(Reading time: 21 - 41 minutes)

"உங்க சித்திக்கு அண்ணன் பையன் தான?  முன்னாடியே பாக்கலையா?"

"எங்க பாக்க? தேனை விட நான் அழகா இருக்கேனு நினைச்சு என்னை எல்லாம் அந்த அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. நான் அவங்களை மயக்கிருவேனாம். அது மட்டும் இல்லாம அவங்க சென்னைல தான் படிச்சாங்க. அப்புறம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போனாங்க. அங்க சாப்பாடு ஒத்துக்காம மறுபடியும் ஊருக்கு வந்து, இங்க கவர்ன்மென்ட் பரிச்சைக்கு படிச்சு எல். ஐ. சி ல வேலை பாக்காங்க. இங்க திருநெல்வேலில தான் காவ்யா.  ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்காங்க. அத்தை மாமா எல்லாரும் இங்க தான் இருக்காங்களாம். இது எல்லாம் அந்த அத்தை தான் சொன்னாங்க"

"ஓ எங்க வீட்டு கிட்ட தான் எல். ஐ. சி இருக்கு. ஒரு அத்தை குடும்பம் இங்க இருக்குனு நீ சொல்லவே இல்லையே"

"எனக்கே தெரியாதே", என்று சிரித்தாள் மதி.

"உனக்குன்னு ஏண்டி இப்படி நடக்குது? படிச்சு சொந்த கால்ல நின்னு நல்ல  வாழ்க்கை கிடைக்கும்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். நீ உன் தலைல மண்ணை  அள்ளி போட்டுட்டு வந்துருக்க?"

"அப்ப எனக்கு என்ன செய்யன்னு தெரியலை  டி. எல்லாம் என் விதி படி தான நடக்கும்? விடு"

"சரி  அடுத்து என்ன செய்ய போற?"

"இன்னைக்கு  அப்பா வந்து என்ன கூட்டிட்டு போவாங்க. என் பொருள் எல்லாம் ஹாஸ்டல்ல இருந்து  எடுத்துட்டு போகணும்ல அதான்"

"ஹ்ம் சரி டி மதி. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்"

"என்னோட எதிர்காலம் எப்படி இருக்கும்?", என்று யோசித்து கொண்டிருந்தாள் மதி.

"எப்படியாவது இவளை நல்லா வச்சிக்கோ கடவுளே", என்று வேண்டி கொண்டிருந்தாள் காவ்யா.

அடுத்து இருவரும் பாடத்தை கவனிக்க சாயங்காலம் வந்தது. இருவரும் கேட் அருகே காத்திருந்தார்கள்.

"என்ன டி ஆச்சு? மணி அஞ்சு ஆகுது. இன்னும் உங்க அப்பாவ காணும்", என்று கேட்டாள் காவ்யா.

"வரேன்னு சொன்னாங்க. வந்துருவாங்க. உனக்கு நேரம் ஆகிட்டுன்னா கிளம்பு காவ்யா"

"அதெல்லாம் வேண்டாம். எப்படியும் இன்னைக்கு எப்ப வருவேன்னு தெரியாதுன்னு வீட்ல சொல்லிட்டு தான் வந்தேன். இருக்கேன்"

"அதோ அப்பா வந்துட்டாங்க காவ்யா", என்று சிரித்தாள் கலைமதி.

அங்கே சண்முகமும், கூட ஒருவனும் வந்து கொண்டிருந்தார்கள்.

"இது தான் உங்க அப்பாவா? நான் பாத்தது இல்லை. சரி கூட வரது யாரு டி?"

"எனக்கு தெரியாது காவ்யா. ஹாஸ்டல் காலி பண்ணனும்னு வந்துருக்காங்களோ என்னவோ? ஆனா ரெண்டு பெட்டி தான? எதுக்கு இன்னொரு ஆளை இந்த அப்பா கூட்டிட்டு வந்துருக்காரு?"

"உங்கிட்ட பேட்டி பெட்டியா டிரஸ் இருக்கும்னு நினைச்சாரோ என்னவோ? ஆனா கூட வர ஆள் செமையா இருக்கான் டி"

"சும்மா இரு. பக்கத்துல வந்துட்டாங்க", என்று அவளை அடக்கினாள் மதி.

"வாங்க  பா, நல்லா இருக்கீங்களா? நான் காவ்யா. மதியோட பிரண்ட்", என்று சொன்னாள் காவ்யா.

"உன்னை பத்தி மதி சொல்லிருக்கா மா. நான் நல்லா இருக்கேன். அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க"

"ரொம்ப சந்தோசம் மா. அப்புறம் மதி கிளம்பலாமா?"

"இல்ல பா. நீங்க வந்து ஒரு கையெழுத்து போடணும். அதுக்கப்புறம் கிளம்பலாம். நான் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்"

"ஓ அப்படியா? சரி மா வரேன். அப்புறம் இங்க கேன்டீன் எங்க இருக்கு மா?"

"ரெண்டு பில்டிங்  தள்ளி இருக்கு. எதுக்கு பா?"

"தம்பி வேலை முடிஞ்சு வந்த உடனே  கூட்டிட்டு வந்துட்டேன். அதுக்கு பசிக்கும். ஒரு காஃபீ குடிக்க தான் கேட்டேன்"

"கையெழுத்து  போட்டுட்டு போகலாமா பா ? ஏன்னா வார்டன்  கொஞ்சம் நேரம் கழிச்சு போனா எதாவது சொல்லுவாங்க. இல்லை ரொம்ப பசின்னா வாங்க கேன்டீன் போகலாம்", என்றாள் மதி.

"இல்ல மாமா. நான் இங்கயே இருக்கேன்", என்றான் அவன்.

"அம்மாடி காவ்யா நீ தம்பியை கேன்டீனுக்கு கூட்டிட்டு போறியா? நாங்க இங்க வேலையை முடிச்சிட்டு அங்க வரோம்"

"சரி பா. நான் கூட்டிட்டு போறேன். வாங்க சார்", என்று அழைத்தாள் காவ்யா.

காவ்யாவும், அவனும் கேன்டீன் நோக்கி சென்றவுடன், அப்பாவும், மகளும் ஹாஸ்டல் நோக்கி சென்றனர்.

அவன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான் காவ்யாவிடம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.