(Reading time: 13 - 25 minutes)

“பாத்து டீ வாய்க்குள்ள ஈ போய்ட போகுது..”

“ஸ்ரீகா நம்ம அத்தையா இது..ஒரே நாள்ல இப்படி மாறிட்டாங்க..என் கண்ணை என்னாலேயே நம்ப முடிலயே..”

“இத்தனை கொழுப்பு ஆகாது டீ உனக்கு நல்லா பாத்துகிட்டாலும் கிண்டல் பண்ணா என்ன பண்றது?”

“சரி சரி நோ டென்ஷன் புருஷா..சும்மா கலாய்ச்சேன்..என்ன இருந்தாலும் ஒரு குழந்தைங்கிறது வாழ்க்கையே மாத்திடும்ங்கிறது எவ்ளோ பெரிய உண்மை இல்ல..”

“உண்மைதான் மது.அம்மாவே சின்ன குழந்தையாட்டம் இப்டியெல்லாம் பண்றதை பாத்தப்போ எனக்கும் அதான் தோணிச்சு.சரி நீ ரெஸ்ட் எடு நா அவங்களுக்கு எதுவும் தேவைனா எடுத்து கொடுத்துட்டு வரேன்.”

மதுவும் ஆபீஸில் பேசி பத்து நாட்கள் விடுமுறையும் அதன் பின் பத்து நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கியிருக்க சற்று நேரம் கண்ணயர்ந்தாள்.அதன் பிறகு அன்றைய நாள் அமைதியாய் கழிய மறுநாள் ஸ்ரீகாந்த் வேலைக்குச் சென்ற பிறகு அறையிலேயே இருப்பது ஒரு மாதிரி இருப்பதாய் தோன்ற ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த மாமியாரோடு வந்து அமர்ந்தாள்.

“என்ன மது தூங்கலயா?”

“இல்லத்த தூக்கம் வரல.ஒரு மாதிரி கடுப்பா இருக்கு அதான்.”

“ம்ம் இந்த நேரத்துல இது சகஜம்தான்.நல்ல பாட்டெல்லாம் கேளு.சுந்தரகாண்டம் வாங்கி படிக்கலாம்.குழந்தைக்கு ரொம்ப நல்லது.நம்ம வீட்டு குட்டிக் கண்ணனும் வயித்துக்குள்ள இருக்கும்போதே எல்லாம் தெரிஞ்சுகட்டும்.”,

“என்னத்த கண்ணன்னு முடிவே பண்ணிட்டீங்களா?பொண்ணா இருந்தா என்ன பண்ணுவீங்க?”

“மது எங்க குடும்பத்துல எல்லாருக்குமே முதல் குழந்தை பையன் தான்.அதுல எந்த மாற்றமும் இல்ல.அதனால உனக்கும் பையன் தான்.”

“என்ன இவ்ளோ சீரியஸா எடுத்துக்குறீங்க அத்தை.ஒரு பேச்சுக்கு சொன்னேன்.”

“பேச்சுக்கு கூட எதையாவது உளற கூடாது.என்ன வசனம் பேசினாலும் பையன் குழந்தைனா உசத்திதான்.அதுவும் இந்தகாலத்துல எல்லாம் ஒரு புள்ளையோட நிறுத்திக்குறாங்க..அப்படியிருக்க பெண் குழந்தை பிறந்தா என் புள்ள வாழ்க்கை புல்லா அதுக்கு சீர் செஞ்சுட்டே இருக்க வேண்டியதுதான்.”என்று புலம்பியவாறே தனதறைக்குச் சென்றுவிட மதுவிற்கோ பகீரென்று இருந்தது.

“இதென்ன இப்படி பேசுறாங்க.இந்த காலத்துல கூட இப்படி நினைக்குறவங்க இருக்காங்களா !!எந்த குழந்தையா இருந்தாலும் வலி பொறுத்து ரத்தம் சீந்தி தான பெத்துக்க போறோம்.இவங்க பேசுறத பார்த்தா ஒரு வேளை பெண் குழந்தை பிறந்தா என்ன பண்ணுவாங்களோ தெரிலயே..”,என தனக்குள் எதை எதையோ சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.

காலை தான் கிளம்பும் போது இருந்த உற்சாகம் இப்போது மனைவியிடம் இல்லாததை கண்டு ஸ்ரீகாந்த் என்னவென கேட்க ஒன்றுமில்லையென கூறிவிட்டாள்.

கிட்டதட்ட பத்து தினங்கள் கடந்திருக்க ஸ்ரீகாந்தின் தாயால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை.

“என்னதான் சொல்லு நம்ம ஊரு நம்மஊரு தான்.எப்படிதான் நாள் மொத்தமும் வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களோ.அப்பாவும் தங்கச்சியும் வேற எப்போ வருவ எப்போ வருவனு கேட்டுட்டே இருக்காங்க.இப்போதான் மதுவுக்கு வாட்மிடிங் பரவால்லையே நா ஊருக்கு போய்ட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன் டா.”

இதையே புராணமாய் பாட ஆரம்பித்திருந்தார்.ஒரு அளவுக்கு மேல் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீகாந்தே அவர்களை கிளம்புமாறு கூறிவிட்டான்.தன்னால் முடிந்ததை காலையில் அவளுக்கு செய்து கொடுத்தான்.

மரகதத்தை அழைக்கலாம் என்றால் வைரவன் ஏற்கனவே சர்க்கரை நோயாளி வேளாவேளைக்கு அவர்தான் பார்த்து அத்தனையும் செய்ய வேண்டும்.மதுவை அங்கு விடலாம் என்றால் வளைகாப்புக்கு முன்னர் அப்படியெல்லாம் அனுப்பகூடாது என ஒரு ஆர்பாட்டம்.

வெறுத்துப் போனவளாய் மது தானே சமாளித்துக் கொள்வதாய் கூறிவிட்டாள்.நான்காவது மாதத்தில் இருந்து மொத்தமாகவே நார்மல் ஆகியிருந்தாள்.விடுப்பும் முடிந்து வேலைக்குச் சென்று வந்தாள்.

அதன் பின்னான நாட்கள் தாய்மைக்கே உரிய பூரிப்போடு கடந்தாலும் அதையும் தாண்டிய வேலைப் பளு அவளை ஒரு வழியாக்கியது.மதியம் ஒரு பத்து நிமிடம் ஆபீஸிலேயே இருந்த நேப் அறையில் சென்று ஓய்வெடுத்து வருவாள்.

8 மணி நேர வேலை மூளையையே ஒரு வழியாக்கியது.காலையும் மாலையும் பேரூந்தில் செல்லும் நேரம் அவளுக்கும் குழந்தைக்குமானது.காதில் இயர்போனைப் போட்டு கந்தசஷ்டி கவசம் கேட்டவாறு குழந்தையோடு பேசி வருவாள்.

முதல் ஸ்கேன் முதல் அசைவு என அத்தனை அத்தனை சுகங்களும் பேரூந்திலும் அலுவலகத்திலுமே..வார இறுதிகளில் மட்டுமே கணவன் மனைவிக்கான நேரமாய் இருக்க அவளை அழை.துக் கொண்டு எங்காவது சென்று வருவான்.அந்த இரு தினங்களும் சமைக்க வேண்டாமென ஹோட்டல் சாப்பாடு சில நேரங்களில் பர்கர் பீட்ஸா இப்படியாய் பொழுது கழிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.