(Reading time: 26 - 51 minutes)

“அபி தான் சொல்லி இருப்பாண்டா” என கூறிய படி சோபாவில் அமர்ந்திருந்த பூஜாவின் மடியில் தலை வைத்து படுத்தான் இந்தர்.

“குழலி அப்படி சொல்லிய போது நீங்க ஏன் ஒன்றும் சொல்லவில்லை?”  என கேட்டாள் பூஜா. எங்கே தனது கணவன் மேல் ஏதும் பேச்சு வந்து விடுமோ என பயந்து.

“ஊரார் காதலை ஊக்குவித்து வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்று தான்” என்று அசடு வழிந்தான் இந்தர்.

“இப்போ நம்ம காதலுக்கு என்ன குறை வந்தது,  இன்னும் வளர? என பொருமினாள் பூஜா.

“கூல் பேபி, கூல் சின்னஜ் சிறுசுகள், கொஞ்சம் நாமும் தான் காப்பற்றுவோமே. நீயும் அப்படித் தானே நினைப்பாய்” என்று அவளையும் கூட்டு சேர்த்தான்.

“உங்க சித்தி உங்க மேல் கோபப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.”

“சித்திக்கு என் மேல் கோபமே வராதுடா. இப்போ நான் சொன்னால் கூட குழலியை அவங்க மருமகளா ஏத்துப்பங்க. சரி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் வெளியே எங்கும் போக முடியாது. கிளம்பு முதலில்” என்று கூறி அவனும் கிளம்ப ஆயத்தமானான்.

அனைவரும் கிளம்பி ஷைன் நதியில் படகு சவாரி செய்தனர். அதிலேயே இரவு உணவும் பரிமாறப்பட்டது. அதில் செல்லும் போதே ஊரை பார்க்க வண்ண விளக்குகளுடன் அழகாக இருந்தது. அந்த நதியும் ஊருக்கு நடுவே பாய்ந்து ஓடியது. அதில் இருந்து பார்த்தாலே ஐபிள் டவரின் மேல் விளக்குகள் மின்ன ரம்யமாக இருந்தது. அதிகம் நேரம் வீணாக்காமல், வந்த களைப்பும் இருந்ததால் அத்துடன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு திரும்பி விட்டனர்.

குழலியும் சம்யுக்தாவின் அறையிலேயே தங்கிக் கொண்டாள். மறு நாள் காலை சிற்றுண்டி முடித்து அங்கிருந்த லூவர் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினர். ஊலகிலேயே பெரிய அருங்காட்சியகமாகும். முதலில் அரண்மனையாக இருந்த இடத்தில் 1652 ம் ஆண்டில் இருந்து மன்னர்களின் உடைமைகளை வைக்கும் இடமாக உபயோகித்து பின் அதையே அருங்காட்சியகமாக மாற்றி உள்ளனர்.

இங்கு தான் உலக புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டா வின்சியின் மோனலிசா ஓவியம் உள்ளது. அங்கு தான் கூட்டமும் அதிகமாக இருந்தது. பூஜாவிற்கு அதை நேரில் பார்த்தவுடன் சப்பென்று ஆகி விட்டது. அதை விட அழகான ஓவியங்கள் பல அங்கு இருந்தும் ஏன் இது மட்டும் இவ்வளவு புகழ் பெற்றது என்று வியப்பாகவே இருந்தது.

மதிய உணவிற்கு பின் ஐபிள் டவரின் மேல் ஏறி பார்த்தனர். அங்கிருந்து பார்த்த பொழுது அந்த நகரமே எவ்வளவு நேர்த்தியாக கட்டப் பட்டிருந்தது என தெரிந்தது. நடுவில் ஓடும் ஷைன் ஆறும் அதன் இரு கரைகளில் வீற்றிருந்து அந்த காலத்து கல் கட்டிடங்களும், அதிகமான அரண்மனைகளும், எதோ பழைய காலத்திற்கே நாம் சென்றது போன்ற பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

எல்லாம் முடிந்து அறைக்கு திரும்பினர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் இரவு உணவு முடித்து, பாரிஸ் இரவு நேரம் சுற்றி பார்க்க மிகவும் நன்றாக இருக்கும். அதனால் வெளியே சென்று வரலாம் என இந்தர் கூறிய பொழுது, சம்யுக்தாவும், சுஜியும், காலை முழுவது சுற்றியதால் கால் வலிக்கின்றது, நீங்கள் நால்வர் வேண்டுமானால் சென்று வாருங்கள் என கூறினர்.

“லிடோ டி பாரிஸ் என்ற நடன நிகழ்ச்சி நன்றாக இருக்கும். அதற்கு போகலாமா அண்ணா” என்று அபி கேட்ட பொழுது

“ஐயோ அந்த மாதிரி நடனத்திற்கு எல்லாம் வேண்டாம். அது எல்லாம் சென்சார் இல்லாமல் இருக்கும். வேறு எங்காவது போகலாம் என்று பூஜா கூறினாள்.

“இங்கு நேரடி இசை நிகழ்சிகள் அதிகமாக நடக்கும், அதற்கு செல்லாம்” என்று இந்தர் கூறினான். அனைவருக்கும் அது சரியென பட அங்கு சென்றனர். ஒரு பெரிய திறந்த வெளி அரங்கத்தில் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றனர். உள்ளே கூட்டமாக இருந்தது. நமது கிரிகெட் மைதானம் போல் இருந்தது. சுற்றி அமர்ந்து பார்க்கும் படியும் ஒரு புறம் மேடை அமைக்கப் பட்டு அதில் பாப்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

அவர்கள் பாடிய பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோ, என்னவோ, அங்கிருந்த கூட்டத்தை பார்க்க நன்றாக இருந்தது. நடுவில் நிறையபேர் ஆடிக் கொண்டும் இருந்தனர். சிறிது நேரம் சென்றதும் அபி, “நாம் போய் ஏதாவது குளிர் பானம் வாங்கி வரலாம் அண்ணா” என்று இந்தரிடம் கேட்டான், அப்படியே அவனும் பீர் குடிக்கலாம் என்ற எண்ணத்தில்.

இந்தரும் சரி என்று பெண்கள் இருவரையும் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு எழுந்து சென்றனர். இவர்களுக்கும் ஏதாவது ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியதால் ஒன்றும் சொல்லவில்லை.

அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அவர்களை சென்ற திசையில் பெரிதாக வெடி வெடித்தது போல் சத்தம் கேட்டது. மக்கள் வாயிலை நோக்கி  சிதறி ஓடினர். இவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

பூஜாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது. இந்தர் அந்த திசையில் தானே சென்றான். எதோ பெரிய குண்டு வெடித்ததாக சிலர் பேசியபடி ஓடினர். பூஜாவிற்கு பிரன்ச் மொழியும் தெரியும் அதலால் அவர்கள் பேசி சென்றது நன்றாகவே புரிந்தது.

குழலி  அழவே ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு அபிக்கு என்ன ஆகியதோ என்ற கவலை. நாம் அங்கு சென்று பார்க்கலாம் என்று பூஜாவிடம் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.