(Reading time: 36 - 72 minutes)

முத்துச் செல்வி தானே உன் க்ளாஸ்மேட்! அவங்க அம்மாவா உன் க்ளாஸ் மேட்? அவங்களை பத்தி நீ பேச வேண்டிய அவசியம் இப்போ இல்லை! வகுப்புலே மத்தவங்க பேசினாலும் பேசக் கூடாதுன்னு ஹச். எம் சொன்னாங்கன்னு சொல்லு”

ஆனால், அம்மா இந்த விஷயத்தை அப்படியே விடவில்லை போல! அடுத்த நாளே மற்ற பெற்றோரை கூப்பிட்டு பேசியிருக்காங்க! ஆனா, யாரும் அவங்க பேச்சை கேட்கலை.

“தாயை போல பிள்ளை! நூலை போல சேலை!”,

சொலவடையை சொல்லி,

“அவ கூட சவகாசம் வைச்சு எங்க பிள்ளைங்க கெட்டு கிட்டு போச்சுன்னா எங்களுக்கு தானே கஷ்டமும் நஷ்டமும்!  முடிந்தா அந்த பிள்ளையை வேற ஸ்கூல் போய் சேர்க்க சொல்ல சொல்லிப் பாருங்க!”,

அப்படின்னு சொல்லிட்டாங்க போல!

நடந்தது எதுவுமே எனக்கு தெரியாது! எப்பவும் போல  வீட்டுக்கு வந்ததும், கிரிக்கெட் விளையாட மட்டையை எடுத்துட்டு கிளம்புறப்போ அம்மா வீட்டிற்குள் நுழைந்த வேகமும், இறுகின அவங்க முகத்தையும் பார்த்ததுமே ஏதோ கோபமா இருக்காங்கன்னு புரிந்தது.

“விளையாண்டு வர்றேன்மா”, நைசாக நான் சொல்லி நழுவிடலாம்ன்னு நினைத்தால்,

“பரத்!”, அம்மாவோட கம்பீரக்  குரல் என்னை அப்படியே அவங்க பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது. அம்மா என்னை கூர்மையாப் பார்த்து,

“நாளையில் இருந்து உனக்கு முத்துச் செல்வி தான் ஃப்ரண்ட்! அவ பக்கத்தில் தான் உட்காருற! என் பையனை பார்த்தாவது மத்தவங்க திருந்துறாங்களான்னு பார்ப்போம்!”

ஏதோ சூளுரை போல அம்மா சொன்னது எனக்கு புரியவே இல்லை!!!

என் கவலை எல்லாம் பொம்பளை பிள்ளைங்க பக்கத்தில் போய் உட்கார்ந்தால், அத்தனை பையன்களும் கிண்டல் பண்ணுவாங்களே என்பது தான். அதுவும் இருந்து இருந்தும் அந்த முட்டை கூட! சரியான சண்டைக் கோழி! கோள் மூட்டி!!!

அம்மா இருந்த கோபத்தில் தயங்கி தயங்கி சொன்னேன், “அம்மா பொம்பளை பிள்ளைங்க பக்கம் போனா கிண்டல் பண்ணுவாங்க”

அம்மாவோ அசைந்து கொடுக்கவில்லை. “யார் கிண்டல் செய்தாலும், என்கிட்ட சொல்லு! நான் பார்த்துக்கிறேன்”

அப்படின்னு பேச்சை முடித்துட்டாங்க!

விருப்பமே இல்லாமல் தான் முட்டை பக்கத்தில் போய் அமர்ந்தேன். பாண்டீஸ்வரி ஒதுங்கியதில் இருந்தே அவள் துள்ளலும், விளையாட்டுத்தனமும் ஒடுங்கி தான் போயிருந்தது!

“சும்மாவே என்னை மோசமானவன்னு சொல்றாங்க! இதுல டீச்சர் வேற  உன்னை என் பக்கத்தில் உட்கார வைச்சிட்டா என்ன சொல்வாங்களோ!!”

சண்டை போடுவது போல சொல்லவில்லை! ஒருவித விரக்தி அவள் பேச்சில் தெரிந்தது. அந்த பருவத்தில் அவள் உணர்வுகள் எனக்கு தெரியவில்லை! மோசமானவள் என்ற வார்த்தையிலே நின்றேன்.

“மோசமானவன்னா? உங்க அம்மா ஏன் மோசமானவங்கன்னு சொல்றாங்க?”

அவளிடம் கேட்டேன். இதே போல நிறைய பேச்சுக்கள் அவள் மனதை புண்ணாக்கி இருக்கும் என்பதை அறியாமல் கேட்டேன். கேட்ட நொடியில் அவள் கண்கள் குளமானது.

“அம்மான்னா எனக்கு உசிரு. அவங்களை எதுவும் சொல்லாதே!”

தழுதழுத்தவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர தாள முடியாமல் அழுதாள்!

எனக்கு பாவமாக இருந்தது. சில நொடி எப்படி தேற்ற என்று தெரியாமல் முழித்தேன். பின்,

“வேற வழியில்லை! இனி நான் தான் உன்  ஃப்ரண்ட்! ஹச். எம்மே சொல்லிட்டாங்க! என்  ஃப்ரண்ட் அழுதா எனக்கும் அழுகை வரும்! புண்ணாக்கு அழுதா ரொம்ப நனைஞ்சு போயிடும் பரவாயில்லையா?”

குழந்தை பருவம் தானே! நான் சொல்லவும் அழுகையோடே சிறிது சிரிப்பும் வந்தது அவளுக்கு!

“அழுத பிள்ளை சிரிச்சதாம்! கழுதை பாலை குடிச்சதாம்!”

நான் மேலும் சீண்ட, பழிப்பு காட்டியவளுக்கு அழுகை மறைந்து போனதா.. இல்லை அழுக மறந்து போனாளா தெரியவில்லை! ஆனால், எனக்கு அவளை சமாதானபடுத்து விட்டோம் என்ற நிம்மதி உண்டானது!

அவள் அம்மாவைப் பற்றி நானாக எதுவும் கேட்டதே  இல்லை. அவளும் அதை பற்றி என்னிடம் சொன்னது இல்லை!

எனக்கு வயது கூட கூட முத்துச் செல்வியின் குடும்பப் பின்னணி ஓரளவிற்கு தெரிய வந்தது. தாயார் திருவிழாக்களில் ஆடுபவர் என்றும், அதில் அவ்வளவாக வருமானம் இல்லாததால், குடிகாரத் தந்தை காசுக்காக மனைவியை மற்றவனிடம் அனுப்பி வைப்பான் என்பதும் தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.