(Reading time: 32 - 63 minutes)

வீட்டிலிருந்து கிளம்பிய இருவரும் முதலில் கோவிலுக்கு வந்தனர்.. காரில் இருந்தும் இறங்கியதும், கங்கா அர்ச்சனை தட்டு வாங்க, துஷ்யந்த் அவளுக்கு பூ வாங்கினான்..

“எவ்வளவு முழம் ம்மா” அந்த பூக்காரம்மா கேட்டதற்கு,

“ஒரு முழம் போதும்..” என்று கங்கா கூறினாள்.. ஏனெனில் அதுவே அவளுக்கு அதிகம்.. ஆனால் துஷ்யந்த் அதை மறுத்து மூன்று முழம் வாங்கினான். கங்காவும் அதை மறுக்காமல் வாங்கி தலையில் சூடிக் கொண்டாள். பின் இருவரும் கோவிலுக்கு உள்ளே சென்றார்கள்.

குருக்கள் அர்ச்சனை தட்டை வாங்கியதும், “யார் பேர்ல அர்ச்சனை செய்யட்டும்??” என்றுக் கேட்க,

“துஷ்யந்தன்” என்று அவனது பெயரை சொல்லி, அதனுடன் ராசி, நட்சத்திரங்களையும் கூறினாள். அவள் வாயிலிருந்து இரண்டாவது முறையாக அவனது பெயரை உச்சரித்து கேட்கிறான் துஷ்யந்த்.. பின் அவளது பெயர் மற்றும் ராசி, நட்சத்திரங்களையும் சேர்த்து அவன் குருக்களிடம் கூறினான். அவளது ராசி, நட்சத்திரமெல்லாம் அவன் அறிந்து வைத்திருப்பதை கங்கா வியந்து போனாள்.

பின் வழிபாடு முடிந்து குருக்கள் பிரசாதம் எடுத்து வந்து கொடுத்ததும், கங்கா குங்குமத்தையும், திருநீரையும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். ஆனால் அவன் அதை அப்படியே கைகளில் வைத்திருந்தான்.. இப்போது தான் அவன் திருநீர், குங்குமமெல்லாம் இட்டுக் கொள்கிறானே! ஏன் இப்போது இட்டுக் கொள்ளாமல் இருக்கிறான்.. என்று அவள் மனதில் கேள்வி பிறந்தது..

“ஏன் பிரசாதத்தை நெத்தியல் வச்சுக்கலையா?”

“இல்ல நீயே வச்சி விடுவியான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்..” என்று அவன் இத்தனை வருட எதிர்பார்ப்பை சொன்னதும், அவளும் அதை மறுக்காமல், அவன் நெற்றியில் பிரசாதத்தை இட்டு, ஊதிவிட்டாள்.

கோவிலில் இருந்து கிளம்பிய இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.. எப்போதும் இது போன்ற அவனுடனான பயணத்தை தவிர்ப்பவள், இன்று அதை ரசித்தப்படி, அவனுடன் பேசியப்படியும், கார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தப்படியும் அவனுடன் பயணித்தாள். அந்த நேரம் பஞ்சுமிட்டாய் விற்பவன் இவர்களது காரை எதிர்த்தார் போல் கடக்க, “எனக்கு பஞ்சுமிட்டாய் வேணும்.. வாங்கித் தர்றீங்களா?” என்று கொஞ்சலாக கேட்டாள்.

அது ஒரு நீண்ட சாலை, நடுவில் தடுப்பு சுவரோடு, இருப்பக்கமும் வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்தது.. இவர்கள் இருந்த பாதைப் பக்கம் ஒரே திசையை நோக்கி தான் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது.. அதில் குறுக்கே இருந்த வழியாக அந்த சாலைக்கு திரும்பிய  பஞ்சு மிட்டாய்காரன் அந்த பாதையின் ஓரமாக எதிர்புறம் இருந்து வந்தான்.. கங்கா கேட்டதும் அதற்குள் இவர்கள் கார் கொஞ்சம் தள்ளி வந்திருக்க, அந்த பஞ்சுமிட்டாய்க்காரனும் சைக்கிளில் கொஞ்சம் வேகமாக முன்னேறிவிட்டான். திரும்ப அதே சாலையில் வண்டியை திருப்ப முடியாதென்பதால், காரை கொஞ்சம் வேகமாக இயக்கி அடுத்து வந்த யூ டர்னில் திருப்பி, காரை இயக்கியவன், அந்த பஞ்சுமிட்டாய்க்காரனை நெருங்கி விட்டான்.

ஆனால் பஞ்சுமிட்டாய்க்காரன் தடுப்பு சுவருக்கு அந்த பக்கம் இருந்ததால், காரை நிறுத்தியவன், காரிலிருந்தப்படியே அவனை கைத்தட்டி கூப்பிட்டான். அவனும் குரல் கேட்டு நிற்க, கை அசைவிலேயே அங்கு வருவதாக கூறியவன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடக்கச் சென்றான். ஆனால் அங்கு சாலையை கடக்க முடியாதபடி சிறியதாக தடுப்புச் சுவர் இருந்தது.

துஷ்யந்த் பொதுவாக பயணத்தின் போது சாலை விதிகளை கடைப்பிடிப்பவன் தான், இருந்தும் கங்கா முதன்முதலாக அவனிடம் ஒன்றை கேட்கிறாளே! லட்சம் அளவு விலையிலான பொருட்களை அவளுக்காக வாங்கி வைத்திருக்கிறான்.. இருந்தும் அவள் முதன்முதலாய் கேட்பது பத்து ரூபாய் மதிப்பிலான பஞ்சு மிட்டாய் தானே! அதை வாங்கித் தராமல் எப்படி இருப்பது? எனவே தடுப்புச் சுவரை தாண்டியவன், பஞ்சுமிட்டாய் விற்பவனிடம் சென்றான்.

“பஞ்சுமிட்டாய் ஒன்னு கொடுப்பா..” என்றவன், பிறகு என்ன தோன்றியதோ, திரும்பி காரிலிருந்த கங்காவை பார்த்தான். அவளும், அவன் அவளுக்காக இவ்வளவு மெனக்கிடுகிறானே என்று நினைக்காமல்,  அவன் செய்ததையெல்லாம் ரசித்தப்படி பார்த்திருந்தாள். திரும்ப பஞ்சுமிட்டாய்க்காரனிடம் திரும்பியவன், “ரெண்டு கொடுப்பா” என்று வாங்கிக் கொண்டான்.

அந்த நேரம் பர்ஸில் 100, 500,1000 ரூபாய் நோட்டுக்களாக இருக்க, ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து துஷ்யந்த்  பஞ்சுமிட்டாய்க்காரனிடம் கொடுத்தான்..

“சார் சில்லறையில்லை சார்” என்று அவன் சொல்ல,

“சரி.. மீதியையும் நீயே வச்சுக்க” என்றவன், திரும்ப தடுப்பு சுவர் தாண்டி காரை அடைந்தான்.

“குழந்தையை ரொம்ப செல்லமா வளர்க்கிறாங்க போல..” என்று சாலையை கடந்து வந்து வாங்கியதற்கே பஞ்சுமிட்டாய்க்காரன் அப்படி நினைக்க, இன்னும் யூ டர்ன் எடுத்ததையெல்லாம் அறிந்தால், என்ன கூறியிருப்பான்.

இரண்டு பஞ்சுமிட்டாயையும் கொண்டு வந்து காரில் உட்கார்ந்திருந்தவளிடம் அவன் கொடுக்க, “ஹைய் ரெண்டா..” என்று குழந்தைப் போல வாங்கிக் கொண்டாள். அவன் கார் ஓட்டிக் கொண்டிருக்க, “இந்தாங்க” என்று அவனுக்கும் ஊட்டி விட்டாள். அவன் கண்களோ ஆச்சர்யத்தில் விரிய, அவள் ஊட்டிவிட்டதை வாயை திறந்து வாங்கிக் கொண்டான். பின் அவன் காரை கொண்டு போய் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன் நிறுத்தினான்.

“என்னோட பர்த்டேக்கு என்ன வேணாலும் தர்றேன்னு சொல்லியிருக்க.. இப்போ நான் வாங்கிக் கொடுக்கிறத வாங்கிக்கனும்..”

“கொடுக்கிறேன்னு சொல்லிட்டு வாங்கிக்கனுமா? இருந்தாலும் பர்த்டே பாய் ஃபீல் பண்ணக் கூடாது.. அதனால வாங்கிக்கிறேன்..” என்று அவள் சொன்னதும், இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.

முதலில் அவளை துணிக்கடைக்கு கூட்டி சென்று பட்டுப் புடவை வாங்கித் தர முடிவு செய்திருந்தான். அவளை புடவை தேர்ந்தெடுக்க சொல்லி அவன் சொன்னதும், நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று அவள் கூறிவிட்டாள்.. பின் அவளுக்காக ஓரளவுக்கு நல்ல விலையில் அழகான புடவை ஒன்றை தேர்வு செய்தான். கங்காவுக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.. பின் அவனுக்காக பிறந்தநாள் பரிசாக, சட்டை ஒன்றை அவள் வாங்கிக் கொடுத்தாள்.

அடுத்து அருகிலேயே  இருந்த நகைக் கடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.. “அதான் புடவை வாங்கிக் கொடுத்திட்டீங்களே போதாதா?” என்று அவள் தயக்கம் காட்டினாள்.

“ப்ளீஸ்.. நான் உனக்கு வாங்கிக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்.. அதை தடுக்காதே” என்று அவன் கெஞ்சலாக கூறியதும், அவளும் அதை ஏற்றுக் கொண்டாள்.

கழுத்துக்கு நெக்லஸ், அதற்கு மேட்சாக கம்மல், வளையல் என்று எளிமையாகவும் இல்லாமல், மிக விலை உயர்ந்ததாகவும் இல்லாமல் அவள் அதை வாங்க தயங்கக் கூடாது என்று நடுத்தரமான அளவில் வாங்கினான்.

“பர்த்டே உங்களுக்கு.. ஆனா கிஃப்ட் எனக்கா?” என்றுக் கேட்டாலும், அவளும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.