(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 55 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

திரவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளியே சுடரொளி மீண்டும் தந்தையை பார்க்க முடியுமா? என்ற தவிப்பில் வலப்பக்கம் அமர்ந்திருந்த எழிலின் கைகளைப் பிடித்தப்படி இடப்பக்கம் அமர்ந்திருந்த ஆனந்தியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

நல்ல உறக்கத்தில் இருந்த போது எழில் “என்னங்க..” என்று அலறிய சத்தம் கேட்டு விழித்தவள், பதட்டத்தில் எழுந்து வந்து பார்த்த போது கதிரவன் நெஞ்சில் கை வைத்தப்படி மயங்கி சரிந்திருந்தார். அவரை அந்த நிலையில் கண்டதும், அவளையும் மறந்து “அப்பா..” என்று அழைத்தப்படி அவரின் அருகில் அவள் அம்ர்ந்திருக்க, நீண்ட காலங்கள் கழித்து மகள் அவரை அப்பா என்று அழைத்ததை கூட அவரால் உணர முடியாத நிலையை என்னவென்று சொல்வது?

“என்ன ஆச்சு சித்தி அப்பாவுக்கு..” என்று கேட்டவள், அப்போது தான் அங்கிருந்த டைரியை பார்த்தாள்.

“அய்யோ இதையெல்லாம் அப்பா படிச்சாரா? அதனால தானா அப்பாக்கு இப்படி ஆச்சா..” என்று மனதில் நினைத்தவள், உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மனித்தவள்,

“சித்தி அப்பாவை உடனே ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போகணும்.. இங்க மெயின் ரோட்ல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கே அங்கயே கூட்டிட்டு போகலாம்.. நான் போய் காரை எடுக்கிறேன்..” என்றவள்,

அவளை போலவே எழிலின் அலறல் சத்தம் கேட்டு வந்து அப்பா இப்படி இருப்பதை பார்த்து அழுதுக் கொண்டிருந்த புவியை பார்த்து,

“புவி.. பக்கத்து வீட்ல இருக்க அங்கிளை கொஞ்சம் எழுப்பி கூட்டிட்டு வா.. அப்பாவை அவர் கார்ல கொண்டு வந்து படுக்க வைப்பாரு..” என்று சொல்லவும், அவனும் வேகமாக ஓடினான்.

அடுத்த பத்து நிமிடங்களில் அவரை கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கவும், மருத்துவர்களும் துரிதமாக செயல்பட்டனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் புவி புகழேந்தி வீட்டிற்கும், ஆனந்திக்கும் அலைபேசி மூலம் தகவல் சொல்ல இப்போது அனைவருமே மருத்துவமனையில் தான் இருந்தார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சில மணி நேரத்திற்கு முன்பு தானே நல்லப்படியாக அருள்மொழியின் பிறந்தநாள் விழாவில் கதிர் கலந்துக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், இப்படி திடீரென நெஞ்சுவலி வந்தது எதனால் என்பது தெரியாமல், “என்ன ஆனது?” என்று அனைவருமே கேள்வி எழுப்ப,

சுடரைப் பற்றிய டைரியை படித்து தான் இப்படி ஆனது என்று முழு விவரத்தையும் கூறாமல், சுடர் வரைந்த ஓவியத்தை பற்றி ஆனந்தி கூறியதிலிருந்தே அவர் சுடரை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததாகவும், அவளைப் பற்றி தன்னிடம் வருத்தமாக பேசியதைப் பற்றி மட்டுமே எழில் அனைவரிடமும் கூறினாள்.

மகி சுடர் கழுத்தில் தாலி கட்டியதிலிருந்தே சுடரை முத்துப்பாட்டி அனாவசியமாக பேசாதவர், இப்போது தன்னை விடவே வயதுக் குறைவானவர், தன் மகளின் கணவர் இப்படி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கவும், மனம் தாங்காமல்,

“இவ எப்போ அப்பாவை பார்க்கணும்னு தேடி எங்க குடும்பத்துக்குள்ள வந்தாலோ, அப்போதிலிருந்தே ஒரே பிரச்சனையா தான் இருக்கு..” என்று சுடரை பார்த்து புலம்பவும்,

சுடரொளிக்குமே அது சரியென்று தான் பட்டது. தந்தையை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படாமலேயே இருந்திருந்திருக்கலாம், அவரிடம் தன் கஷ்டங்களை பகிர்ந்துக் கொள்வதாக நினைத்து தான் இந்த டைரியை அவள் எழுதியதே,

மற்றப்படி தந்தையை பார்க்கும் போது அவரிடம் இந்த டைரியை காட்ட வேண்டுமென்றெல்லாம் அவள் நினைத்ததேயில்லை, ஏன் யாருமே அதையெல்லாம் படிக்க கூடாது என்று தான் எப்போதும் அதை அவளோடே வைத்திருப்பாள். ஆனால் அதையும் மீறி மகிழ் மட்டுமே அதை படித்தான்.

அதேபோல் சார்லியிடம் நண்பன் என்ற முறையில் அவ்வப்போது சிறுவயதிலேயே ஆறுதல் தேடி அவள் கஷ்டங்களை சொல்லியிருக்கிறாள். அவனும் அதை ஆனந்தியோடு பகிர்ந்திருக்கிறான். அதனால் தான் ஆனந்தி பிடிவாதமாக அவளை இங்கே அனுப்பி வைத்தார். ஆனால் அவர் பிடிவாதம் பிடித்திருந்தாலும் இங்கே வந்திருக்கவே கூடாது. அப்படியிருந்தால் அனைத்துமே சரியாகவே இருந்திருக்கும் என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர்.

அன்னை இப்படி பேசியதும் சுடர் கண்களில் கண்ணீரை பார்த்த எழில், “விஷயம் என்னன்னு தெரியாமலே ஏதாச்சும் உளராதம்மா.. ஏற்கனவே அவருக்கு என்னவோன்னு நாங்க பயந்துக்கிட்டு இருக்கோம்.. நீ வேற கடுப்பை கிளப்பாத.. அமைதியா உட்காரதுன்னா உட்காரு.. இல்ல வீட்டுக்கு போ..” என்று கோபமாக பேசவும், அவரும் அதோடு அமைதியாகிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.