(Reading time: 12 - 23 minutes)

“உன் நல்லதுக்குத் தான்மா சொல்றேன். இவனை விட அவங்கப்பா மோசமானவன். தேவை இல்லாமல் உன்னை டார்ச்சர் செய்வான்மா”

“எதுவான்னாலும் பரவாயில்லை சார். நான் பேஸ் பண்ணிக்கறேன்”

“உன் வீட்டில் உள்ளவங்களை வரச் சொல்லும்மா. அவங்க சொல்லட்டும். பின்னாடி அவங்க வந்து சார் எங்ககிட்ட சொல்லிருக்கலாமேன்னு சொல்லப் போறாங்க.” என, கிருத்திகா அவள் பெரியப்பவிற்குத் தான் போன் செய்தாள்.

காலையில் அவள் பெரியப்பவிற்குப் பயந்தது எல்லாம் வீட்டில் மட்டுமே. அவள் பெரியப்பா பிரதாப் இராணுவத்தில் பணியாற்றியவர். மிகப் பெரிய பதவியும், சிக்கலான ஊடுருவல்களையும் சமாளித்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக பணியாற்றியவர்.

அவரின் தம்பியான சக்தியும் அவரைப் போன்றே ராணுவத்தில்தான் பணியாற்றினார். ஆனால் ஒரு தீவிரவாத தாக்குதலில் அவருக்கு ஏற்பட்டக் காயங்களினால் அவரால் தொடர்ந்து ராணுவத்தில் பணி புரிய இயலவில்லை. இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது முப்பதுகளின் தொடக்கம் தான்.

அந்த நேரத்தில் தான் அவருக்கு துர்காவை மணமுடித்து வைத்தார் பிரதாப். சக்தியும், துர்காவும் சென்னையில் செட்டில் ஆகி விட, சக்தி ஒரு செக்யூரிட்டி ஏஜென்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

பெரியவர் ஓய்வு பெற்ற பிறகு அவரும் அந்த நிர்வாகத்தில் பங்கேற்று இருக்கிறார்.

அண்ணன் , தம்பி இருவருமே மிலிடரியில் இருந்தவர்கள் என்பதால், அவர்களின் பழக்க வழக்கம் எல்லாம் அதை ஒட்டியே இருக்கும். அதில் முக்கியமானது காலையில் சீக்கிரம் எழுந்து இருப்பது, கட்டாய உடற்பயிற்சி இது எல்லாம்.

கிருத்திகாவும் காலை எழுந்து கொள்வது தவிர மற்ற எல்லாவற்றையும் பின்பற்றுபவள் தான்.

பிரதாப்பிறகு எப்போதுமே தம்பி மகளின் மேல் பாசம் அதிகம். அதே சமயம் அந்த பாசம் அவளைச் சிறைப் படுத்தக் கூடாது என்றும் எண்ணுபவர். அதனால் தான் வீட்டில் கண்டிப்பாக இருந்தாலும், வெளியில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் அவளின் செயல்களுக்கு ஆதரவாகவே இருப்பார்.

பெண் குழந்தையை எல்லோரும் பாட்டு, டான்ஸ் கற்றுக் கொள்ள அனுப்ப, அவர் கராத்தே வகுப்புகளுக்கும், தற்காப்பு கலை வகுப்புகளுக்கும் சேர்த்து விட்டார். அதோடு பாரதியார் பாடல்களைக் கற்றுக் கொடுத்து, அவர் கண்ட புதுமைப் பெண்ணாக வாழும் எண்ணத்தை விதைத்தார்.

நல்லவேளையாக கிருத்திகா , அந்த அரசியல்வாதி மகன் இருவரின் பிடிவாதத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் கண்டக்டர், மற்றும் பயணிகளை அனுப்பி வைத்து விட்டார். இல்லாவிட்டால் அநேகம் பேருக்கு அன்றைக்கு அரை நாள் லீவ் விழுந்து இருக்கும்.

பிரதாப் கிருத்திகா போன் செய்ததும் உடனே கிளம்பி வந்து விட்டார். அவரை நேரில் பார்த்தவுடன் இன்ஸ்பெக்டர் தலையில் கை வைத்துக் கொண்டார்.

ஸ்டேஷன் நுழைந்த உடன் தன் தம்பி மகளைத் தேட, அவள் அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து இருந்தாள்.

நேராக அவள் அருகில் சென்று,

“என்னமா விஷயம்? என்றார்.

“பெரியப்பா, பஸ்சில் இந்த ஆள் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். அதனால் பஸ்சை நிறுத்தி , ஸ்டேஷன் புகார் செய்ய வந்தேன். இன்ஸ்பெக்டர் வீட்டில் உள்ளவர்களை வரச் சொன்னார்” என்று பதில் கூறினாள்.

அந்த ஆள் இப்போதும் சும்மா இராமல்.

“சும்மா தொட்டு தடவினதுக்கு என்னமோ ரேப் பண்ணிட்ட மாதிரி இந்த சீன் போடற? “ என

இப்போது பிரதாப் ஓங்கி ஒரு அறை விட்டார். இது வரை வாங்கிய அடி எல்லாம் ஒண்ணுமே இல்லை என்பது போல் இருந்தது. அவர் அடித்ததில் அவன் தெறித்து பத்து அடி தள்ளிப் போய் விழுந்தான்.

இன்ஸ்பெக்டர் தான் அவசரமாக “சார், விட்டுடுங்க நாங்க பார்த்துக்கறோம்” என்றார்.

“மிலிடரி ஆபீசர் வீட்டுப் பொண்ணுகிட்டே போலீஸ் ஸ்டேஷன்லே இருக்கும் போதே இந்த பேச்சுப் பேசறான். இவனை எல்லாம் வெளியில் விட்டால் , ரோட்டில் பொம்பளைங்க நடக்க முடியாமல் செய்வான். முதலில் ஈவ் டீசிங் கேசில் எப்.ஐ.ஆர் போடுங்க இன்ஸ்பெக்டர்”

“சார், ஏற்கனவே நம்ம பொண்ணுகிட்டே சொன்னேன். பெரிய இடம். வீணா உங்களுக்குத் தொந்தரவு ஆக வேண்டாம். இன்னும் வேணா நல்லா வாரன் பண்ணி நம்ம வீட்டுப் பொண்ணுகிட்டே வாலாட்டமா இருக்கச் சொல்லி வைக்கிறேன்”

யோசனையோடு தன் மகளைப் பார்த்த பிரதாப் “ஏம்மா, நீ ஏன் இன்னைக்கு ஸ்கூட்டிலே போகாம பஸ்சில் போன? என்று கேட்டார்.

“பெரியப்பா , அது வந்து என் பிரெண்ட் இவன் இருக்கிற ஏரியாலே தான் இருக்கா. அவள தினம் தொடர்ந்து வந்து சீன்டிகிட்டு இருந்து இருக்கான். லவ் பண்ணச் சொல்லி கம்பெல் பண்ணிருக்கான். அவ மாட்டேன்னு சொல்லவும் அசிட் ஊத்திடுவேன்னு மிரட்டி இருக்கான். அதோட சும்மா சாம்பிள்க்குன்னு சொல்லி பயமுறுத்தவும் செஞ்சுருக்கான். அவங்க வீட்டில் இவனுக்கு பயந்துகிட்டு யாருக்கும் தெரியாம ராத்திரியோட ராத்திரியா வேறே ஏரியாக்கு வீடு மாறி போயிட்டாங்க. அவளை டி.சி. வாங்க வச்சு வெளியூருக்கும் அனுப்பிட்டாங்க. அவ போகும் முன்னாடி இதை எல்லாம் சொல்லிட்டுப் போனாள். அதோட இவகிட்டே மட்டும் இல்லாம, நிறைய பேர் கிட்டே இதே மாதிரி நடந்து இருக்கானாம். அதான் இவனுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கலாம்ன்னு இப்படிச் செஞ்சேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.