(Reading time: 15 - 30 minutes)

18. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்ரிக்காவில் 1967 ம் ஆண்டு கிறிஸ்டியன் பர்னார்ட் என்ற மருத்துவரால் வெற்றிகரமாக செய்யப்பட்டது

ர்ஷினியின் விருப்பத்திற்கு இணங்க ஓர் நல்ல நாள் பார்த்து ராமச்சந்திரன் லக்ஷ்மி தம்பதியினர்  காயத்ரியைப் பெண் கேட்டு சென்றனர்.

காயத்ரியின் தந்தை ஜெயகுமார் அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.

“நாம ஏற்கனவே ஹாஸ்பிடல்ல மீட் செய்திருக்கோம் சார். நியாபகம் இருக்குங்களா” ஜெயகுமார் ராமசந்திரனுடன் கைகுலுக்கிய படி கேட்டார்.

“சார் மோர் எல்லாம் விடுங்க. சம்பந்தின்னு கூப்பிடுங்க” ராமசந்திரன் சொல்லவும் ஜெயகுமார் பவானி இருவரும் மகிழ்ந்தனர்.

“மாமா பாவம் அங்கிள். அவரை ஏன் மோரை விட சொல்றீங்க. நீங்க மட்டும் வெயில் காலம் வந்தா சில்லுன்னு மோர் கேப்பீங்க. அங்கிள் மட்டும் விட்டுடனுமா” வர்ஷினி முகத்தை படு தீவிரமாக வைத்துக் கொண்டு சொல்லவும் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.

பவானி ஜெயகுமார் இருவரும் அன்று ஹாஸ்பிடலில் உடம்புக்கு முடியாமல் படுத்திருந்த பெண்ணா இவள் என ஆச்சரியமாய் பார்த்திருந்தனர்.

“அன்னிக்கு ஹாஸ்பிடல்ல பார்த்த பொண்ணா இவன்னு தானே நினைக்கிறீங்க. ஆக்சுவலி இவ பொண்ணே இல்ல” வருண் சொல்ல ஆரம்பிக்க அவன் அடுத்து என்ன சொல்வான் என்று அறிந்திருந்த வர்ஷினி முந்திக் கொண்டாள்.

“அண்ணா வேண்டாம். உன் மாமியார் வீட்ல உன் பேரு டேமேஜ் ஆக வேண்டாமேன்னு பார்க்குறேன். அப்புறம் தின்ன களி கூட தர மாட்டாங்க”

ஏற்கனவே காயத்ரி மூலம் வருண் வர்ஷினியின் பாசப்பிணைப்பை அறிந்திருந்த  காயத்ரியின் பெற்றோர் அன்று மருத்துவமனையிலும் இன்று நேரிலும் கண்டு மனம் நிறைந்தனர்.

பெரியவர்கள் அவர்களுக்குள் பொதுவான விஷயங்களைப் பற்றிக் பேசிக் கொண்டிருந்தனர்.

“சரி சரி இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி. பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ” பெரிய மனுஷியாய் வர்ஷினி சொல்லவும் லக்ஷ்மி அவளது காதைப் பிடித்து திருகினார்.

“இந்த வாலுக்கு எப்ப கால்கட்டு போடப் போறீங்க” பவானியும் வர்ஷினியை கலாய்க்க வர்ஷினி அவரை செல்லமாய் முறைத்தாள்.

காயத்ரி மட்டுமல்லாது அவளது பெற்றோரும் வர்ஷினி மீது பிரியமும் அக்கறையும் கொண்டிருப்பதைக் கண்டு ராமசந்திரன் லக்ஷ்மி இருவருக்கும் மிகவும் திருப்தியாக இருந்தது.

லக்ஷ்மி தன் கணவரை ஓர் அர்த்தப் பார்வை பார்த்தார். மனைவியின் மனதைப் படித்தவராக அவரும் கண் மூடித் திறந்து நானும் கவனித்தேன் என்று சங்கேதமாய் சொன்னார்.

“ஆன்டி நீங்க வேற இன்னும் என் அத்தை மாமாவுக்கே இளமை ஊஞ்சலாடுகிறது. நானெல்லாம் சின்ன பொண்ணு. கொஞ்ச நாளைக்கு ஜாலியா இருக்க போறேன்” பவானியிடம் சமயோசிதமாக பதில் சொன்ன வர்ஷினி தனது அத்தை மாமாவை சீண்டும் வாய்ப்பையும் விடாமல் பயன்படுத்தினாள்.

“எப்படி இவளை சமாளிக்கிறீங்க. காயத்ரி  சின்ன வயசில் இருந்தே ரொம்ப அமைதி. இருக்கும் இடம் தெரியாம இருப்பா. இப்படி சேட்டையும் குறும்பும் செய்யும் இன்னொரு பெண் இருந்திருக்கலாம்ன்னு இப்போ அம்முவை பார்த்து ஆசையாக இருக்கு” பவானி மனதில் பட்டதை வெளிபடுத்தினார்.

“அம்மு உங்க பொண்ணு தானே...அவளுக்கு  நீங்க அம்மா அப்பா முறை தானே ஆகணும்” ராமசந்திரன் உறவு முறையை சுட்டிக் காட்டி எதார்த்தமாய் சொன்னார்.

“மாமா வருண் அண்ணாக்கு இவங்க மாமா அத்தைன்னா எனக்கும் அப்படி தான். அப்படியே இருக்கட்டும்” கொஞ்சம் கடுமையான குரலில் பட்டென்று வர்ஷினி சொல்லவும் அங்கே சற்று நேரம் ஒரு வித அமைதி நிலவியது.

அது வரை வர்ஷினி கொண்டிருந்த உற்சாகமும் ஆரவாரமும் ஊசி குத்திய பலூன் போல வடிந்து போயின.

வர்ஷினி திடீரென இப்படி ஒரு தொனியில் சொன்னதும் ராமசந்திரன் லக்ஷ்மி இருவருக்கும் சற்று தர்மசங்கடமாக போய்விட்டது. அதே நேரம் பவானியும் ஜெயகுமாரும் சற்றே முகம் வாடினர்.

அனைத்தையும் உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த காயத்ரி தன் பெற்றோரை உள்ளே வருமாறு அழைத்தாள்.

“அம்மா அப்பா நான் தான் அம்மு பத்தி சொல்லிருக்கேனே. அம்மா அப்பா ன்னு கேட்டாலே அவ அப்செட் ஆகிடுவா. அவ உங்களை எப்படி கூப்பிட்டா என்ன. அவ குழந்தை மாதிரி. மனசில் எதையும் வச்சுக்காம வெளிப்படையா உணர்வுகளை கொட்டிடுவா. நீங்க பெரிதாக எடுத்துக்காதீங்க ப்ளீஸ்”

காயத்ரி தன் பெற்றோரிடம் கூறவும் பெற்றோருக்கு தங்கள் பெண்ணை நினைத்து பெருமையாக இருந்தது. காயத்ரி வருண் மேல் வைத்திருக்கும் ஆழமான நேசமும் அவனது குடும்பத்தையே அரவணைத்து செல்லும் பாங்கும் வெளிப்பட முகம் மலர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.