(Reading time: 16 - 32 minutes)

ருவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டார்கள். அடுத்து இருவரும் உறங்க வேண்டும்.. சுடரொளிக்கு அதை நினைத்து தானாகவே படபடப்பும் தயக்கமும் சேர்ந்துக் கொண்டது. அதை உணர்ந்தவனாக சார்ஜில் போட்ட தன் அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டவன்,

“சுடர்.. நீ தூக்கம் வந்தா தூங்கு.. நான் அறிவுக்கிட்ட பேசிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேச் சென்றான். உண்மையிலேயே இப்போது வீட்டில் என்ன நிலவரம் என்று அவனுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அறிவழகனுக்கு தொடர்புக் கொண்டான்.

“ஹலோ என்னடா ரூம்க்கு போயிட்டீங்களா?”

“ம்ம் வந்தாச்சுடா.. ம்ம் அங்க எல்லோரும் எப்படிடா இருக்காங்க.. சாப்டாங்களா? அது தெரியாம எனக்கு சாப்பிடவே பிடிக்கல.. சுடருக்காக சாப்பிடனுமேன்னு சாப்பிட்டேன்.”

“மகி இங்க ஒன்னும் பிரச்சனையில்ல.. எல்லாம் நார்மல் ஆயிட்டாங்க.. எல்லோரும் இப்பத்தாண்டா சாப்பிட்டோம்”

“அருள் எப்படிடா இருக்கா.. அவக்கிட்ட பேசினியா?”

“அவ உன் மேல செம கோபத்துல இருக்காடா.. நிச்சயதார்த்தம் நின்னது கூட அவளுக்கு பெருசா தெரியல..  ஆனா அதுல உனக்கு இஷ்டமில்லங்கிறத நீ சொல்லாததும், சுடரை கல்யாணம் செஞ்சதும் தான் அவ கோபத்துக்கு காரணம்.. அவளை சமாதானப்படுத்த முடியல.. ஆனாலும் அத்தையை அவளால தான் சமாதானப்படுத்த முடியும்.. அதை மட்டும் எடுத்துச் சொன்னேன்.. அப்புறம் அவ தான் அத்தைக்கிட்ட பேசினா, பெரியப்பாக்கிட்டேயும் பேசினா, உன்னை வீட்ல சேர்த்துக்க சொன்னா.. ஆனாலும் பெரியப்பா அவர் முடிவுல உடும்பு பிடியா இருக்காருடா..”

“அது பரவாயில்லடா.. நான் வேணும்னா ஒருமுறை அருள்க்கிட்ட பேசவா..”

“இப்போ வேண்டாம்டா, உன்னோட போனை அவ எடுப்பாளாங்கிறதே டவுட் தான்.. அதனால ரெண்டு மூனு நாள் போகட்டும் அப்புறம் பேசு..”

“இல்லடா அவக்கிட்ட நான் சாரி கேக்கணும்.. நான் அவளுக்கு ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. சரி நீ இங்க தான வர”

“நான் எதுக்குடா அங்க?”

“பரவாயில்ல வாடா.. கொஞ்ச நேரம் பேசிட்டிருப்போம்.. அப்படியே வரும்போது என்னோட பைக்கை எடுத்திட்டு வா..”

“சரி வரேன்..” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

அறிவழகனிடம் பேசி முடித்ததும் மகிழ் அடுத்து அருள்மொழிக்கு தொடர்புக் கொண்டான். ஆனால் இவனின் அழைப்பு ஏற்கபடாமல் முழுவதுமாக மணி அடித்து அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றுக்கு நான்கு முறை முயற்சித்தும் அதே கதை தான், அறிவு சொன்னது போல அருள் அவன் மீது பயங்கர கோபத்தில் இருப்பதை உணர்ந்துக் கொண்டவன், அதற்கு மேலும் முயற்சிக்காமல் போனை பாக்கெட்டில் போட்டப்படி அங்கேயே அமர்ந்துக் கொண்டான்.

அறையில் இருந்த சுடரொளியோ மகி வெளியே போனதும், அணைத்து வைத்திருந்த தன் அலைபேசியை உயிர்ப்பித்தாள். அதில் அவள் முகநூல் பக்கத்தில் இருந்து நிறைய நோட்டிஃபிகேஷன், அதனுள் சென்று பார்த்தால், இவளுடன் கல்லூரியில் படிக்கும் சிலர், மகி ஏர்ப்போர்ட்டில் இவள் கழுத்தில் தாலி கட்டிய காணொளியை இவளுக்கு அனுப்பியிருந்தார்கள். கூடவே நிறைய கேள்விகளும் கேட்டிருந்தார்கள். மொத்தமாக அனைத்தையும் விட்டு செல்ல முன்பு முடிவெடுத்திருந்தாள். ஆனால் இப்போதோ அவர்களை நேரில் பார்க்கும் போது அவர்களுக்கு இதை குறித்து விளக்க வேண்டுமே என்றிருந்தது. ஆனாலும் யாருடனும் நெருங்கிய பழக்கம் இருந்ததில்லை.  அதனால் இது என் தனிப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.

அந்த காணொளியை மீண்டும் மீண்டும் ஒளிக்கவிட்டு பார்த்துக் கொண்டாள். அதை பார்க்க பார்க்க மனதில் உள்ள பாரம் குறைந்ததாகவே தோன்றியது. இனி மகி எனக்கே எனக்கானவன் என்று சொல்லி பார்த்துக் கொண்டாள்.

இந்த காணொளி காட்சியை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் அலைபேசியிலோ, மெமரி கார்டிலோ, பென் ட்ரைவிலோ பாதுகாத்து வைத்தாலும், அது நிரந்தரமான பாதுகாத்து வைப்பதென்பது சந்தேகம் தான், அதனால் அதை பொக்கிஷமாக பாதுகாக்கும் வழியை கண்டுப்பிடித்தாள்.

தன்னுடைய டைரியை எடுத்தாள், உடன் ஒரு பென்சிலும் எடுத்துக் கொண்டாள். காணொளியில் மகி அவள் கழுத்தில் தாலிக்கட்டும் அந்த காட்சியை அப்படியே நிறுத்தி வைத்தவள், உடனே அதை ஓவியமாக வரைய ஆரம்பித்தாள். பார்ப்பதை அப்படியே தத்ரூபமாக வரையும் திறன் அவளிடம் உள்ளது. கூட கற்பனைகளை கலந்து வரையவும் தேர்ச்சி பெற்றவள் அவள், அதில் அவர்கள் இருவரின் மனநிலையும் வேறாக இருந்திருக்க அது அப்படியே அவர் முகத்தில் பிரதிபலித்தது.

அவள் முகத்தில் அதிர்ச்சி, அவன் முகத்தில் அவளை போகவிடாமல் தடுப்பதற்கான பாவனை. அதை மாற்றி இருவரும் புன்னகையோடு நிற்பது போல் வரைந்தாள். அவர்கள் ஆடையையும் மாற்றியமைத்தாள். அவள் புடவையிலும் அவன் வேட்டி சட்டையிலும் இருப்பது போல் கற்பனை செய்து வரைந்தாள். முழுவதுமாக தீட்டி முடித்த அந்த ஓவியத்தை பார்த்ததும் மகிழின் குடும்பம் சம்மதிக்க அனைவரின் முன்னிலையில் இதே போல் அவர்கள் திருமணம் நடக்க வேண்டும் என்ற பேராவல் அவளுக்கு உருவானது. அந்த நிகழ்வு எப்போது நடக்கும் என்று மனம் இப்போதே எதிர்பார்க்க தொடங்கியிது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.