(Reading time: 31 - 62 minutes)

ர்மதாவும் செல்வாவும் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த அதே நேரம், செல்வா சொன்ன ரெஸ்ட்டாரன்ட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் யமுனா ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தாள்.. தன் ஹாஸ்டல் தோழி ஒருத்தி, இங்கே நிறைய கலெக்‌ஷன்ஸ் இருப்பதாகவும், அதே சமயம் விலையும் ஓரளவுக்கு பரவாயில்லை எனவும் கூறியிருந்ததால், எப்போதும் ஷாப்பிங் போகும் இடத்தை விட்டு இந்த இடத்திற்கு வந்திருந்தாள். தீபாவளிக்காகவென்று இல்லாமல், தினசரி தேவைக்கான சேலைகள் எடுப்பதற்காக வந்திருந்தாள்..

நர்மதாவின் நட்பு கிடைப்பதற்கு முன்னர் எப்படியோ, ஆனால் நர்மதாவின் நட்பு கிடைத்தப் பின் தனியாக ஷாப்பிங் செய்ததே இல்லை அவள்…. இப்போது தனியாக சேலைகள் தேர்ந்தெடுப்பதிலேயே நேரத்தை செலவிட்டவள், வெளியே வரும்போது மதிய நேரத்தை நெருங்கிவிட்டது. பள்ளியில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், பயிற்சிக்காக சில ஆசிரியைகளும், மாணவர்களும் இன்று பள்ளிக்கு வந்திருக்கின்றனர், யமுனாவோ மதியத்திற்கு மேல் வருவதாக சொல்லியிருந்தாள். அதனால் மதிய உணவை இங்கு எங்காவது முடித்துக் கொள்ள நினைத்தாள்.

நர்மதாவும் இவளும் சேர்ந்து சாப்பிடும் பகுதி இங்கிருந்து தூரமாக இருந்தது… அதனால் அருகில் இருந்த ரெஸ்ட்டாரன்டிலேயே சாப்பிடலாம் என்று நினைத்தவள், அந்த ரெஸ்ட்டாரன்ட்டை நோக்கிச் செல்ல, அவளை ஒட்டினாற் போல் வந்து நின்ற பைக்கை பார்த்து அதிர்ந்து அந்த பைக்காரனை கோபமாக முறைக்க நினைத்து அவனை பார்த்தவளின் கண்கள் ஆச்சர்யத்தை காட்டியது..

ஒரு வசீகர புன்னகையோடு “ஹாய்” என்றான் இளங்கோ..

அவனை கடைசியாக பார்த்தது நர்மதாவின் திருமணத்தன்று தான், அத்தோடு இப்போது தான் பார்க்கிறாள்… கிட்டத்தட்ட இத்தனை நாள் அவனை காண ஏங்கிக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்… நர்மதா உடன் இருந்த போதாவது ஏதாவது காரணம் சொல்லி, அடிக்கடி இளங்கோவை பார்க்க இவளை கூட்டிச் செல்வாள்… இப்போது அப்படி எந்த காரணமும் யமுனாவிற்கு தோன்றவில்லை..

தினமும் வாட்ஸ் ஆப்பில் அவனுடைய காலை வணக்கமும், இரவு வணக்கமும் இருக்கும்… அதை தாண்டி இவளிடம் அவன் எதுவும் பேச முயற்சித்ததில்லை.. காதல் என்ற பெயரில் தினமும் இவளை அவன் தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் அவனிடம் இவளுக்கு பிடித்த விஷயமே.. இருந்தும் சில சமயம் அப்படி சில தொந்தரவுகளை செய்தால் தான் என்னவாம்..?? என்று கூட அவளுக்கு தோன்றியிருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் அவன் ப்ரொஃபைலில் உள்ள அவனது புகைப்படத்தை அடிக்கடிபார்த்துக் கொள்வாள்.

“ஹலோ டீச்சர்..” அவளின் முகத்திற்கு நேராக கைக்காட்டி கூப்பிட்டதும் தான் நடப்பிற்கு வந்தாள்….

“என்ன யமுனா தீபாவளி ஷாப்பிங்கா..??”

“ம்ம் திபாவளிக்குன்னு இல்ல… டெய்லி யூஸ்க்கு தான் சில சாரிஸ் எடுக்க வந்தேன்.. நீங்களும் ஷாப்பிங்க்கு தான் வந்தீங்களா இளங்கோ..?”

“ம்ம் ஆமாம்.. தீபாவளிக்கு ஊருக்குப் போறேன் இல்லையா..?? அதான் அப்பாக்கும், அண்ணா பொண்ணுக்கும் ட்ரஸ் எடுக்க வந்தேன்.. நீ ரெஸ்ட்டாரன்ட்க்குள்ள தானே போற.. நானும் உன்னோட ஜாயின் பண்ணிக்கலாமா?? நீ எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டியே..”

“எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… தனியா சாப்பிடனுமேன்னு யோசிச்சேன்… நீங்க கூட சாப்டறதுல சந்தோஷம் தான்..”

“தேங்க் யூ..” என்றவன் அங்கே ஒரு ஓரமாய் தன் பைக்கை நிறுத்தியதும், இருவரும் உள்ளே சென்றார்கள்… அங்கே நால்வர் உட்காரும்படி போட்டிருந்த இருக்கைகளில் எதிரெதிரே உட்கார்ந்தனர்.. அந்த ரெஸ்ட்டாரன்ட்டில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்ததால், உடனே சர்வர் இவர்கள் அருகே வந்தார்.

“என்ன சாப்ட்ற யமுனா..??”

“எனக்கு ஒரு சிக்கன் ப்ரைட் ரைஸ் மட்டும் போதும்….”

“ரெண்டு சிக்கன் ப்ரைட் ரைஸ் எடுத்துட்டு வாங்க.. வேற ஏதாச்சும் வேணும்னா அப்புறம் ஆர்டர் கொடுக்கிறேன்..” என்று சர்வரிடம் சொல்லி அனுப்பி வைத்தான்.

“அப்புறம் யமுனா.. நர்மதாக்கிட்ட பேசுறியா.?? அவ நல்லா இருக்காளா?? அவ மேரேஜ் லைஃப் எப்படி போகுதாம்..??”

“என்ன எல்லாம் என்கிட்ட கேக்கறீங்க..?? நீங்க நர்மதாக்கிட்ட பேசறதில்லையா?? நர்மதாக்கு போன் பண்ணி விசாரிக்கலாம் இல்ல… அவளும் அப்படித்தான் இளங்கோ அண்ணாவ பார்த்தியா..?? எப்படி இருக்கார்னு என்கிட்ட கேக்கறா?? ஆமாம் உங்க பாசமலர் படம் இப்போல்லாம் ஓட்டறதில்லையா??” என்று கேளியாக கேட்டாள்.

“ஹே நர்மதாக்கு இப்போ மேரேஜ் ஆயிடுச்சு… அதுவும் அவ மேரேஜ் எப்படி நடந்துச்சுன்னு உனக்கு நான் சொல்லியா தெரியனும்… இப்போ அவக்கிட்ட முன்ன மாதிரி பேசறதயோ.. இல்ல மெசெஜ் செய்யறதையோ அவங்க வீட்ல எப்படி எடுத்துக்குவாங்களோ?? அதுவும் மேரேஜ் அன்னைக்கு நர்மதா, அவளோட ஹஸ்பண்ட்க்கு என்ன அறிமுகப்படுத்தியும் வைக்கல.. அதான் போன்ல்லாம் செய்யறதில்ல..” என்று தன்பக்க விளக்கத்தை கூறினான்..

உண்மையிலேயே அவர்கள் துஷ்யந்த் வீட்டார் என்றாலும், துஷ்யந்த் அளவுக்கு அவனுக்கு அங்கு யாரையும் தெரியாது.. இதில் கங்கா விஷயத்தை பொறுத்தவரை, துஷ்யந்தின் தாய் மற்றும் அத்தையின் மேல் இவனுக்கு வருத்தம் கூட, என்னவோ கங்கா மீது மட்டும் தான் தவறு என்பதுபோல் அவர்கள் இருவரும் நடந்துக் கொள்கிறார்கள்… இதில் அவர்கள் வீட்டுக்கு மருமகளாக போயிருக்கும் நர்மதாவைப் பற்றி அவர்கள் எதுவும் தவறாக நினைத்து விடக் கூடாதென்பதால் தான் அவன் நர்மதாவிடம் இப்படி நடந்துக் கொள்கிறான்… நர்மதா தன்னை புரிந்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. யமுனாவிடம் அதையெல்லாம் விளக்கி சொல்ல தோன்றவில்லை..

“ம்ம் நீங்க சொல்றது புரியுது.. ஆனா கோமதி அம்மாவும் சரி, செல்வாவும் சரி அப்படிபட்டவங்க இல்ல… ரொம்ப ப்ரண்ட்லி, அதனால அப்படில்லாம் நினைக்க வேண்டாம்.. நர்மதா நல்லா தான் இருக்கா.. அவளுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை… இப்போ எப்படியோ, ஆனா அவ செல்வாக்கூட இருந்தா தான் சந்தோஷமா இருப்பா..” என்றதும், அவன் புரியாத பார்வை பார்த்தான்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க… அன்னைக்கு நான் நர்மதா லவ் பத்தி ரெஸ்ட்டாரன்ட்ல பேசினேன் இல்ல… அது வேற யாருமில்ல, இந்த செல்வா தான்… முழுப்பேரு ரிஷபசெல்வன்.. இந்த விஷயத்தை நர்மதா எனக்கே கல்யாணத்துக்கு முன்னாள் தான் சொன்னா.. செல்வாவ பார்த்ததுல இருந்து ரொம்ப குழப்பத்தோட இருந்தா.. நல்லவேளை துஷ்யந்தே ஒரு நல்ல முடிவா எடுத்தாரு..  இல்ல நர்மதாக்கு அந்த கல்யாணம் சந்தோஷத்தை கொடுத்திருக்காது…” என்று அவள் சொன்ன விஷயங்கள், இளங்கோவிற்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது.. ஏற்கனவே இந்த கங்கா செய்த சொதப்பல்கள் ஒருப்பக்கம் என்றால், நர்மதா காதலித்தது செல்வாவை எனும்போது, இந்த திருமணம் மட்டும் நடந்திருந்தால், நினைத்துப் பார்த்து அதிர்ந்தான்.

“செல்வாவுக்கும் நர்மதா மேல காதல் இருக்குன்னு தான் எனக்கு தோனுச்சு… அதான் நர்மதாவை சமாதானப்படுத்தி, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்..” என்றுப் பேசிக் கொண்டே வாசல்பக்கம் பார்த்தவள் திகைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.