(Reading time: 11 - 22 minutes)

நாராயணன் எரிச்சலடைந்தார். "நான் கேட்டுட்டு இருக்கேன் அமைதியா இருந்தா எப்படி? எனக்கு இதான் மரியாதையா?"

"அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க"

"என்ன பொறுமை வேண்டி கிடக்கு? நானும் பாத்துட்டு இருக்கேன் உங்க இஸ்டத்துக்கு எல்லாம் செஞ்சிட்டு இருக்கிங்க. அந்த போலிஸ்காரன் சந்தேகப்பட்டு நாளைக்கு வீட்டை தேடி வந்துட்டா?"

"அப்படியெல்லாம் நடக்காதுப்பா"

"நடக்காதுன்னா? அப்படி என்ன தான் சொல்லி தொலச்சிங்க அதையாவது சொல்லுங்க"

"நான் கட்டிக்க போற பொண்ணுனு சொன்னேன்"

நாராயணன் அதிர்ச்சியடைந்தார். "அமேலியாவையா அப்படி சொன்ன?"

"அபர்ணாவ சொன்னேன்"

நாராயணனுக்கு பேயறைந்தார் போல் அதிர்ச்சி. அதன் பின் எதுவும் பேசவில்லை. அவர் இதயம் கோபத்தால் தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்தது.

ருபது நிமிடம் பயண நேர முடிவில் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். வெளியில் சென்ற மகிழ்ச்சி துளியும் இல்லாமல் இயந்திரமாக வீட்டினுள் நுழைந்தார்கள். அமேலியாவும் வசந்தும் கூட ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

"மேகலா" நாராயணன் அழைத்தார்.

மேகலா நின்றாள், நாராயணனை பார்த்தாள்.

"அவன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் நாராயணன்.

பிரச்சனை உருவாகப்போகிறது என்று புரிந்துகொண்ட மேகலா, "இந்த நேரத்திலையா...?" என்று மெதுவாய் இழுத்தாள்,

நாராயணன் மேகலாவை முறைத்தார்.

"சொல்லுங்கப்பா" என்றான் வசந்த்

நாராயணன் அமேலியாவை பார்த்தார். மேகலா அமேலியாவை உள்ளே செல்லுமாறு சைகையில் கூற .எதுவும் புரியாதவளாய் அமேலியா அங்கிருந்து நகர்ந்தாள்.

நாராயணன் பேச்சை துவங்கினார். வசந்தின் முகத்தை அவர் பார்க்கவில்லை. வேறு திசையில் பார்த்தபடி பேசினார்.

"எதுக்காக அவன் அப்படி சொன்னான்?"

மேகலா வசந்தை பார்த்தாள்.

"எப்படி?"

"அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க போறேன்னு எதுக்கு அந்த போலிஸ்காரன் கிட்ட சொன்ன?"

"அவனை சமாளிக்கிறதுக்கு அப்படி சொல்ல வேண்டிய கட்டாயம்"

"அதுக்கு காதலின்னு தான் சொல்லணுமா? தங்கச்சி, தோழின்னு எத்தனையோ வார்த்தைகள் இருக்கே"

வசந்த் சிரித்தான். வசந்தின் சிரிப்பு நாராயணனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேகலா, வசந்தை சிரிக்காதே என்பது போல் கெஞ்சும் தோரணையில் கண்களால் சமிக்ஞை கொடுத்தாள்.

"தங்கச்சின்னு எப்படி நம்புவாங்க அப்பா? அவ என்ன அழகு! ஜாடையே ஒத்து போகாதே. அதுவும் இல்லாம போலிஸ்காரன் உங்களையே சந்தேகமா பார்த்தான். உங்க பொண்ணுன்னு சொன்னா நம்புவானா?"

"தோழின்னு சொல்ல வேண்டியது தான?"

"தோழின்னு சொன்னா எங்க தங்கிருக்காங்க ஏது தங்கிருக்காங்கன்னு விசாரிப்பான் அதுவும் சிக்கல் தான். அதனால தான் கட்டிக்க போற பொண்ணுன்னு சொன்னேன்"

வசந்த் கூறுவதும் நாராயணனுக்கு சரியென பட்டது.

"எதுக்காக அந்த போலிஸ்காரன் நம்ம வண்டியை நிறுத்தினான்?" என்று யோசனையோடு கேட்டார் நாராயணன்.

"அவங்களுக்கு பொழுது போகலப்பா, அதான் சும்மா நிறுத்தினாங்க" கிண்டலாய் சொன்னான் வசந்த்.

நாராயணன் வசந்த்தை முறைத்தார்.

"நீங்க கேக்குற கேள்வி அப்படி தான் இருக்கு. அவங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியுமா?"

"அது சரி, யாரு அந்த அபர்ணா?"

"கண்ணதாசன் எழுதின அவளுக்காக ஒரு பாடல்ன்ற கதையில வர அவரோட காதலி"

"என்னம்மோ எனக்கு எதுவும் சரியா படல"

"நீங்க பயப்படுற அளவு எதுவுமில்லைப்பா. இன்னைக்கு நாம பயந்தது போல லேசா நடந்தது அந்த பதட்டம்"

"பயப்படுறது எல்லாம் நடக்கறப்போ தான் இன்னும் பயமா இருக்கு" என்றார் நாராயணன்.

வசந்த் தன் அறையை நோக்கி சென்றான்.

நாராயணன் மேகலாவை பார்த்தார். "இன்னைக்கு நடந்தது எல்லாம் நீயே பார்த்தல்ல" என்று மேகலாவை உற்றுப் பார்த்த நாராயணன் அங்கிருந்து நகர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.