(Reading time: 16 - 32 minutes)

இனிமேல் உன்னை பிரியவே மாட்டேன் என்று அணைப்பினாலேயே உணர்த்தினான் தமிழ். அவனது அணைப்பினில் யாழினி உருகி நின்ற நொடி அவளை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான் தமிழ்.

“ப்ச்ச்..இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?” லேசாக மூண்ட எரிச்சலில் அவள் கேட்க,

“ஹேய் லூசு”என்று அவள் தலையில் செல்லமாய் கொட்டியவன்,

“பூ நசுங்கிருச்சு பாரு”என்று மார்போடு அணைத்திருந்த பூங்கொத்தை காட்டினான். நாணத்தால் அந்தி சூரியனையும் தோற்கடித்து சிவந்து போனாள் யாழினி.

“ஐ லவ் யூன்னு சொல்ல வரல.. அதை வாழ்ந்து காட்டி புரிய வைக்கிறேன்.. ஐ மிஸ்யூன்னு சொல்லத்தான்.. அதுக்குள்ள நீ அவசரப்பட்டு..நான் கட்டிபுடிச்சு..இங்க பாரு”என்று அவன் பூங்கொத்தை பார்க்க, சிரிப்புடன் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் யாழினி.

ஒரு வழியாய், ஊடல் கொண்ட நாட்கள் தந்த கோபங்களை யாழினி எடுத்து சொல்ல, தமிழும் அவளை தன்  பாணியில் கொஞ்சி சீர்  செய்தான்!

நாட்கள் வெகு அழகாய் நகர்ந்தன. மோகனின் மகள்தான் யாழினி என்று தெரிந்தப்பின் தமிழின் தந்தைக்குமே அவர்கள் இணைவதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல்போனது! தனது காதலை தமிழ் ஏற்றுக் கொண்டான். தன் தந்தை மற்றும் புகழுமே இதில் அகமகிழ்ந்து சம்மதித்தனர். அதனால் எந்தவொரு மனச்சுமையும் இன்றி உற்சாகமாக படித்தாள் யாழினி.

காதல், அவளது எதிர்க்காலத்திற்கு எப்போதும் தடையாகிவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருந்தான் தமிழ். அவனது எண்ணத்திற்கு புகழும் துணை நின்றான். ஒரு வழியாக படிப்பை நல்லபடியாக முடித்து குமரன், புகழ், யாழினி மூவருமே பட்டம் பெற்றனர்.

அதன்பின் தமிழ் – யாழினி இருவருக்கும் தடபுடலாக நிச்சயதார்த்தை நிகழ்த்தினர் இரு வீட்டாரும்.

திருமணத்திற்கு சரியாக இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் தான் யாழினி- தமிழின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழத் தொடங்கின.

ன்றிரவு தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து தமிழுடன் பேசிக்கொண்டிருந்தாள் யாழினி. இன்னும் ஓரிரு தினங்களில் பௌர்ணமி இரவு வந்துவிடும். வெண்ணிலாவெனும் தன் மகள் பூரணம் ஆகவிருக்கும் மகிழ்வில் வானமே வெளிச்சமாக ஜொலித்தது.

“ம்ம் கல்யாணத்து தேதி பார்த்து பத்திரிக்கையும் ரெடி ஆச்சு முட்டைக்கண்ணி..” கிறங்கும் சொன்னான் தமிழ். அவன் தன்னை முட்டைக்கண்ணி என்றால் அவனை “கருவாயா!”என்று செல்லமாக அழைப்பது அவளின் வழக்கம்.

“ப்ச்ச்.. இதுல என்ன பிரமாதம் இருக்கு கருவாயா?” சலிப்பு தட்டிய குரலில் கேட்டாள் யாழினி.

“அடிப்பாவி..என்னடீ இது? என்னைவிட நீதான் கல்யாணத்துல ஆர்வமா இருந்த..இப்போ வேண்டா வெறுப்பா பேசுற?”

“ஹா ஹா.. வேண்டான்னு நினைக்கவுமில்லை.. வெறுக்கவுமில்லை.. ஆனா இந்த கல்யாணம் சிஸ்டம் ரொம்ப போரு தமிழ்..”

“ஓஹோ.. என்ன போரு கண்டுட்டீங்க..”

“சொல்லுறேன் கேளுங்க.. இன்னும் ரெண்டு மூணு வாரத்துல எங்களுக்கு கல்யாணம் குடும்பத்தோட வந்துருங்கன்னு மத்தவங்கள கூப்பிடும்போது வரவங்களுக்கு ஆர்வமா இருக்கும்.. ஆனா நமக்கு அப்படியா?”

“..”

“அடுத்து என்ன நடக்கும்னு புரியாத சஸ்பென்ஸ் தான் வாழ்க்கை..அந்த மாதிரி கல்யாணமும் ஒரு சஸ்பென்ஸா இருக்கனும்ல.. நாளைக்கு நமக்கு கல்யாணம்னு தெரிஞ்சு ஒவ்வொரு நொடியும் பதட்டமா உணருறது என்ன இருக்கு?”

“ஆஹான்..”

“அடுத்த ஒரு மணி நேரத்துல நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு தெரியாமல் நான் பிங்க் கலர் நைட்டி போட்டுகிட்டு நிலாவை ரசிக்கிறதுதான் த்ரில்லு.. மேளதாளம், பூ, கூட்டம், வாழ்த்துகள்னு எதை கவனிக்கனும் , எதை விடனும்னு குழம்பாமல், தமிழ் தமிழ் தமிழ் மட்டும்தான் என் கண்ணிலும் கருத்திலும்னு ஃபீல் பண்ணுறதுதானே இதமாக இருக்கும்?” ரசனையாய் மொழிந்தாள் யாழினி.

“ஓஹோ..சோ நமக்கு எப்போ கல்யாணம்னு தெரியாமலே உனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்.. ரைட்டா?” சிரிப்புடன் கேட்டான் தமிழ்.

“ஆமா”

“சரி இப்போ டூ லேட் ஆச்சு.. நம்மளோட அறுபதாம் கல்யாணத்தை கண்டிப்பா நீ ஆசைப்பட்ட மாதிரி பண்ணுறேன்..ஓகேயா?”

“ஒரு ஆறுதலுக்காவது உனக்காக இப்பவே பண்ணுறென்னு சொல்லுறீங்களா தமிழ்?”

“முடியாத விஷயத்துக்கு நான் விளையாட்டுக்கு உறுதி தர மாட்டேன்னு தெரியாதா முட்டைக்கண்ணி?”

“ ஆமா இவரு முத்து படத்துல வர்ற ரஜினி, கொடுத்த வாக்கையும் பொருளையும் திருப்பி எடுக்க மாட்டாரு!”என்று யாழினி சலித்துக் கொள்ள கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்தான் தமிழ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.