் முறையானது.

“ பேசலனா போடா.. அடுத்து தமிழ் க்லாஸ் .. உனக்கு இருக்குடா”என்று வாய்விட்டே சொல்லி வில்லத்தனமாய் சிரித்தாள் பார்கவி. ரவீனுக்கு தமிழ் உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக வராது. அதுவும் ஆசிரியர் படிக்க சொல்லும்போது பதட்டத்தில் தப்பு தப்பாக படித்து அனைவரின் கேலிக்கும் ஆளாகி விடுவான் ரவீன். அதனாலேயே பார்கவி மெல்லிய குரலில் படிக்க, அதை அப்படியே திருப்பி உரக்க படித்து தப்பித்து விடுவான் ரவீன்.

தன் தோழியின் மிரட்டலைக் கேட்டு சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டான் ரவீன். மற்ற தோழியரும், பார்கவி அவனுடன் பேசியதை கவனித்துவிட்டு அவனுடன் பேசத்தொடங்கினர்.

“ ஏன் ரவீன் சோகமா இருக்க?” என்று கேட்டாள் சந்திரிகா.

“ நீங்க எல்லாரும் தான் என்னை வெறுத்துட்டீங்களே!” என்று சோகமாய் சொன்னான் ரவீன்.

அதை நினைத்து பார்த்த பார்கவி பெரிதாய் புன்னகைத்தாள். ரவீனின் அப்பாவித்தனமான முகமும், அதில் அவன் பிரதிபலித்த சோகமும், அதே சோகத்தில் அவன் சொன்ன அந்த வசனமும் அவளால் தன் ஆயுள் முடியும்வரை மறக்கவே முடியாது. மீண்டும் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

வீன் அப்படி சோகமாய் சொல்லியும் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள் பார்கவி. அவள் எதிர்ப்பார்த்தது போலவே அன்று ஒவ்வொரு மாணவராய் பாடபுத்தகத்தில் உள்ள வசனங்களை வாசித்துக் கொண்டே வந்தனர்.

தனது முறை வந்தப்போது சமத்தாய் படித்து முடித்த பார்கவி, ரவீன் படிக்கும்போது வழக்கம் போல வசனத்தை மெல்லிய குரலில் சொல்ல அதை அந்த ஆசிரியர் கண்டு கொண்டார்.

“ பவி நான் உன்னை படிக்க சொன்னேனா? ரவீன் நீ படி!” என்று அவர் அதட்டல் போடவும் பதட்டமானான் ரவீன்.

“உ.. உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது?” என்று அவன் படிக்க மொத்த வகுப்பும் சிரிக்க ஆரம்பித்தது. பார்கவிக்குமே கொஞ்சமாய் சிரிப்பு வந்தாலும், மற்றவர் சிரிக்கவும் கோபம்தான் வந்தது. அது எப்படி தன் நண்பனை பிறர் கலாய்க்க முடியும்?

“ரவீன்… அது வட்டமாக இல்லை.. வாட்டமாக.. உங்கள் முகம் ஏன் வாட்டமாக உள்ளது! “என்று உடனே திருத்தினாள். அவள் தன்னிடம் எப்போதும் போல பேசிவிட்ட சந்தோஷத்தில் ரவீன் முகம் மலர்ந்தான். இந்த முறை பிழையில்லாமல் அதை படித்து முடித்துவிட்டு பார்கவியிடம் பேச ஆரம்பித்தான்.

“ பவி.. கோபம் போச்சா?” என்று அவன் கேட்கவும் தனது மேஜையை அவனது மேஜையுடன் இணைத்துக் கொண்டு

“ யெஸ்” என்று சிரித்தாள் அவள்.

“இனிமே நான் சதீஷ் இடத்திற்கு போக மாட்டேன்!” என்று ரவீன் சொல்லவும் அவளுக்குமே என்னவோ போலாகிவிட்டது. ரவீனோ உடனே,

“ ஆனால் இனி அவன் நம்ம இடத்திற்கு வருவான் !” என்றான். அதை ஆட்சேபிக்கவே இல்லை பார்கவி. சொல்லப்போனால்,ரவீனின் இந்த முடிவில் அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

நிகழ்காலத்திற்கு வந்த பார்கவி, அந்த நாளை எண்ணி பெருமூச்சு விட்டாள்.

“நல்ல வேளை அந்த வயசுல, ஜேலசி..பொசசிவ்னஸ் ..ஈகோ இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது எங்களுக்கு .. எத்தனை தடவை சண்டை போட்டிருப்போம் ? ஆனால் ஒரு தடவை கூட யார் முதலில் இறங்கி வருவதுன்னு யோசிச்சதே இல்லை. அதே மாதிரி அந்த வயசில் எங்களுக்கு காதல்ன்னாலும் என்னனு தெரியாமல் இருந்தது.. இல்லன்னா எங்களது நட்பை காதல்ன்னு மத்தவங்க நினைச்சு , அது எங்க மனசையும் பாதிச்சு இருக்கலாம்.. என்னத்தான் இருந்தாலும் பள்ளி கால நட்பு போல அழகான உறவு இருக்கா என்ன?” என்று சொல்லிக் கொண்டாள் பார்கவி.

அந்த முதல் சண்டைக்குப்பின் ரவீன், சதீஷ், பார்கவி மூவருமே இணைப்பிரியாத நண்பர்களாய் இருந்தனர். இருப்பினும் அருகருகே இருப்பதனாலோ என்னவோ ரவீன் பவியின் நட்பு அதிக வலுவுடன் இருந்தது.

ஒருவருக்கொருவர் பாடம் சொல்லி தருவது. இருவரின் பெற்றோரிடமும் அன்பு பாராட்டுவது , முடியை பிடித்து இழுத்து சண்டை போடுவது, ஒரே பாட்டில் நீரை பகிர்ந்து குடிப்பது..

ஒரு தடவை, தனது பென்சிலை காணவில்லை என்று தேடிய ரவீன் பவியிடம் பென்சில் இரவல் கேட்க, “ என்கிட்ட ஒன்னுதான் இருக்கு ரவீன்.. நான் எழுதனும்” என்றாள். அவள் கையில் இருந்த பென்சிலை எடுத்தவன், நாம ரெண்டு பேரு ஆனா பென்சில் ஒன்னுதானே இருக்கு?  உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்” என்றபடி அந்த பென்சிலை உடைத்தே விட்டிருந்தான் ரவீன். இதுபோல அவர்கள் உரிமை எடுத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டவை எத்தனை எத்தனையோ!

ஐஸ்கட்டியை போட்டு விளையாடுவது, வீட்டு சாப்பாட்டை பகிர்வது, அண்மையில் பார்த்த சினிமா படங்களைப் பற்றி பேசுவது இப்படி எத்தனை எத்தனை இனிய நாட்கள். லேசாய் ஆனந்த கண்ணீர் எட்டி பார்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.