(Reading time: 16 - 32 minutes)

“அண்ணன் உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கிறவங்களை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிறான்.. தங்கச்சி உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கிறா.. ஆனா ஏன்? விபா உன்மேல காட்டும் அக்கறையும், அர்ச்சனா உன்மேல காட்டும் வெறுப்புக்கும் என்ன காரணம்? நீ எந்த அளவுக்கு அவங்களுக்கு நெருக்கமானவ.. அந்த குடும்பத்தில் உள்ளவங்களை பார்க்க கூடாதுன்னு தான் அன்னைக்கு விபா வீட்டுக்கு நீ வரலையா?” என்று பாலா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

அவனையும் விட புவனாவோ, இல்லை மதுரிமாவோ தான் யாதவிக்கு நெருக்கமானவர்கள், அவர்களை வைத்து தான், யாதவியின் கடந்த காலத்தை அறிந்துக் கொள்ள வேண்டுமென பாலா முடிவெடுத்தான்.

“சரி ரூபினி வீட்டு விஷயம் தெரிஞ்சு தான் ரூபி கூட போன நீ இன்னும் வீட்டுக்கு வரலன்னு அம்மா எனக்கு போன் செஞ்சாங்க..

நீ விபா வீட்டுக்கு போன விஷயத்தை சொல்ல வேண்டாம்.. அம்மா கேட்டா ரூபி போனப் பிறகும் சும்மா கடையை சுத்தி பார்த்தேன்னு சொல்லு..” என்று அவன் யோசனை கூறவும், யாதவி தலையாட்டிக் கொண்டாள்.

அடுத்து பாலா அமைதியாக கார் ஓட்டியப்படி வர, யாதவியின் எண்ணம் முழுதும் விபாகரனை பற்றி தான்,

அவன் கோபத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றாலும் அதில் மனதளவில் குற்ற உணர்வு நீங்கி, நிம்மதி வந்து குடி கொண்டதை அவளால் மறுக்க முடியாது. ஆனால் இப்போது அவன் செய்த விஷயத்தை பாலா சொன்னபோது,

எதற்காக இந்த அன்பும் அக்கறையும் என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது. நேற்று அவன் விழப்போனவளை தாங்கிப் பிடித்ததையே நினைத்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போனவள், இன்று இதை மட்டும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வாளா? அதற்கான தகுதியை அவள் இழந்து வெகு காலம் ஆகிவிட்டது. இந்த அக்கறைக்கும் அன்புக்கும் பதிலுக்கு அவளும் அப்படி நடந்துக் கொள்ளும் அறுகதையற்றவளாக அல்லவா இருக்கிறாள்? இனி இன்னும் எப்படியெல்லாம் இப்படிப்பட்ட துன்பங்களை அவள் எதிர்கொள்ள போகிறாள்? என்பது தெரியாமல் மனதளவில் துடித்துப் போனாள்.

வீட்டை அடைந்ததும் காரை விட்டு இறங்கிப் பார்த்தால், வேறு யாரோ வெளியாட்களின் கார் அங்கு நின்றுக் கொண்டிருந்தது.

இது யாருடையது என்று யாதவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “அட இது சாத்விக் கார்.. வந்திருக்கிறது சாத்விக் தான் போல..” என்று சொல்லிக் கொண்டே பாலா வீட்டுக்குள் நுழைய,

இப்போது தான் விபாகரனை பார்த்துவிட்டு வந்தால், இப்போது சாத்விக். இவர்களையெல்லாம் பார்க்காமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

உள்ளே சென்றால் சாத்விக்கோடு பன்னீரும் அமர்ந்திருந்தார். புவனா தான் அவர்களை வரவேற்று குடிக்க ஏதோ கொடுத்திருந்தார். இன்னும் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அவர் கேட்கவேயில்லை.

“ஹாய் சாத்விக்.. வாங்க எப்போ வந்தீங்க..?” என்று பாலா சாத்விக் கைகளை பற்றி குலுக்க,

“ம்ம் கொஞ்ச நேரம் ஆகுது..” என்றவன், யாதவியை பார்த்தான்.

“இவன் எதற்காக எப்போதும் இந்த ஆளை கூட சேர்த்துக் கொண்டு சுற்றுகிறான் என்பது அவளுக்கு புரியாமல் அவர்களை பார்த்தப்படி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

நமக்கிடையில் ஒன்றுமில்லை என்று தெளிவாக கூறியவன் தான் சாத்விக், அந்த நேரம் அவனது வார்த்தை அவளை கஷ்டப்படுத்தியது. ஆனால் இப்போது இருக்கும் மனநிலையில் அவன் அன்று செய்தது சரி என்று அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள். அதனால் அவன் மீது துளி கோபமோ வருத்தமோ அவளுக்கு இப்போது இருக்கவில்லை.

ஆனால் இவளை காணவில்லை என்று தெரிந்து அவன் குற்ற உணர்வில் இருக்கிறான் போல, அதனால் தான் அவளது தந்தையை உடன் வைத்திருக்கிறான். அவளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறான் என்பது தான் அவள் யூகம்.

மற்றப்படி அவனுக்கு அவள் மேல் காதல் இருக்குமென்பதெல்லாம் அவள் இந்த நேரம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. குற்ற உணர்வால் தான் இவ்வளவு அக்கறை கொள்கிறான் என்பதையே இந்த நேரம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பிரபலமாக திகழ்பவன், விரைவில் திருமணம் செய்ய இருப்பவன், இப்படி அவளை அடிக்கடி சந்திக்க நினைப்பது நல்லதில்லை என்பது தான் அவளது எண்ணம். அதை சாத்விக்கிற்கும் புரிய வைத்துவிட நினைத்தாள்.

“தேவி.. ரூபி எப்பவோ அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாளாம்.. நீ இவ்வளவு நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்த?” என்ற புவனாவின் கேள்வியில் நடப்பிற்கு வந்தாள்.

“அது சும்மா கொஞ்ச நேரம் கடையை சுத்திப் பார்த்துட்டு இருந்தேன் ம்மா..” என்று பாலா சொன்னதை அப்படியே கூறினாள்.

“சாத்விக்கும் உன்னோட அப்பாவும் உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க..” என்று அவர் சொல்ல,

இதுவரை எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்த சாத்விக்கும், “யாதவி.. நீ இவ்வளவு நாள் எங்க இருந்தேன்னு தெரியல.. இப்போ நீ பாதுகாப்பா இருக்கேன்னு தெரிஞ்சுடுச்சு.. பன்னீர் அங்கிளும் நீ இல்லாம ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டு இருந்தார்.. அதனால நீ இனி அங்கிள் கூட அவரோட வீட்டுக்கு வரணும்..” என்றுக் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.