(Reading time: 13 - 26 minutes)

அந்த நேரம் பார்த்து சுடரொளி கதவை திறந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அவன் கவனம் அந்தப்பக்கமே இருந்ததால் கடவை திறந்ததும் மகியின் பார்வை அங்கே திரும்பியது. முட்டிக்கு கீழே வரை இறங்கியிருந்த ஒரு பாவாடையும், ஒரு டீ ஷர்ட்டும் போட்டிருந்தாள். முடியை மொத்தமாக சுருட்டி கிளிப் போட்டிருந்தாள். வெளியில் வந்தவளை  அப்படியே பார்த்தபடி அவன் அமர்ந்து இருந்தான்.

கதவை திறந்த சுடரொளியின் பார்வையிலும் முதலில் மகிழ்வேந்தன் தான் தெரிந்தான். அவனின் வருகையை எதிர்பாராதவள் ஒரு நொடி அவனை நின்று பார்த்தாள். பின் அவனை கண்டும் காணாமல் எதற்கு வெளியில் வந்தாலோ அந்த வேலையை கவனித்தாள். கையில் கொண்டு வந்த காலி பாட்டிலில் சமையலறைக்குச் சென்று தண்ணீரை பிடித்தவள், அதை கொண்டு வந்து வரவேற்பறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, அதில் ஏற்கனவே வைத்திருந்த குளிர்ந்த தண்ணீர் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

அவனை பார்த்தும் பார்க்காதது போல் அவள் சென்றது மகிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்படித்தானேஅவன் வீட்டில் அவளிடம் பாராமுகமாக நடந்துக் கொண்டது  அவளுக்கும்கஷ்டமாக இருந்திருக்கும் என்று அப்போது அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதுவும் இல்லாமல் அவள் வீட்டிலேயே அவள் இப்படி ஒதுங்கி இருப்பதை பார்த்த போது அதுவும் அவனுக்கு வேதனையை தான் கொடுத்தது. அவனை அறியாமலேயே அவன் மனம் அவளையும் தங்களில் ஒருவளாய் நினைக்க ஆரம்பித்திருந்தது.

மாமா இன்னும் தன் கேள்விக்கு பதில் கூறவில்லையே என்று புவி மகியையே பார்த்துக் கொண்டிருக்க, சுடர் உள்ளே சென்றுவிட்டதால் அவன்  புவியிடம் திரும்பினான். “இங்கப்பாரு புவி.. உங்க அக்காக்கிட்ட பேசினா கிரிக்கெட்ல சேர்த்துக்க மாட்டேன்னு சும்மா சொல்லியிருப்பேன் டா.. அதை நீ சீரியஸா எடுத்துக்கிட்டியா? இங்கப்பாரு உன்னோட அக்காக்கிட்ட இனி நீ பேசணும் சரியா..?”

“நிஜமா வா மாமா..”

“ஆமா நீ அக்காக்கிட்ட பேச ஆரம்பிச்சா தான் அப்புறம் அப்பாவும் அண்ணாவும் பேசுவாங்க.. அம்மாக்கும் அப்போ தான் சந்தோஷமா இருக்கும்.. நீ பேசறது மட்டுமில்ல.. கூடவே உன்னோட அக்காவை நீ அங்க நம்ம வீட்டுக்கும் கூட்டிட்டு வரணும்.. அடுத்த சண்டே மலர், மணியெல்லாம் வீட்டுக்கு வராங்க.. எல்லோரும் ஜாலியா கிரிக்கெட் விளையடலாம்.. உன்னோட சுடர் அக்காவையும் சேர்த்து தான் சொல்றேன். சரியா?”

“அக்கா கூப்பிட்டா வருவாங்களான்னு தெரியலையே.. இத்தனை நாள் அம்மா கூப்பிட்டே வரலையே..”

“நாமல்லாம் இத்தனை நாள் அக்காக்கிட்ட பேசாம இருந்தோம் ல்ல அதான் அக்காவுக்கு அங்க வரப் பிடிக்கல..  இப்போ நீ அக்காக்கிட்ட பேசினா அவ ரொம்ப சந்தோஷப்படுவா.. அப்போ உனக்காக, நீ கூப்பிட்டா கண்டிப்பா வீட்டுக்கும் வருவா.. அப்படியே வர மாட்டேன்னு சொன்னாலும் நீ அடம்பிடிச்சு கூட்டிக்கிட்டு வரணும் சரியா?..” என்றதும் புவியும் மகிழ்ச்சியோடு சரியென்று தலையை ஆட்டினான். பின் நேரமாகிவிட்டதால் தன் அத்தையிடமும் மாமாவிடமும் விடைப்பெற்றுக் கொண்டு அவன் கிளம்பினான்.

புவியிடம் சொல்லிவிட்டு வந்ததால் அடுத்து வந்த ஞாயிறன்று சுடரை மகி மிகவுமே எதிர்பார்த்தான். அவளை புவி அழைத்து வருவானா என்பது தெரியாமல் தவிப்போடு காத்திருந்தான். அவனை அதிகம் தவிக்கவிடாமல் புவி சரியாக மகி அவனுக்கு கொடுத்த வேலையை செய்திருந்தான். மகி வீட்டுக்கு வந்து சென்ற அன்றே தன் சகோதரியிடம் பேசியிருந்தவன், இப்போது வற்புறுத்தி அவளை தன்னோடு அழைத்து வந்திருந்தான்.

புவி தன்னிடம் வந்து பேசியதில் சுடர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இத்தனை நாள் பேசாமல் இருந்தவன் இப்போது மகி வந்து சென்றபின் பேச ஆரம்பித்திருந்ததால், கண்டிப்பாக மகி தான் பேசும்படி சொல்லி சென்றிருப்பான் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இருந்தும் புவியிடம் எதையும் தோண்டி துறுவாமல், அவன் பேசியதில் உண்மையிலேயே மகிழ்ந்தாள். புவி பேச ஆரம்பித்ததும் தமிழும்  தன் சகோதரியிடம் சில சமயங்களில் பேசினான். அதைப்பார்த்து எழில் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இதேபோல் தன் கணவனும் சுடரிடம் பேச வேண்டும் என்று அவள் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்தது.

சிறிது நாட்களாக வராமல் இப்போது வரவே புகழேந்தியும் பூங்கொடியும் சுடரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இத்தனை நாள் இங்கு வராததற்கு என்ன காரணம் என்றுக் கேட்டனர். ஆனாலும் சுடர் தீம்பார்க்கில் நடந்ததை யாரிடமும் கூறவில்லை.

பெரியவர்கள் இல்லாத சமயம் மகியும் அறிவும் அன்று நடந்ததற்கு சுடரொளியிடம் மன்னிப்பு கேட்டனர். மலர்க்கொடியும் மணிமொழியும் சுடரிடம் நன்றாகவே பேசினர். சுடர் இங்கு வந்ததிலிருந்து இன்று தான் அவளை அவர்கள் முதன்முறையாக பார்த்தனர். அன்று சுடர் வரவே கூடாது என்று மகி சொன்னதை இருவரும் ஆமோதித்திருந்தாலும், இருவரும் திருமணமானவர்கள் இல்லையா.. புகுந்த வீட்டில் பிடிக்காத நபராக இருந்தாலும் கட்டாயத்தின் பேரில் அனுசரித்து போக வேண்டியிருக்கும்.. அதனால் என்னவோ முன்பு மகி சுடரிடம் பேசக் கூடாது என்று சொல்லியதை மறந்து அவளிடம் இயல்பாகவே பேசினர். இத்தனை நாளுக்கு இன்றைய சூழ்நிலை சுடரொளிக்கு பரவாயில்லை என்பது போல் இருந்தது.

ஆனால் அருள் மட்டும் சுடரிடம் இன்னும் பாராமுகம் காட்டினாள். காரணம் எதுவுமில்லாமல் ஆரம்பித்திலேயே சுடரை அருள்மொழிக்கு பிடிக்கவில்லை. அது இப்போதும் தொடர்ந்து கொண்டு இருந்தது. இதில் மகியும் அறிவும் அவர்களாகவே சுடரிடம் சென்று பேசியது வேறு அவளுக்கு பிடிக்காததால் அவள் சுடரை விட்டு ஒதுங்கியே இருந்தாள். பாட்டியும் சரி கலையும் சரி சுடரிடம் சுத்தமாக பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பேசும்போது அதில் அவள் மனதை வேதனைப்படுத்தும்படியாக சில வார்த்தைகள் இருக்கும் என்பதால் அவர்கள் பேசாமல் இருந்தாலே நல்லது என்று தான் அவளுக்கு தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.