(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - அம்மாவின் கோபம் - ஜெயந்தி

sad girl

வான்மதிக்கு எரிச்சலாக வந்து.”சே, எல்லா அம்மாக்களுமே இப்படித்தானோ” என்று தோன்றியது.தன்னுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிய அம்மா, தன்னுடைய எல்லா கஷ்டங்களிலும் தன்னுடன் இருந்தவள், தோழி போல எப்பொழுதும் தன்னுடன் இருந்த அம்மா இவ்வாறு செய்வாள் என்று எண்ணவில்லை.

அம்மாவின் இந்த முடிவு அவளை மிகவும் பாதித்தது.அம்மாவிடம் தன்னுடைய காதலை சொன்னபோதுகூட அவள் மறுப்பாள் என்று தோணவில்லை.காதலை ஏற்காவிட்டால்கூட பரவாயில்லை.அவனை மணந்தால் சொத்தில் பங்கு கிடையாது என்றதுடன் தன் முகத்திலும் விழிக்க கூடாது என்றதுதான் மிகுந்த வருத்தமளித்தது.

மேலும் பணத்துக்காகத்தான் அவன் உன்னை விரும்புகிறான் என்றபோதுதான் தாயின் உள் நோக்கம் புரிந்தது.தானே மகள் மணமகனைத் தேர்ந்தெடுத்ததை அந்த தாயால் தாங்க முடியவில்லை.ஆகவே இல்லாதது பொல்லாததை சொல்லி அவளிடமிருந்து அவனைப் பிரித்து விட்டு இவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் மணக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இனிமேல் என்ன பார்ப்பது.அதுதான் ஏற்கனவே ஒருவனைப் பார்த்திருக்கிறார்களே.அதைப் பற்றிய பேச்சு வந்தபோதுதானே அவள் தன்னுடைய காதலைப்பற்றி கூறியதும்.

உடனே மறுப்பு தெரிவித்தால் மகள் மனதை மாற்றுவது கடினம் என்றதும் சில நாட்கள் கழித்து இவ்வாறு சொன்னால் மகள் மாறிவிடுவாள் என்று அவனைப்பற்றிக்கூறினர்.அதை அவள் நம்பவில்லை எனவும் கடைசியாக சொத்தைக்காட்டி மிரட்டுகின்றனர்.

அவள் மற்றும் அவளுடைய காதலனுக்குமே இவர்களுடைய பணம் தேவையில்லை.இவ்வளவு நடந்தப்பிறகு இவர்களைப் பார்க்கவே வான்மதிக்குப்பிடிக்கவில்லை.

எனவே தன் காதலனைப் பார்க்க சென்றாள்.அவனோ வேறு கூறினான் .

“நம்முடைய பெயர் பொருத்ததைப்பார்.வாண்மதி வாணரசன்.நாம் இருவரும் ஒருத்தருக்காகவே இன்னொருத்தர் என பிறந்தவர்கள்.எனவே நம்மை யாரும் எப்போதும் பிரிக்க முடியாது.பெற்றோர் ஆசிர்வாதத்துடன்தான் நம் இல்வாழ்க்கை தொடங்க வேண்டும்.அதுவரை சற்றுப் பொருமையாக இருப்போம்” என்று.

அவனுடைய இந்த குணம்தான் அவனிடம் அவளை ஈர்த்ததே.தன்னைப்பற்றி தவறாக கூறினாலும் அவர்களுக்கு அவன் கொடுத்த மரியாதையை எண்ணி எப்பொழுதும்போல பெருமிதம் அடைந்தாள்.

ஆனால் என்ன செய்வது அந்த பெருந்தன்மை தன் தாயிடம் இல்லையே.எனவே அவனை கன்வின்ஸ் செய்தாள்.வெகுவிரைவிலேயே அவர்களுடைய திருமணமும் அவனுடைய பெற்றோர் முன்னிலையில் மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.இதோ அவளுக்கு அருகில் அழகான பெண் குழந்தை.ஏற்கனவே எதற்கெடுத்தாலும் மதி மதி என்பவன் குழந்தை உண்டானது தெரிந்த பிறகு உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

குழந்தையைப் பார்த்ததும் அவனுடைய மகிழ்ச்சியைப்  பார்த்ததும் பெற்றோரை பிரிந்து வந்த சோகமே அவளுக்கு மறந்து போயிற்று. 

“குழந்தையை எடுத்து கொண்டு போய் அவர்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி வரலாமா” என்ற வாணரசனை விநோதமாகப் பார்த்தாள்.அவன் தொடர்ந்தான்.”இதோ பார் மதி அவர்களுக்கு இருப்பது நீ ஒரே குழந்தை.அன்றைக்கு ஏதோ கோபத்தில் அவர்கள் அவர்கள் அவ்வாறு நடந்திருக்கலாம்.அதற்காக அவர்களுடைய ஒரே பேத்தியை காட்டாமல் இருப்பது தவறு” என்று.

அவளுக்குமே அவளுடைய தாய் தந்தையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.எனவே மறுப்பு சொல்லாமல் ஒத்துக்கொண்டாள்.

மறுபடியும் அவளுக்கு ஏமாற்றமே.அவளே தன்னுடைய பிள்ளை இல்லை எனும்போது பேத்தி எங்கிருந்து வந்தாள் என கேட்டது மட்டுமின்றி வாசலை திறக்கக்கூடவில்லை.

அன்று முழுவதும் அழுததில் மறுநாள் அவளுக்கு நல்ல ஜுரம் வந்தது.சின்ன தலைவலி என்றால் கூட விழுந்து விழுந்து கவனிக்கும் அவளுடைய கணவன்கூட அவளை கவனிக்காது ஏதோ யோசனையுடனே இருந்தான்.அவனுக்குமே அது பெரிய அதிர்ச்சிதானே என்று அவனுக்காக வேறு கவலை கொண்டாள்.மறுநாளும் அது தொடரவே முதன்முறையாக சிறிது அச்சம் உண்டாயிற்று.

 அவளுடைய அச்சத்தை அதிகரிக்குமாறு முதன்முறையாக கோபப்பட்டு திட்டினான்.நாட்கள் செல்ல செல்ல திட்டு அடி, உதையாக மாறியது.காரணம் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு அவள் அடி முட்டாளில்லையே.அவளுடைய பெற்றோர்மேல் அவன் காட்டிய மரியாதை பணத்திற்காகத்தான் என்று.

குழந்தையைப் பார்த்து மனம் மாறுவார்கள் என்று நினைத்திருக்கிறான்.அது நடக்கவில்லை எனவும் அவனுடைய உண்மையான முகத்தைக் காட்டிவிட்டான்.காலம் கடந்து ஞானம் வந்து என்ன பயன்.தன்னுடைய தலைவிதியை நொந்தபடியே வாழலானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.