(Reading time: 11 - 21 minutes)

“என் பெயர் சிவகங்காவதி!!!”

“இருக்கட்டும் எனக்கு அப்படி அழைக்க கடினமாய் இருக்கிறது..அதுமட்டுமின்றி அடிமைகளைப் பெயர் கூறி அழைப்பதே பெரிய விடயம் புரிந்ததா?”

நஸீம் அவ்விடத்தை விட்டு அகலும் வரையுமே சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டவளுக்கு அதன் பின் தன் கண்ணீரை அடக்கும் வழித் தெரியவில்லை.

தேற்ற ஆளின்றி அழுது ஓய்ந்தவளுக்கு மனதில் ஒருவித திடம் எழுந்திருப்பதாய் உணர்ந்தாள்.அன்றைய பொழுது அப்படி இப்படியாய் கழிந்தது.மறுநாள் அதிகாலையிலேயே காவலாளி ஒருவன் வந்து அவள் மீது தடி வைத்து அடித்து எழுப்பினான்.

எதிர்பாராத நிகழ்வில் பதறிப் போய் கண்விழித்தவளை வெளியே வருமாறு சங்கிலியைப் பற்றி இழுத்தவாறு அழைத்துச் சென்றவன் சற்றுத் தொலைவில் இருந்த முட்புதரருகில் நிறுத்தினான்.

“ஏய் இதோ பார் “,என்றவனை பார்வையாலேயே எரிக்க நினைத்தவளாய் முறைக்க அந்த இருள் சூழ்ந்த பொழுதிலும் அவளின் உக்கிரம் உணர்ந்தவனாய் சற்று விலகி நின்றான்.

“இங்கு இருக்கும் முட்புதர்களை சுத்தம் செய்வதே உங்களுக்கான இன்றைய பணி.இது உசூரின் ஆணை.”

ஒன்றும் பதில் பேசாமல் கையை நீட்டி சிறு வாளை வாங்கியவள் நகர முற்பட அப்போது தான் தன் காலில் கட்டியிருந்த சங்கிலியை உணர்ந்தாள்.அவளின் கேள்வி உணர்ந்தவனாய் காவலாளியே பதில் கூறினான்.

“சங்கிலி அவிழ்த்து விடப்பட மட்டாது.வேலை செய்வதற்கு தேவையான அளவு தங்களால் நடக்க இயலும்.”

வேலையை ஆரம்பித்தவளுக்கு முதலில் அது பெரிய விடயமாய் தெரியவில்லை.ஆனால் நேரமாக ஆக சூரியனின் உக்கிரத்தை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

ஒரு வாய் நீர் கூட அருந்தாமல் கண்கள் சொருக அவளின் மென் கரங்கள் இரண்டும் சிவந்து காய்த்துப் போய் நடுங்க ஆரம்பித்திருந்தது.ஒரு கட்டத்தில் வலிமை அனைத்தும் வடிந்து போனவளாய் அப்படியே மூர்ச்சையாகி சரிந்து விட்டிருந்தாள்.

மீண்டும் கண்விழித்த போது தனக்கான சிறைப் பகுதியில் படுத்திருக்க அவள் முன் கைக்கட்டி கம்பீரமாய் நின்றிருந்தான் இஷான்.

“அந்தோ பரிதாபம் என்ன இளவரசியாரே ஒரேநாளில் இத்துனை பரிதாபமாய் ஆகிவிட்டது தங்களின் நிலைமை.இருந்தும் ஏனோ என் மனம் முழுமையாய் மகிழ்ச்சி அடைய மறுக்கிறதே! சரி இருக்கட்டும் இங்குதானே இருக்கப் போகிறீர்கள் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு தங்களிடம் வேலை வாங்கிக் கொள்கிறேன்.

மிகவும் களைப்பாகத் தோன்றுகிறீர்களே இதோ உங்களுக்கான அறுசுவை உணவு எடுத்துக் கொள்ளுங்கள்”,என்று அவன் ஏளனமாய் கூறி முடிக்க காவலாளி தன் கையில் மிகப் பெரிய தட்டோடு உள்ளே நுழைந்தான்.அவள் முன் தட்டை வைத்தவன் அதை மூடியிருந்த துணியை எடுக்க இரு விதமான புலால் சேர்த்த உணவு நிரம்பியிருந்தது.

அதைப் பார்த்தவள் சட்டென முகத்தை சுழித்து அவனை ஏறிட்டாள்.முகத்தின் புன்னகைப் பெரிதாக அவளை நோக்கி சற்று குனிந்தவன்,

“என்னவாயிற்று கங்கா..இதுதான் எங்களின் உணவு.அதுவும் அரச குடும்பத்தின் உணவு தெரியுமா?எந்த கைதிக்கும் அடிமைக்கும் கிடைக்காத பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.மகிழ்ச்சியோடு உண்டுவிட்டு இளைப்பாறு.மீண்டும் நாளை சந்திக்கலாம்.”

“தயைகூர்ந்து இதை எடுத்துச் சென்று விடுங்கள்!

“என்ன ஒரு அதிசயம் நீ என்னிடம் இறங்கி வந்து பேசுகிறாயா?வாஹ்ரே வா.. கொடுத்த எதையும் திருப்பிப் பெறும் வழக்கம் எங்களிடத்தில் இல்லை.ம்ம் இருப்பினும் இதை வேண்டாம் என்பதற்கான நியாயமான ஒரு காரணத்தை கூறினால் ஒரு வேளை யோசிக்கலாம்.”

“உணவை வீண் செய்வது எனக்குப் பிடிக்காத ஒன்று.இந்த ஒரு வேளை உணவின்றி மடிந்து போகும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இவ்வுலகில்.அப்படியிருக்க இதை நான் உண்ணாமல் அப்படியே வைத்திருந்து கெட்டுப் போகச் செய்தாலும் ஆத்திரத்தில் தூக்கியெறிந்து வீண் செய்தாலும் என் வாழ்வில் நான் இழைக்கும் மிகப் பெரிய பாவமாகவே அதை கருதுவேன்.அதனால் தான் இதை எடுத்துச் சென்றுவிடக் கூறுகிறேன்.”

“உனக்கு பேசவா கற்றுக் கொடுக்க வேண்டும்.இருப்பினும் இப்போது இந்த உணவத் திருப்பி அனுப்பப்பட்டால் இன்று நீ உழைத்த உழைப்பிற்கு பட்டினியாகத் தான் இருக்க நேரிடும்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“மனக்கூடு வெறுமையாய் இருக்கும் போதே உயிருக்கு எந்தவித சேதாரமும் இல்லாத போது உடல் பட்டினியால் எதுவும் நேரக்கூடுமோ?!இருக்கட்டும் பெரிதாய் எந்தப் பசியும் இல்லை.”

அவளின் பதிலில் மேலும் மேலும் வெறிக் கொண்டவனாய் மாறிக் கொண்டிருந்தான் நஸீம்.ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தவன் தனதறைக்கு வந்து எங்கோ இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் வந்த சமீரா பின்னிருந்து அவன் தோள் பற்ற சூழ்நிலை உணர்ந்தவனாய் அவர்புறம் திரும்பினான்.

“தாதி இது தங்களின் ஓய்வு நேரமாயிற்றே!இங்கு என்ன செய்கிறீர்கள்?”

“நஸீமிற்கு என்ன குழப்பம் எதோ ஒன்று அவனை அல்லல்படுத்துவதாய் தோன்றுகிறதே!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.