(Reading time: 15 - 29 minutes)

அவர் உள்ளே அனைத்து வேலையையும் முடித்துவிட்டார் என்பது தேன்நிலாவுக்கு தெரியும்... அவள் தான் பல மணி நேரமாய் அங்கே நிற்கிறாலே... இன்னும் சில கணங்கள் செல்ல மனதில் பயம் இருந்தாலும் சாப்பாடு தானே பரிமாற போகிறோம் என்று வேந்தனுக்கு பரிமாறசென்றாள்...(நேத்து வாங்குனது பத்தலை போல இருக்கு...)

அவனது தட்டில் மூன்று இட்லியை வைத்தவள் சட்னியையும் சாம்பாரையும் ஊற்றி அவனுக்கு அருகில் நகர்த்தி வைத்துவிட்டு  கொஞ்சம் தள்ளி நிற்க மொபைலைப் பார்த்துக் கொண்டே முதல் வாயை வாயில் வைத்தவன் தனக்கு பரிமாறியது யார் என்று தலையை நிமிர்த்திப் பார்த்தான்...

அவனுக்கு சாம்பாரும் சட்னியும் சேர்ந்துவிட்டால் பிடிக்காது...அதனால் எப்பொழுதும் மல்லி அவை கலக்காதவாறு தான்  பரிமாறுவார்....

ஆனால் தேன்நிலா பரிமாறியது இரண்டையும் கலந்து...அதனால் அவன் முதல் வாயிலேயே கவனித்துவிட்டான்...

அவள் தான் பரிமாறியது என்று தெரிந்ததும்,”அம்மா...அம்மா...” என்று வீடே அதிரும் வகையில் கத்தினான் மதிவேந்தன்...

அவனது கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் வர “எதுக்கும்மா கண்ட கண்டவங்களை எல்லாம் பரிமாற விடுறீங்க...”என்று கூறிக்கொண்டே அவள் பரிமாறிய தட்டை விசிறி அடிக்க அது நேராக வாசற்படியின் அருகில் விழுந்தது...

அவன் பேசிய பேச்சிலே அதிர்ந்து நின்றவள் அந்த தட்டு விழும் நேரத்தில் வாசலில் வந்து நின்றவர்களை பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் அழுகை கூட நின்றுவிட்டது...

அவளை பாவமாக பார்த்த மல்லி...தேன்நிலாவின் விழிகள் ஒரு இடத்திலே நிலைக்குத்தி நிற்பதைப் பார்த்தவர் வாசல் நோக்கிப் பார்க்க... அங்கே தேன்நிலாவின் மொத்தக்குடும்பமும் அதிர்ச்சியுடன் நின்றிருந்தனர்...

அவன் பேச ஆரம்பித்தப் போதே அவர்கள் வந்திருந்தனர்...அவனது நடவடிக்கைகளைப் பார்த்தவர்கள்  அப்படியே சிலையென நின்றுவிட்டனர்... தேன்நிலாவின் மொத்தக் குடும்பமும் துடிதுடித்துப் போய்விட்டது...

மல்லியும்,சந்தனபாண்டியும் நிலைமையை சமாளிக்க அவர்களை உள்ளே அழைத்தனர்...

உள்ளே வந்தவர்கள் அனைவரது கண்களும் தேன்நிலாவைப் பார்க்க அவளது கன்றியிருந்த கன்னங்கள் அனைவரையும் மேலும் அதிர்ச்சியடைய செய்தது...

கௌதமை வீட்டிலே விட்டு வந்திருந்தனர்... அவன் வந்து எதாவது பிரச்சனை ஆகிவிட்டால்  என்ன செய்வது என்றுதான் தேவி அவரை வீட்டிலே இருக்குமாறு கூறிவிட்டு வந்திருந்தார்... அது நல்லதுக்கு என்று நினைத்துக்கொண்டார்...

கதிரேசனின் உயிர் ஒரு நொடிபோய் தான் வந்தது...இதற்குதான் அவர் இந்த திருமணம்  வேண்டாம் என்றார்...எங்கே அவரது பெண் கேட்டாள்...தன்னை மனதில் வைத்துக்கொண்டு தனது மகளை வேந்தன் பழிவாங்குவான் என்று நினைத்துதானே அவர் திருமணமே நடக்காமல் மகள் தன் வீட்டிலே இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தார்...

ஆனால்  தேன்நிலாவின்  பிடிவாதத்தால்  அவர் நினைத்து பயந்த அனைத்தும் அவரது முன்னால் இன்று நடந்துக்கொண்டிருக்கிறதே...

அதை நினைத்தவர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு தனது மனைவியைப் பார்க்க, தனது கணவனின் எண்ணத்தை புரிந்துக் கொண்ட தேவி தனது மகளை போய் அழைத்துவந்தார்...

தனது அன்னை அருகில் வரவும் தனது கண்களை துடைத்துக் கொண்டு இதழில் ஒரு புன்னகையை படரவிட...

தனது அன்னையுடன் தனது தந்தையிடம் சென்றாள்... அவரது கைகள் அவளது கன்னத்தை தடவிக் கொடுத்தது...

அங்கு இருப்பவர்களிடம் என்னவென்று கேட்பார்...உறவு இருந்தும் அங்கே அவருக்கு உரிமை இல்லையே...தாங்கள் வந்தது  நடக்காது என்று தெரிந்தும் தன்னை தையிரியப் படுத்திக் கொண்டவர்...மதிவேந்தனிடம் சென்று

“மாப்பிள்ளை மறுவீட்டிற்கு அழைச்சிட்டு போலாம்னு வந்தோம்” என்று அவர் சொல்லி முடிக்க

“நீங்க யாரு நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்...” என்று கேட்க

“வேந்தா..”என்று மரகதம்,மல்லி,சந்தனபாண்டியன் என்று அதட்டல் குரல்கள் எழும்ப உள்ளே அப்பொழுதுதான் வந்த அன்னமும் அதே அதட்டலுடன்  வேந்தனை நோக்கி செல்ல அப்பொழுது  அவரது கண்களுக்கு தேன்நிலாவின் கன்றிய கன்னம் தெரிய அன்னத்திற்கு வந்த கோபம் வேந்தனின்  கன்னங்களில் அடியாக பாய்ந்தது....

இதை அங்கு இருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை...

“டேய் என்னோட பொண்ண அடிச்சியாடா...எதுக்குடா அடிச்ச...”என்று வேந்தனின் சட்டையை உலுக்க தனது அத்தையின் அடியை அமைதியாக வாங்கியவன்,கதிரேசனைப் பார்த்து “நான் மறுவீட்டுக்கு போனாலும்...இதோ என்னோட அத்தை வீட்டுக்கு தான் போவேன்...முன்ன பின்ன  தெரியாதா உங்க வீட்டுக்கு வரமாட்டேன்...” என்று கூறிவிட்டு அங்கு இருப்பவர்களை யாரையும் பார்க்காமல் விறுவிறுவென்று படியேறிவிட்டான்....

அங்கு நடந்தவைகள் அனைத்தும் அனைவரது மனதையும் கனக்க செய்தது... மனவேறுபாடுகள் எவ்வளவுதான் இருந்தாலும்  கதிரேசன்-தேவியின் சோர்ந்த முகம் சந்தனபாண்டியன் மற்றும் மல்லியை ஒரு நொடி அசைத்துதான் பார்த்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.