(Reading time: 20 - 39 minutes)

பூமிஜாவும் மகிழ்ச்சியாகவே வீடு வந்து அடைந்தாள். அன்று இரவு தூக்கம் வராமல், ஆதித்யா பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளது கைபேசி இசைக்க, எடுத்துப் பார்த்தால், புது எண்ணாக இருந்தது. இந்த நேரத்தில் தெரியாத நபர் யார் என்று யோசித்தபடி, அந்த அழைப்பை நிராகரித்தாள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில், மறுபடி அதே எண்ணில் இருந்து அழைப்பு. சற்று எரிச்சலில் போனை எடுத்து “ஹலோ” என்றாள்.

“சாரி” என்றது ஒரு கபீரக் குரல். அடுத்த நொடி புரிந்தது, அது ஆதித்யாவின் குரல் என்று. இவன் எதற்க்காக இப்பொழுது அழைக்கிறான் என யோசித்துக் கொண்டு இருக்கையில்...

“நீங்க ரொம்ப கோபமா இருப்பீங்கன்னு எனக்கு புரியுது. அதனால் தான் என்னோட போன் காலைக் கூட கட் செய்தீங்க. சாரி” என்றான் மறுபடி.

“இது உங்க கால்ன்னு எனக்கு தெரியாது. இந்த நேரத்தில் , புது எண்ணில்  இருந்து கால் என்றதால் தான் அழைப்பை ஏற்க்கவில்லை. அது நீங்கன்னு தெரியாது. சாரி” என்றாள் பதிலுக்கு.

“நீங்க ஏன் சாரி கேட்கணும், நான் தான் கேட்கணும். இந்த நேரத்தில் தெரியாத நம்பர் காலைக் கூட எடுக்க யோசிக்கிற பெண்ணைப் போய் நான் அன்று அப்படி பேசி இருக்க கூடாது. அன்று நீ எதோ ஒளிந்து அமர்ந்த மாதிரி எனக்கு தெரிந்தது. அதுவும் இல்லாமல் அந்த ஆளைப் பற்றியும் எனக்கு தெரியும். கொஞ்சம் சபலக் கேஸ். ஊருக்கு உபகாரம் செய்யும் பேரில்,  நல்லவர் வேடம் போடுபவர். அதனால் தான். சாரி” என்றான் மறுபடி.

“ம்” என்றாள் பூமி, வேறு ஒன்றும் பேச தோன்றாமல்.

“அணி ஆன்டியும் கூறினார்கள் அன்று ஆசிரமதிற்கு பணம் வசூலிக்கத் தான் நீ அந்த ஆளை அங்கு பார்க்க வந்தாய் என்று, மறுபடி சாரி” என்றான்.

“அப்பாடா, அப்படி என்றால் நான் அக்னி பிரவேசம் செய்ய வேண்டியது இல்லை அப்படித் தானே?” என்றாள் குறும்புடன்.  

“அவளது குறும்பை ரசித்தப்படி,  குட் நைட்” என்று கூறி போனை அணைத்தான் ஆதி.

அவன் குட் நைட் சொன்னாலும், பூமியால் தூங்க முடியவில்லை. ஆதியின் நியாபகமாகவே இருந்தது. எவ்வளவு பெரிய பணக்காரன், அவளிடம் சாரி சொல்ல எந்த அவசியமும் இல்லை, இருப்பினும் இவ்வளவு இறங்கி வந்து அவளிடம் சாரி சொல்கிறான் என்றால், அந்தளவு டவுன் டு எர்த்தாக இருக்கிறான் என்றே தோன்றியது.

அவனது தன்னம்பிக்கையான பேச்சாலும், தொழில் நடத்தும் திறமையாலும், அடுத்தவர்க்கு உதவுவதிலும், அவனது ஊனம் கூட தெரியாமல் போனது.

சிறு வயதில் இருந்தே எதோ ஒரு வகையில் ஊனமானவரையே வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க நினைத்து இருந்தது இப்பொழுது நியாபகம் வந்தது. ‘இப்பொழுது ஏன் இது நியாபகம் வருகிறது? அப்படி என்றால் நான் ஆதியை விரும்புகிறேனா?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் பூமி.

ஆம் என்றே மனம் கூறியது. அது தெரிந்ததும் மனம் பொங்கியது மகிழ்ச்சியால் பூமிக்கு. அதை நினைத்தபடியே  உறங்கிப் போனாள் பூமி.

று நாள் காலை எழுந்ததும், ஆதியிடம் எப்படி பேசலாம் என்று யோசித்தபடி இருந்த பூமிக்கு வேலையைப் பற்றிய நியாபகம் வந்தது. உடனே போனை எடுத்து, ஆதியை அழைத்தாள்.

“சொல்லுங்க பூமிஜா.” என்றான் ஆதி.

‘அழைத்தது நான் என்று தெரிகிறது என்றால் என்னுடைய நம்பரை சேமித்து வைத்து இருக்கிறான் என்று தானே அர்த்தம்?’ மனம் பறந்தது வானில் இறக்கை இல்லாமல் பூமிக்கு.

“வேலை விஷயமா உங்களைப் பார்க்கலாமா?” என்று பூமி இழுக்க.....

அவளது குரலைக் கேட்டதும், ஆதிக்கு சில் என்ற தென்றல் தீண்டியதைப் போல் இருந்தது. ஆனாலும் அவளுக்கு ஏற்றவன் தான் இல்லை, அதனால் இதை வளரவிடக் கூடாது என்று எண்ணி, ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் “அன்றே உங்களுக்கு அந்த தகுதி இல்லை என்று சொல்லி விட்டோமே” என்றான் கறார் குரலில்.

வந்த கோபத்தில் “ஹலோ, வேலை என்றாலே எனக்கு தான் என்று இல்லை. நம்ம ஆசிரமத்தில் படித்து முடித்த பெண்ணுக்கு தான் கேட்டேன். எனக்கு தகுதி இல்லை என்று நீங்க மட்டும் தான் அன்று சொன்னீங்க, உங்க கம்பெனி தேர்வுக் குழு என்னைத் தான் முதலில் தேர்ந்தெடுத்து இருந்தார்கள் என்று எனக்கு தெரியும்.” என்றாள் பதிலுக்கு பூமியும் கோபக் குரலில்.

ஒரு நிமிடம் அவளது கோபத்தை ரசித்த பின்  “ஆசிரம விஷயம் எல்லாம்  மேடம் அணிமலரை பேச சொல்லுங்க” என்றான்.

“நானும் அங்கு வேலை பார்ப்பவள் தான். எனக்கும் அதற்கு உரிமை இருக்கு” என்றாள் கோபம் குறையாமல்.

“தண்ணீர் ஊற்றும் வேலை தானே?” என்றான் கேலியாக...

“அன்று குளிர்ந்த நீருக்கு பதில் நல்லா கொதிக்கும் நீரை ஊற்றி இருக்க வேண்டும் உங்கள் மேல்” என்று கூறியபடி போனை அனைத்தாள் பூமி.

கோபம் கோபமாக வந்தது அவன் மேல். ‘பெரிய லார்டு லபக்குதாஸு. எங்க கிட்ட எல்லாம் பேசமாட்டராமா!!!’ என்று மனதிற்குள் நினைத்தபடி ஹாலுக்கு வந்தாள்.

அவளைப் பார்த்ததும், “கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றி விட்டு வா பூமி.” என்றான் சுனைனா. இருந்த மன நிலைக்கு கோவிலுக்காவது சென்று வரலாம் என்று கிளம்பினாள் பூமி. ஸ்கூட்டியை எடுத்தால், கிளம்ப மறுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.