(Reading time: 14 - 28 minutes)

சட்டென்று ஏனோ சுந்தரியின் நினைவு வந்தது வேலனுக்கு.

'தமிழை விட மூன்று நான்கு வயது போல் சின்னவள்.. அவள் செல்வ சீமாட்டி.. செல்லக் குழந்தை தகப்பனுக்கு.. தமிழும் செல்லம் தான் வீட்டில் ஆனாலும் கூடப் பொறுப்பற்று இருந்ததிலை ஒருநாள் கூட.. இந்தப் பெண் நினைத்தால் நாட்டியமாடுகிறது.. நினைத்தால் நாயை இழுத்துக் கொண்டு வாக்கிங்க் போகுது.. எல்லாம் காசு படுத்தும் பாடு.. பணம் இருந்தால் எப்படியும் இருக்கலாம் என்ற கொள்கை உடையவள் போல.. இவளுக்குக் கொ.ப.செ ஆக இரண்டு அள்ளக் கைகள் வேறு.. பேரை பாரு சமோசான்னு.. பாவம் ஆன்ட்டி அவங்க முகம் விழுந்துடுச்சு இதைக் கேட்டதில்.. இதில் இதுக மூணும் என்னைச் சைட் அடிக்கத்தான் இதெல்லாம் செய்யுறாங்கன்னு தெரிஞ்சா? அய்யோ பாவம்.. அச்சம், மடம், நாணம் எல்லாம் அந்தகாலப் பெண்களுக்குத்தான் போலும்.. வெட்கம் கெட்ட இந்தக் கால இளம் பெண்களுக்குக் கிடையாது போல’, என்று நினைத்தபடி

வாசல் திண்ணையில் அமர்ந்தபடி ஏதோ குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்தான்.

எப்படி இருந்தவள், அப்பாவின் மறைவிற்குப் பிறகு ஒடுங்கி விட்டாள்.. யாருடனும் அதிகம் பேசுவதில்லை.. கேட்டாள் கேட்டதற்குப் பதில் அவ்வளவுதான்.. அதுவும் வெளி மனிதர்களிடம்.. வீட்டிலோ.. மௌனமே அவள் மொழி.

அருகே சென்றவன், "தமிழ் என்னம்மா இன்னமுமா டியூஷன்.. டைம் ஆயிடுச்சே..", என்றவன்..,

"சீக்கிரம் வாம்மா.. நாளை இன்னம் கொஞ்சம் கூட நேரம் எடுத்துக்கலாம்..", என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றான்.

கல் போன்ற உணர்ச்சியற்ற முகத்துடன் வெறும் தலையசைப்பையே பதிலாகத் தந்த தங்கையை நினைக்க நினைக்க ஆத்திரம்தான் வந்தது அவனுக்கு.

'சே.. இப்படிப் பட்டும் படாமலும் இருந்தும் இல்லாம இருக்கறதுக்கு..', என்று நினைத்தவன் தன் எண்ணத்திற்குக் கடிவாளம் போட்டு நிறுத்தினான்.

அதிகாலையிலேயே கிளம்பிவிட்டதால் பத்துமணிக்கே வீட்டிற்கு வந்து விட்டான் சிங்கார வேலன். உள்ளே நுழைந்தவன் ஒரு வீட்டில் யாரும் தென்படாததைக் கண்டு பின் கட்டுக்குச் சென்றான்.. நல்ல பெரிய கட்டு வீடுதான் தாழ்வாரத்தையும் முற்றத்தையும் கடந்து பின் பக்கத்தோட்டத்துக்குச் சென்றவன், அங்கே மாட்டுக் கொட்டிலில் தன் தாயைக் கண்டான்.

மெலிந்த தேகம்.. மிகுந்த அழகிய களையான முகம்.. ஜீவனற்ற கண்கள்.. ஏதோ வாழவேண்டுமே என்று உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கிறதோ என்றே தோணும்படியாய் தோற்றம்.. கணவனுக்குப் பின்னே தான் இன்னும் எதற்கு இந்தப் பூமியில் என்றே அவருக்கு எண்ணம்.

எண்ணமெல்லாம் நிறைவேறிவிட முடியுமா?..

பிள்ளைகள் மூவரும் தாயை ஒத்திருந்தனர் தோற்றப் பொலிவிற்கு.. அழகிய முகம் உடையவர் அவன் தாய் தான்.. எல்லாக் குழந்தைக்கும் முதல் அழகி தன் தாய் தான், கேட்டாலும் அம்மா தான் என்றே சொல்லும்.. ஆனாலும் கூட மங்கையர்க்கரசி மிகுந்த அழகிய பெண்மணி.. என்ன இப்போது இந்த ஒரு கோலம் கண்டாலும் கூட அழகைக் கூடை போட்டு மூட முடியுமா என்ன?..

மாட்டிற்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி அரவம் கேட்டுத் திரும்பினார்.

"வா கண்ணு.. எப்ப வந்தே?.. எவ்வளவு நாள் ஆச்சு.. முழுசா ரெண்டு மாசமாயிடுச்சு.. உன்னை இப்படித் திடீர்னு கூப்பிடுறதுலே உடன் பாடு இல்லை தான் ஆனாலும் கூட விஷயம் அப்படி இருக்குது.. சரி சரி.. உள்ள ஏ.சி. ரூமிலே உக்கார வேண்டியதுதானே.. இரு வந்துடறேன்.. காபி வேணுமா?..", என்று அடுக்கிக் கொண்டே போன தாயை. பார்த்து மென்னகைப் புரிந்தவன்..

"அம்மா.. நிறுத்துங்க.. கொஞ்சம் மூச்சு எடுத்துட்டுப் பேசுங்க.. இன்னும் ரெண்டு நாள் இங்கே தான் இருக்கப் போறேன்.. சோ.. நாம நிதானமாகப் பேசலாம்..” என்று சொல்லிவிட்டுத் தானும் தீவனத்தை எடுத்து இன்னொரு கழனித் தொட்டியில் கலந்தவன் அருகிலிருந்த தடுப்புக்குப் பின் இருந்த மாடுகளை ஒன்றன்பின் ஒன்றாய் மெல்ல ஓட்டியபடி வந்தான்.. பின்னேயே அவர்கள் வேலையாள்.

பின் வரிசையாய் மாடுகளைத் தொட்டியிடம் காட்டிச் சென்றான்.. தொட்டிகளில் நிரப்பியிருந்த கழுனித் தண்ணியுடன் சேர்ந்த தீவனத்தை மாடுகள் ஆவலாய் உறிஞ்சின.. பருத்திக்கொட்டை புண்ணாக்குக் கலந்த தீவனம்.

அதைப் பார்த்தபடிச் சிறிது நேரம் நின்றவன்..

"வாங்கம்மா இனி முருகன் பார்த்துப்பான்..", என்று அருகே நின்றபடி வைக்கோலை எடுத்துப் பிரித்துக் கொண்டிருந்த முருகவேலைப் பார்த்து ஜாடை காட்டியவன்..

தாயின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

புடவை முந்தானையில் தன் கையைத் துடைத்தபடி வந்த தாயைப் பார்த்தவனுக்குத் தமயந்தியின் நளினமான தோற்றத்துடன் தன் தாயை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.. ‘அவர்களும் அமைதியான அமரிக்கையான தோற்றம் கொண்டவர், தன் தாயும் எளிமையாய் அடக்கமான தோற்றமுடையவர், இருவரும் நிச்சயம் ஒத்தக் குணம் உடையவர்கள் தான் ஆனால் அது செல்வருக்கு இருக்கும் பதப்படுத்தப்பட்ட குணம்.. இயற்கையான அடக்கம் இது.. அது வேறு விதம்’ என்று நினைத்துக் கொண்டவன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.