(Reading time: 15 - 30 minutes)

24. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

மேடம்.... இந்நேரம் நல்ல வலி எடுக்கணும். ஆனா வலியே இல்லைன்னு சொல்றாங்க” பதட்டாமாய் கூறினாள் ராதிகா.

ராதிகா சுமித்ராவின் மாணவி. எனவே அவரிடமே வந்து ஆலோசனை கேட்டாள்.

“பேபி நார்மல் தானே” சுமித்ரா கேட்க ஆம் என்று தலையாட்டினாள் ராதிகா.

“வெயிட் செய்யலாம். நீ ரிலாக்ஸ் பண்ணு. ரொம்ப டென்ஷன் ஆகாதே” சுமித்ரா தட்டிக் கொடுத்தார்.

“ஹ்ம்ம் இவங்க சொல்லிட்டாங்க. டாக்டர் கணேஷ் வந்தார்ன்னா தெரியும் என் நிலைமை” என்று மனதிற்குள் புலம்பியவாறே மீண்டும் வர்ஷினியை பரிசோதிக்க சென்றாள்.

அதற்குள் அங்கே லக்ஷ்மி ராமசந்திரன் வருண் காயத்ரி அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர்.

“நான் உள்ளே போய் பார்த்து விட்டு வரேன் அத்தை” என்று கூறிவிட்டு காயத்ரி உள்ளே சென்றாள்.

“காயூ நல்ல வேளை நீ வந்துட்ட. உன் நாத்தனார் கிட்ட நிஜமாவே வலி இல்லையான்னு கேளு. என்னோட இத்தனை வருட ப்ராக்டீஸ்ல இப்படி நான் பார்த்ததே இல்லை” ராதிகா காயத்ரியிடம் முறையிட்டாள்.

அங்கோ வர்ஷினி மிக தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தாள் தன் மகளிடம்.

“குட்டிமா அப்பா வந்திடுவாங்க. இன்னும் கொஞ்ச நேரம் தான். அது வரை சமத்தா அம்மா வயிற்றுக்குள்ளே இருப்பீங்களாம்” திரும்ப திரும்ப தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ராம் நீங்க வரும் வரை பாப்பா வெயிட் பண்ணுவா. நீங்க தான் பாப்பாவை முதல்ல பார்க்கணும். நீங்க தான் பாப்பாவை முதல்ல கையில் ஏந்தணும்” மனதிற்குள் தன்னவனோடு உரையாடினாள்.

அங்கே காயத்ரி வந்து சேர “அண்ணி” என்று சிரித்தாள் வர்ஷினி.

“அம்மு. உனக்கு நிஜமா வலி எடுக்கலையா” காயத்ரியும் அவள் பங்கிற்கு கேட்டாள்.

“இல்லையே அண்ணி”

“ராதிகா எதுக்கும் இன்னொரு தரம் செக் செய்திடேன்”

காயத்ரி கூறியதும் ராதிகா வர்ஷினியை பரிசோதனை செய்தாள்.

“அப்படியே தான் இருக்கு”

“அம்மு வலி வந்தா சொல்லு என்ன. வலி தெரியாம இருக்க மருந்து எல்லாம் இருக்கு. அதனால பயப்படாதே” காயத்ரி வர்ஷினியின் தலையை மெல்ல வருடினாள்.

அனுமதி கேட்டு வருணும் உள்ளே வந்தான்.

ராதிகாவிடம் உரையாடியவன் “இது நிஜமா டெலிவரி பெயின் தானா” என்று சந்தேகமாய் கேட்க அவனை முறைத்தாள் ராதிகா.

“இல்ல. லேசா வலித்தாலே ஊரைக் கூட்டிடுவா. எனக்கும் லேபர்பெயின் எப்படி இருக்கும்னு தெரியும். நாங்களும் ஹவுஸ் சர்ஜன்ல டெலிவரி பார்த்திருக்கோம்”

“வருண் டூ யு டவுட் மீ” என்று ராதிகா கேட்டுக் கொண்டிருந்த போது அங்கே வந்திருந்தாள் காயத்ரி.

“ராதி. அம்மு விஷயத்தில் வருண் எப்படி வேணும்னாலும் ஐ மீன் லூசுத்தனமான கேள்வி எல்லாம் கேட்பார். நீ சீரியஸா எடுத்துக்காத” என்று தோழியை சமாதானம் செய்தாள்.

“டாக்டர் கணேஷ் விடவா. அவர் எவ்வளவு பேமஸ் ஹார்ட் சர்ஜன். ஒவ்வொரு டைம் செக் அப் வரும் போதும் என்னவெல்லாம் கேள்வி கேட்பார் தெரியுமா. சுமித்ரா மேடம் கூட தலையில் வச்சுப்பாங்க. அவங்களாலேயே சமாளிக்க முடியலைன்னா பார்த்துக்கோ” காயத்ரியின் காதில் ரகசியமாய் சொன்னாள் ராதிகா.

விடியலுக்கு இன்னும் சிறிது நேரம் இருந்த போது அந்த மருத்துவ வளாகத்தின் உள்ளே ஓர் கார்  சீறிக் கொண்டு நுழைந்தது.

“அர்ஷுமா” வெளியில் இருந்து குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தான் கணேஷ் ராம்.

“ராம் வந்துடீங்களா. குட்டிமா அப்பா வந்தாச்சு டா”

கணேஷ் ராமைப் பார்த்ததுமே வர்ஷினிக்கு வலியின் தீவிரம் உரைத்தது.

“ஐயோ ராம். ரொம்ப வலிக்குது” இப்போது ஊருக்கு என்ன உலகிற்கே கேட்கும் படி கத்தி ஆர்பாட்டம் செய்தாள்.

அவள் கத்தியதில் குடும்பத்தினர் அனைவருமே பதட்டமாய் உள்ளே வந்தனர்.

ராதிகா மேலும் பதட்டமானாள். திடீரென இவ்வளவு வலி எப்படி எடுத்தது என்று அவளுக்கும் புரியவில்லை.

அதற்குள் கணேஷ் வர்ஷினியை அணுகி அவளை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான்.

“அர்ஷுமா. ஒரே ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியே செல்ல எத்தனித்தான்.

“ராம் என்னை விட்டுட்டு போகாதீங்க ராம்” அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“இதோ இங்க தான். இப்போ வந்திடறேன். ரெண்டே நிமிஷம்” அவள் கையை மெல்ல விலக்கி விட்டான்.

“ராம் என் அப்பா மாதிரி நீங்களும் விட்டுட்டு போகாதீங்க ராம்” வலி ஒரு புறம் மனதின் பயம் மறுபுறம் என வர்ஷினியை ஆட்டிப் படைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.