(Reading time: 18 - 36 minutes)

உன் துன்பத்தை நான் களைவேன்!

சொல்லடி என்னிடத்தில்!

நீ கொன்றிருந்தால்! இனிய

பயணம் கொண்டிருப்பேனடி!

உன் மனதை மறைத்து என்

நெஞ்சத்தை கொன்றதேனடி?!

அவளிடத்தில் எதையும் கேட்க விரும்பவில்லை அவன்.  சரயூவிடத்தில் இதை பற்றி பேசினால், அவனை கொல்ல வந்தது, இவனுக்கு தெரியுமென்றதும் துடித்து போவாள்.  அவனை கொன்றிருந்தால் கூட வலித்திருக்காது! ஆனால் அவள் வேதனை இவனை கொல்லாமல் கொன்றது.

குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக கமிஷ்னர் ஆஃபிஸிலிருந்தான் ஜெய்.

“இங்க வெயிட் பண்ணுங்க...கொஞ்ச நேரத்துல ஐயா வந்திருவாரு”

அந்த அறையை நோட்டமிட்டவனிடம் சிக்கிய பெயர் பலகையில்....இவனிடத்தில் ஆச்சரியம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு என கலவையான உணர்வுகள்.

சிறிது நேரத்தில், காக்கி சட்டையின் விரைப்பு குறையாது, கம்பீரமான தோற்றத்தோடு வந்தவனை கண்டு ஜெய் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனான்.

“நாதன் சொல்லியிருந்தாரு....நீங்க வருவீங்கனு” என்று நிறுத்தியவனின் பார்வை எதிரிலிருப்பவனை எடை போட, “சொல்லுங்க சஞ்சய்! என்னால உங்களுக்கு ஆகவேண்டிய உதவி என்ன?”

அறையில் நுழைந்த போதிருந்த நிலையில், எந்த மாற்றமும் இல்லாது பேசும் தோழன்...ஜெய்யின் ஆச்சரியத்தை கூட்டினான்.

அவன் உடையை சுட்டியபடி, “மச்சா! எப்போடா இதெல்லாம்? ஒரு வார்த்தை கூட சொல்லலை....பரவாயில்லை விடு! சொல்லு எப்படியிருக்க? சௌமி எப்படியிருக்கா?”

ஏ.சி.பியோ பதிலளிக்காது ஜெய்யை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தான்.

உயிருக்குயிராய் பழகிய நண்பன்.... இன்று தன்னை யாரோ போல் காண்பதை சகியாமால் ஜெய் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.

“உங்களோட பிஸி ஸ்கெட்யூல்ல எனக்காக நேரம் ஒதுக்கியது நன்றி சர்! தேங்க்ஸ் ஃபார் யுவர் வால்யூபல் டைம்!” என்று சொல்லி கிளம்பிவிட்டான் ஜெய்.

“நில்லுங்க சஞ்சய்!” என்றுவிட்டு ஜெய்யிடமாக வந்து, “நீங்க பாட்டுக்கு வந்தீங்க...இப்போ போறீங்க... நாதன் சர் கேட்டா நான் என்ன சொல்றது?”

“என்னோட பிரச்சனைய, நானே பார்த்துக்குறேன்னு சொல்லுங்க.... இல்ல வேணா! நானே அவரிட்ட பேசிக்குற”

ஜெய்யின் பதிலில், சிறு புன்னகை பூக்க, “தாங்க் யூ!” என்று தன் வலது கையை நீட்டினான். 

‘என்னையே தெரியலையாம்...எதுக்கு இந்த போலியான தேங்க்ஸ்’ என்று நினைத்தபடி வேண்டா வெறுப்பாக ஏ.சி.பியின் கையை குலுக்கினான் ஜெய்.

இவன் எதிர்பாரா நேரத்தில் கையை இழுக்க, ஜெய் அவன் மீது மோத... அடுத்த நொடி ரூபினின் இறுகிய அணைப்பில்....இத்தனை நேரமிருந்த அந்நிய தன்மை முற்றிலுமாக மறைந்திருந்தது.

“மச்சா சஞ்சய்!” சில வருடங்கள் கழித்து தோழனை அணைத்த சந்தோஷத்தில் ரூபின் கூவ... அவன் கைகளிலிருந்து விலகிய, ஜெய் முறைத்தான்.

“கொஞ்ச நேர உன்னை தெரியாத மாதிரி காட்டிக்கிட்டதுக்கே உனக்கு கோபம் வருதே....கிட்ட தட்ட ஐந்து வருஷமா என்னை தள்ளி வச்சிருக்கியே, எனக்கெப்படி இருக்கனும்? அமெரிக்கா போனவ அதோட ஒழிஞ்சானு விட்டுட்டீங்கல்ல... ஒரு முறையாவது ஃபோன் பண்ணியா? அட்லீஸ்ட் ஒரு ஈமெயிலாவது அனுப்பியிருக்கலாமே மச்சா? போன இடத்துல இருந்துக்க பழகின என்னால உங்களோட பேசாம, உங்களை பார்க்காம....கொடுமைடா அது!”

ரூபினின் வலி நிறைந்த வார்த்தைகளில் உருகியவன், அவனை தன்னோடு இறுக்கி கொண்டு, “சாரிடா மச்சா! எனக்கிருந்த பிரச்சனைய சமாளிக்க முடியாம முழி பிதுங்கிடுச்சுடா....அப்போயிருந்த நிலைமைல வேற எதை பத்தியும் யோசிக்கல....யோசிக்க முடியலனு சொன்ன சரியா இருக்கும்”

நண்பனின் வருத்ததை புரிந்து, “பழைச விடு மச்சா! அதான் இப்போ மறுபடியும் சேர்ந்துட்டமே... இனிமே எங்கிட்டிருந்து நீ தப்பிக்க முடியாதுடா...”

அவனிடமிருந்து விலகி “புரியுதுங்க ஏ.சி.பி. சர்!” என்று பயந்தவன் போல் நடிக்க.... உரக்க சிரித்து, “அது...அந்த பயமிருக்கட்டும்” என்று காக்கி சட்டையின் காலரை தூக்கிவிட்டு கொண்டான் ரூபின்.

“சௌமி எப்படியிருக்கா? வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”

“அவளுக்கென்ன.... எல்லாரிட்டயும் ஏ.சி.பி. பொண்டாட்டினு பெருமை பேசிக்கிட்டு சந்தோஷமா இருக்கா” என்றவன், “நீ எப்படியிருக்க மச்சா?” என்றதோடு நிறுத்தி கொண்டான்.  சரயூவை பற்றி விசாரிக்க இவனுக்கும் ஆசைதான்.  ஆனால் கல்லூரியின் இறுதி நாட்களில் ஜெய்-சரயூ இடையே சுமுகமான பேச்சிருக்கவில்லை.  போதா குறைக்கு, சற்று முன்னர் தான் சொன்னானே...அவன் ஏதோ பிரச்சனையில் மாட்டியிருந்ததாக... அது சரயூவை பற்றியதாகவிருந்தால்... எதுவாயினும் அவனே சொல்லட்டும் என்று நினைத்து அமைதி காத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.