(Reading time: 11 - 21 minutes)

“யா அலாஹ்..உண்மையை கூறினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினால் நான் ஒன்றும் செய்ய இயலாது.நேற்றிரவு நீ மூர்ச்சையான பின்பு உன் தந்தைக்கு தகவல் அனுப்பியாகிவிட்டது, நாட்டின் எல்லையில் எனை சந்திக்க வேண்டுமென..என்னுடைய கணிப்புப்படி இந்தநேரம் அவர் உனக்காக காத்துக் கொண்டிருப்பார்.இப்போது வருவதும் வராததும் உன் விருப்பம்.”, என்றவன் கைகளை மார்பின் குறுக்கே இறுகக் கட்டி நின்றவாறு அவளைப் பார்த்திருந்தான்.

விழிகளை மூடி ஆழ்மூச்செடுத்தவள் சோர்வாய் எழுந்து நிற்க அவன் முன்னே சென்று வாசலை மறித்தவாறு நின்று வீரர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிவிட்டு ஒருபுறமாய் திரும்பி அவளை முன்நோக்கிச் செல்லுமாறு கையசைத்தான்.

“முந்தைய தினம் தன் மீது விழுந்த பார்வைகளுக்கும் இப்போது இருக்கும் பார்வைகளுக்கும் தான் எத்ததுனை வித்தியாசம்.பெண் என்றால் காட்சிப் பொருளாய் தான் பார்க்கத் தோன்றும் போலும்.”,என்றெண்ணியவளுக்கு விரக்திப் புன்னகை ஒன்று உதிர்ந்தது.

சில மணி நேர பயணத்தைத் தொடர்ந்து சற்று தூரத்தில் தன் தந்தையோடு சிலரும் அங்கு நிற்பதை கண்டவளுக்கு மனம் வெகுவாய் வலித்தது.தாயும் தந்தையும் இதை எவ்வாறு தாங்கிக் கொள்ள போகிறார்களோ என்பதை எண்ணி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள் சிவகங்காவதி.

அங்கு சேதிராயனுக்கும் அவர் மனைவிக்கும் இதயமே வெடித்து விடும் போன்றதொரு உணர்வு.ஆசையாய் வளர்த்த பெண்ணை இப்படி கைகள் விலங்கிட்ட நிலையில் தள்ளாடும் நிலையில் காணத் தான் முடியுமோ!

“மகளே சிவகங்காவதி!!!! இந்த நிலையில் உனைக் காணவா நான் உயிர் கொண்டு இருக்கிறேன்.”

“தாயே எனக்கொன்றுமில்லை தயை கூர்ந்து வருத்தம் கொள்ளாதீர்கள்.”

அதற்குள் வெகுண்டெழுந்த சேதிராயனோ, “ஒரு பெண்ணை கைதியாக்கி நாட்டை அடிபணிய வைக்கிறாயே இதுவா உன் போர் தர்மம்?”

“பாளையத்தாருக்கு தெரியவில்லை போலும் போரிலும் காதலிலும் அனைத்துமே தர்மம் தான் வேண்டுமெனில் உன் ஆசை மகளை கேட்டு கொள்ளுங்கள் நான் கூறுவது எத்துனை உண்மையென அவள் உரைப்பாள்.

அது மட்டுமன்றி நாங்கள் ஒன்றும் தேடிப் போய் உங்கள் மகளை சிறைப்பிடித்து வரவில்லை.உங்களுக்கு விரித்த வலையில் தானே வலுக் கட்டாயமாய் வந்து சிக்கியிருக்கிறார் தங்களின் தவப் புதல்வி”

அவன் கூறுவதையெல்லாம் ஒருவர் மொழிப் பெயர்ப்பு செய்து கொண்டிருக்க கேட்டவர்களுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது.

“மகளே என்ன இதெல்லாம் ஏதேதோ கூறுகிறார்களே!! உனக்கு ஏற்கனவே தெரியுமா இவர்களின் திட்டமெல்லாம்?”, எனும்போதே படைத் தளபதியின் முகத்தை சிவகங்காவதி நோக்க அவரோ பதட்டமாய் தன் பயத்தை மறைக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

சிவகங்காவதி வாய் திறக்கும் முன் காற்றில் பாய்ந்து வந்த அம்பு படைத் தளபதியின் நெஞ்சைக் குறிப்பார்த்திருந்தது.உயிர் போகும் வேளையில் அவர் கண்கள் நான்குபுறமும் சுழல மற்றவர்களோ நடந்ததை உணர முடியால் உறைந்து நின்றிருந்தனர்.

சிவகங்காவதி அங்குமிங்குமாய் பார்வையை சுழற்ற கண்கள் குளமாக அவளின் எதிர்புறம் வந்து நின்றாள் மணிமேகலை.

“என்ன மேகலை இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டாய்?”

“அரசே இந் நாட்டின் பிரஜையாய் நான் செய்ததில் எந்த தவறும் இல்லை.அதே நேரம் என் தந்தையின் மகளாய் அவர் தேசத் துரோகி என்ற பட்டத்தை பெறுவதில் எனக்கு உடன்பாடில்லை அதனாலேயே இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிந்தேன்.”,என்றவள் மௌனமாய் கண்ணீர் சிந்தினாள்.

“அக்கா!!!”

“அப்படி அழைக்காதே சிவகங்காவதி இந்தநிலையில் உனைப் பார்க்க மனம் வெதும்புகிறது.ஏனடி இப்படி ஒரு பிரச்னையில் சிக்கினாய்.ஏன் எனக்கு தைரியம் வழங்கி நாட்டை காக்கும் பொறுப்பை அளித்தாய். இது எதுவுமே நடவாமல் இருந்திருந்தால் நம் பழைய வாழ்க்கை எத்தனை அழகானது. ஒரே இரவில் இப்படியா தலையெழுத்தே மாறிப் போக வேண்டும்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“போதும் உங்களின் கண்ணீர் நாடகம்,என்னால் இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது.உங்கள் பிரச்சனையை பிறகுத் தீர்த்துக் கொள்ளுங்கள்.எனக்கு இப்போது வேண்டியது ஒரு முடிவு,நாட்டை என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு தங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள்.இல்லையேல்… “ என்றவன் தோள் குலுக்கி அமைதி காத்தான்.

சேதிராயனின் அமைதி சிவகங்காவதியை கொதிக்கச் செய்தது.”தந்தையே இதில் யோசிக்க ஒன்றுமில்லை நாட்டைத் தவிர எதை பற்றியும் யோசிக்கத் தேவையில்லை பிள்ளை பாசத்தில் தவறிழைக்காதீர்கள். நம் மக்களின் வாழ்க்கையை பணயமாக்காதீர்கள்.

நான் இல்லையென்றாலும் உங்கள் மகளாய் மணிமேகலை இருக்கிறாள்.ஆனால் நாட்டை ஒருமுறை இழந்து விட்டால் பின் எதுவும் நம் கையில் இல்லை.”

“மகளே அனைத்தும் சரி அதற்காக உன்னை இழப்பதற்கு எங்கணம் நான் சம்மதிப்பேன்.நடப்பதையெல்லாம் பார்த்தால் என்னுயிர் போய்விட்டால் நிம்மதி என தோன்றுகிறது.”

“தந்தையே விவேகத்தை இழக்காதீர்கள். இது என் ஈசன் அளித்த உயிர் அதை அவனே எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை அல்லவா? சிறு குழந்தையாய் கண்ணீர் வடிப்பதை நிறுத்தி தெளிவான முடிவைக் கூறுங்கள்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.