(Reading time: 22 - 43 minutes)

அதன்பின் எத்தனை முயன்றும் மதுவால் அவள் மாமியாரிடம் இயல்பாய் பேச முடியவில்லை..தன் தாய் கூறியது எத்தனை உண்மை என்பதை உணர்ந்தாள்.ஏதோ ஒரு அபிப்ராயம் ஒருவர் மேல் பதிந்துவிட்டால் அடுத்தடுத்த அத்தனையும் அதை பொறுத்தே அமைகிறது என்பது எத்தனை பெரிய உண்மை.

எல்லாம் புரிந்தும் அந்த தருணங்களை அவளால் மாற்ற முடியவில்லை.ஏதோ பேருக்கு பேசி சிரித்து என ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின்னான நாட்கள் தாய் தந்தையை பிரிய போகிற எண்ணத்திலேயே ஒருவித சலிப்போடு கழிந்தது மதுவிற்கு.வைரவன் மரகத்தின் நிலைமையோ அதைவிடவும் மோசம்.இரவு மகள் உறங்கச் சென்ற பின் இருவருமாய் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் தங்கள் மனதை தேற்றிக் கொண்டிருந்தனர்.

கைக்குள்ளயே இருந்துட்டா இல்ல அதான் கல்யாண நாள் நெருங்க நெருங்க ரொம்ப ஒருமாதிரி இருக்கு..”

ம்ம் இதோ இருக்கு திருவான்மியூர் நினைச்சா போய் பாத்துட்டு வரப் போறோம்..ஏன் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்குறீங்க..”

மரகதம் நீ எனக்கு ஆறுதல் சொன்னாலும் உன் மனசும் அதே நிலைமையில தான் இருக்குனு எனக்கு தெரியும்..”,எனும்போதே மரகதத்தின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

உண்மை தாங்க..செல்லமாவே வளர்ந்துட்டா..அங்கபோய் எப்படி சமாளிக்க போறாளோனு கவலையா இருக்கு..அதுவும் சம்மந்தியம்மா என்ன பண்ணாலுமே குத்தம் கண்டுபிடிக்குறா..பக்குவமான பொண்ணு தான் இருந்தாலும் ஒரு அம்மாவா பயப்படாம இருக்க முடில..”

அதெல்லாம் மது கெட்டிக்காரி பாத்து பக்குவமா நடந்துப்பா மரகதம்..நீ சொன்ன மாதிரி இதோ இருக்கு அவ வீடு நினைச்சா போய் பாத்துர போறோம்..”,என இருவரும் மாறி மாறி மனதை தேற்றிக் கொண்டிருந்தனர்.

அந்த அழகான திருமண நாளும் வந்தது.முந்தைய நாள் மாலை வரவேற்பு நடக்க ஆரம்பித்திருக்க அங்கு மணமகள் அறைக்குள் பெரிய களேபரமே நடந்து கொண்டிருந்தது.வைரவனின் மாமா முறையில் இருப்பவர் தன்னை ஒழுங்காக கவனிக்கவில்லை மரியாதையில்லை என கோவமாய் கத்திக் கொண்டிருக்க ஓரளவு பொறுத்துப் போன வைரவன் ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்தில் இப்படி பிரச்சனை செய்கிறாரே என்ற கோவத்தில் பதிலுக்கு கத்த ஆரம்பித்திருந்தார்.

மரகதம் என்ன செய்வதென புரியாமல் கண்கள் கலங்கி நிற்க மேலும் இரண்டு பேர் சேர்ந்து ஒரு வழியாய் பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.அறையை விட்டு வெளியே வந்த அன்னையை கண்டவளுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்ற அவரை மேடைக்கு அழைத்தாள்.

என்ன ஏதென விசாரிக்க, முடிந்த மட்டும் ஒன்றும் கூறாமல் கீழே இறங்கியிருந்தார் மரகதம்.வந்திருந்த கூட்டத்தில் அதற்கு மேல் அவரிடம் பேசும் வாய்ப்பே இல்லாமல் போனது மதுவிற்கு.அதன் பின் குடும்ப புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க ஸ்ரீகாந்தின் தாய்தந்தை தங்கையோடு வளைத்து வளைத்து போட்டோ எடுத்து முடித்தனர்.

மதுவிற்கோ சொல்லில் அடங்காத கோபம் நீண்டநேரமாய் தேடியும் தாயும் தந்தையையும் காணவில்லை.ஒரு வழியாய் அவர்களை அழைத்து வந்து மேடையில் நிறுத்தி புகைப்படம் எடுத்து முடித்தனர்.

இரவு தனதறைக்கு வந்ததுதான் தாமதமென இருவரையும் உண்டு இல்லையென ஆக்கிக் கொண்டிருந்தாள் மது.

ம்மா இரண்டு பேரும் ரொம்ப கடுப்பேத்துறீங்க..ஒரு போட்டோக்கு கூட வந்து நிக்காம அப்படி என்ன வேலை..அதான் மொத்த கான்ட்ராக்ட் விட்டாச்சுல..அப்பறமும் ரெண்டு பேரும் இப்படி சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

மது வேலைக்கெல்லாம் கான்ட்ராக்ட் விட்டா ஆச்சா வந்தவங்களை கவனிக்க வேண்டாமா இப்படி கவனிச்சே ஆயிரம் கெட்ட பேரு..இதுல உன்னோட வந்து போஸ் கொடுத்துட்டு இருந்தோம் என்ன என்ன சொல்லுவாங்களோ”,என கடுப்பாய் மரகதம் கூறினார்

அதான பாத்தேன் யாரு அப்பாவோட மாமா தான தெரியுமே உன் முகம் சரியில்லாதப்போவே நினைச்சேன்..இதுக்கு மேலயும் என்ன பண்ணணுமாம் எல்லாருக்கும்..நீயும் அப்பாவும் இப்படியே எல்லாருக்கும் தலையாட்டிகிட்டே இருங்க எல்லாரும் வேற என்ன பண்ணுவாங்க..”

மது கண்ணா நீ எதுக்கு இதெல்லாம் தலையில போட்டுக்குற..பிரச்சனை சண்டை இல்லாத கல்யாணம் உண்டா..விடு நம்ம வீட்டு முதல் விசேஷம் யாரும் எந்த குறையும் சொல்லிற கூடாது..அப்பா நா பாத்துக்குறேன்..”

என்னவோ போங்கப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..ஒரே நாள்ல நீங்களும் அம்மாவும் ஏதோ என்னை விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு..நா உங்க பொண்ணாவே நிம்மதியா இருந்துட்ட்றனே ப்ளீஸ்..”,என்றவள் மரகத்தின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்திருந்தாள்.

ஒவ்வொரு பெண்ணின் திருமணத்தின் முந்தைய இரவும் நிச்சயம் இப்படித்தானே நகரும்.சிலர் வெளிப்படுத்தி விட இயலும்.பலர் மனதிற்குள்ளேயே போட்டு நொந்து கொள்ளத்தான் முடியும்.இருபது இருபத்திரெண்டு வருடம் செல்லமாய் பெற்றோரின் மகளாய் சகோதர சகோதரிகளுக்கு சகோதரியாய் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து வரும் பெண்களை அடியோடு ஒரு மரத்தை பெயர்த்தெடுத்து அப்படியே வேறிடத்தில் நடுவதைப் போல் அவர்களின் வேரையே கையிலெடுத்து இன்னொரு குடும்பத்தின் ஒருத்தியாய் மாற்றி விடுவது தான் இந்த திருமணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.