(Reading time: 17 - 34 minutes)

ம்ம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே சரோஜா உள்ளே வந்தார்..”ரெண்டு மருமகளும் காலைலேயே என்ன கதை பேசிட்டு இருக்கீங்க??”

“அது வேற ஒண்ணுமில்ல நம்ம அத்தை ரொம்ப கொடுமைகாரங்க என்ன ரொம்ப வேலை வாங்குறாங்கனு சொல்லிட்டு இருக்கேன்”, என ராஜி சிரிக்க,

“அதுசரி நீயே நேத்து கல்யாணம் பண்ணி வந்தமாதிரி விளையாடிட்டு இருக்க உனக்கு 5 வயசுல பொண்ணு இருக்குனா நம்புறமாதிரியா இருக்கு.. “

“என்ன பண்றது அத்தை நீங்க அப்படி செல்லம் குடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க”, என மீண்டும் அவரை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்..சிறிது நேரத்தில் யாரோ அழைப்பதாய் சரோஜா செல்ல,

“எப்படி அண்ணி அம்மா இவ்ளோ ஜாலி டைப்பா இருக்காங்க..மாமியார் மாதிரியே பழக மாட்றாங்களே..”

உண்மைதான் நிர்பயா..எங்கம்மா கூட என் மேல கோப பட்டுருக்காங்க ஆனா அத்தை இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட குரல் உயர்த்தி கூட பேசினது இல்ல..அவங்களுக்கு பசங்கதான் உலகமே..அதுமட்டுமில்லாம பொண்ணுணா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம் சொன்னா நம்பமாட்ட காவியா பொறந்தப்போ என் வீட்டு ஆளுங்ககூட பொண்ணானு வருத்தப்பட்டாங்க ஆனா அத்தை அத்தனை பேருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினாங்க தெரியுமா..

கேட்டதுக்கு எல்லாருமே பையனை பெத்துட்டா வருங்காலத்துல பையனுக்கு பையனே கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்ன அப்படினு நோஸ்கட் கொடுத்துட்டாங்க..என்கிட்ட வந்து பொலம்புவாங்க என்ன உலகமோ தன்னை பெத்தவ ஒரு பொண்ணு,கட்டிட்டு வந்து குடும்பம் நடத்த பொண்ணு ஆனா பிறக்குற குழந்தை மட்டும் ஆணா இருக்கனுமாம் என்ன உலகமோனு சொல்லுவாங்க..இந்தமாதிரி சௌத் சைட்ல இருக்குறவங்கல ப்ராட் மைண்ட்டா இருக்குறவங்க ரொம்ப ரேர் தான்..அவ்ளோ ஸ்வீட் அவங்க..

கேட்டவளோ வாயடைத்து போனாள்..”ரொம்பவே க்ரேட் அண்ணி..நாம ரெண்டு பேரும் முக்கியமா நா ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவ அண்ணி..”

ம்ம் என்றவள்,” அடடா இன்னைக்கு உனக்கு தான கல்யாணம் நா பாட்டுக்கு உக்காந்து கதை பேசிட்டு இருக்கேன்..நா போய் ப்யூட்டிஷியன் எப்போ வருவாங்கநு கேக்குறேன்..”,என வெளியே ஓடினாள்..அதன்பின் கல்யாண பரபரப்பு அனைருக்குமே ஒட்டிக் கொள்ள யாருக்கும் நிற்காமல் நேரம் பறந்து கொண்டிருந்தது..

மணமகன் மேடையில் பட்டுவேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்து மந்திரங்களை கூட விரைப்பாய் கூறிக் கொண்டிருந்தான்..ராஜி மெதுவாய் அவனருகில் சென்று,

“அதெப்படி தம்பி நிர்பயாட்ட மட்டும் அவ்ளோ ஜாலியா ரெமோவா இருக்கீங்க,ஐயர் என்ன உங்க சொத்தையா கேட்டாரு மந்திரம் தான கொஞ்சம் சிரிச்ச முகத்தோட தான் சொல்றது உங்க அந்நியன் லுக்க பாத்து பயந்து போய் இருக்காரு பாருங்க..”,என்றவளை பார்த்து அசடுவழிந்தவன் சற்றே முகத்தை தன்மையாய் வைத்துக் கொண்டான்…

மணபெண்ணை அழைத்து வர ஐயர் கூற அழகிய மாதுளை விதை நிற பட்டுபுடவையில் தங்க ஜரி வேலைகள் நிறைந்திருக்க அதற்கேற்றவாறு தங்க நிற நகைகள் அலங்கரிக்க அழகாய் தன்னருகில் வந்து அமர்ந்தவளை பார்த்து மெல்லிதாய் அவன் புன்னகைக்க லேசாய் சிரித்தவளின் முகத்தில் அதையும் மீறிய கவலையேதோ இருப்பதாய் தோன்றியது..

இருப்பினும் அப்போது எதையும் பேச முடியாது என்பதால் அமைதியாகிவிட்டவன் ஐயர் கொடுத்த திருமாங்கல்யத்தை அனைவரின் ஆசீர்வாதமும் அட்சதைகளாய் தங்கள் மேல் விழ நிர்பயாவின் கழுத்தில் அணிவித்தான்..கண்கள் குளமாய் தன்னவனை ஏறிட்டவளுக்கு அவனின் கண்களே ஆயிரம் சமாதானங்களை அளித்தது..

அதன்பின் அனைத்து சம்பிரதாயங்கள், வந்தவர்களின் வாழ்த்துக்கள் என நேரம் ஓடிவிட இருவருக்கும் தனிமையில் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது….அனைத்தும் நல்லபடியாய் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..நிர்பயாவை அழைத்து பூஜையறையில் விளக்கேற்ற கூற விளக்கேற்றி முடித்தவள் அதன் பின்னும் ராஜி அல்லது சரோஜாவை விட்டு அங்கு இங்கு நகரவில்லை..

இரவு சம்பிரதாயத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இருந்த ஓரிரண்டு விருந்தனர்கள் வழக்கமான நகைச்சுவையோடு அவளை கிண்டலடித்துக் கொண்டிருக்க அவளுக்குத் தான் நெருப்பின் மேல் நிற்பதாய் இருந்தது..அதன்பின் ராஜி வழக்கம்போல் பேச்சை மாற்றி அவளுக்கு சாதாரண புடவை அணிவித்து தளர பின்னி பூ வைத்து தயார் செய்ய சரோஜா பால் சொம்பை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து திருஷ்டி கழித்து நெற்றியில் முத்தம் கொடுத்து அனுப்பினார்..

நிர்பயாவோ மொத்தமாய் தனக்குள் உடைந்து போயிருந்தாள்..தன் நிலைமையை யாரிடம் கூறுவது..தன் மனநிலை யாருக்கும் புரிகிறதா இல்லையா??வழக்கமான சடங்குகளுக்கு தயார் பண்ணுவதில் எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கும் செய்கிறார்களே என ஏகப்பட்ட பயத்தோடும் குழப்பத்தோடும் மாடிக்குச் சென்றாள்..

வெளிக்கதவை பூட்டிவிட்டு திரும்பியவள் தனதறையை பார்க்க லேசாய் திறந்தவாறு இருந்தது..கட்டில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க ஊதுபத்தியின் நறுமணம் நாசியை துளைத்தது..கைகள் நடுங்க கதவை திறந்தவள் அவளுக்கு முதுகுகாட்டி அமர்ந்தவனை கண்டு இன்னுமாய் நடுக்கம் கொண்டாள்..மெதுவாய் கதவை தாழிட்டு திரும்பியவளை கண்டு தமிழ் எழுந்து அவளருகில் வந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.