(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 16 - சகி

Uyiril kalantha urave

ரவு நெடுந்நேரமாகியும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் அசோக். நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் வாழ்வியலில் இருக்கும் சொச்சங்களும் அவநிம்மதியுடன் கடந்துவிடுமோ என்ற அச்சம் இதயத்துள்!!பொறுப்புகள் கூடிக் கொண்டே செல்கின்றன. தாயார் இருந்தால் துன்பமே இல்லை. அவர் உயிருடன் இருந்திருக்கலாம்!! என்ன கடமை முடிந்தது என்று இறைவனிடம் சென்றுவிட்டார் அவர்??தன் புதல்வன் சமூகத்தில் மதிக்கப்படும் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் பொழுதுகளை கண்டாரா அவர்? தன் கௌரவம் மீட்கப்படும் வழிகளை கண்டாரா அவர்? தன்னை ஏமாற்றியவர் தலைக்கவிழ போகும் உதயங்களை கண்டாரா அவர்? அல்லையேல்..! தனது இல்லத்தின் தெய்வீகத்தை காக்கப் போகும் அவர் மருமகளை தான் ஆசீர்வதித்தாரா அவர்? என்ன கடமை செய்துவிட்டார் விடைப் பெறுவதற்கு?? கண்கள் கலங்கின அவனுக்கு!!

தனக்கென இல்லம் தாண்டி வந்திருப்பவளை பாதுகாக்க வேண்டும் என்ற தலையாய கடமை தான் அவன் கண் முன் நின்றது. ஆண்கள் உண்மையில் பலசாலிகள் தான்!! விவரம் புரிந்த நாள் முதலாய் இன்னல்கள், கடமைகள், பொறுப்புகளை சுமக்கின்றனர். எனினும், அத்தனை வலிகளும் இதயத்துள் மட்டுமே, வெளிகாட்டுவதே இல்லை. உண்மையில் இறைவன் தனது தெய்வீகத்தை பெண்ணினுள் வைத்தான் என்றால், தன்னையே ஆண் என்ற சக்தியாய் வடிவமைத்துக் கொண்டான் போலும்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தனக்கானவளைக் குறித்து சிந்திக்கும் தருவாயில் அவளைக் காண வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. இந்நேரம் உறங்கி இருப்பாளே என்றும் தோன்றியது. எனினும், எழுந்துச் சென்று அவள் அறையின் முன் நின்றான். ஒருவித தயக்கம் இதயத்தை சூழ்ந்தது. காதலிப்பவள் தான் இருந்தாலும் அவள் ஒரு பெண் அல்லவா, அவள் அனுமதியின்றி அவளுக்கென ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட அறைக்குள் எவ்வாறு நுழைவது?? தயக்கம் சில நிமிடங்கள் நீண்டன. பின், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் தள்ளினான். அவள் தாழிடவில்லை. கதவுத் திறந்துக் கொண்டது. அறையுள் சிறு குழந்தையைப் போல வீற்றிருந்தாள் அவள். குளிர்ந்த வேப்பமர காற்று அறையுள் பரவி இருந்தது. தயக்கங்கள் மெல்ல மெல்ல விலகின. அவளருகே சென்று மெத்தையில் அமர்ந்தான் அசோக். வானின் வெள்ளி நிலவைப் போன்று களங்கமில்லாத முகம் அவளுக்கு! அதைக் காணும் சமயத்தில் மன இறுக்கங்கள் தொலைந்தன. காற்றில் ஆடிக் கொண்டிருந்த முடிக்கீற்றை விலக்கிவிட்டான் அவன். தனக்காக அனைத்தையும் தியாகித்திருக்கிறாள். தாயார் இருந்திருந்தால் இவளை இந்நேரம் இவ்வில்லத்தின் மகாராணியாய் அதிகாரம் வழங்கி இருப்பார். நானோ இன்னும் இவளுக்கான அதிகாரத்தை அளிக்க மறுக்கிறேன். விடிந்ததும் இவள் தந்தையைக் காண வேண்டும். என் மேல் அவர்களுக்கு வெறுப்பே இருக்கட்டும்! எந்தப் பெண்ணும் தன் பெற்றோரின் விருப்பத்தை மீறி விவாஹம் புரிய விரும்ப மாட்டாள். எனக்கென அனைத்தையும் தியாகிக்கத் துணிந்தவளுக்காக நான் எனது இறுக்கங்களைத் துறப்பதில் தவறு ஒன்றும் இல்லை. இவள் பெற்றோரின் விருப்பத்தைப் பெற நாளை எங்கள் சந்திப்பு நிச்சயம் நிகழும். உறுதிப் பூண்டான் அவன். தன் எதிரே வீற்றிருக்கும் தன் சிவன்யாவை முத்தமிட மனம் துடித்தது அவனுக்கு!! தன்னிலை மறந்து அக்காரியம் செய்ய துணிந்தவன்,பின், தயங்கி நின்றான்.

“இல்லை..!!இந்த பொன் நிகழ்வை நிகழ்த்தும் தருணம் இதுவல்ல! இவள் அனுமதியின்றி இவளைத் தீண்டுவதும் தவறு, அந்தப் பொன் நிகழ்வு நிகழும் தருணம் இவள் தனது சுயநினைவோடு இருப்பதும் அவசியம்!! முதல் உரிமையை இவள் சுயநினைவின்றி அளிக்க மனமில்லை.” விலகிவிட்டான் அசோக்.

“என் ஆயுள் முடிவுறும் வரையில் இவளது சுயம் என்னிடத்தில் பாதுகாக்கப்படும்!” அவள் உறங்குவதற்கு ஏதுவாக போர்வையை போர்த்தி, அருகே தலையணையை வைத்துவிட்டு எழுந்தான் அவன். ஒரு மென்மையானப் புன்னகையைப் பூத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றான். அதுவரையில் உறங்குவது போல விழி மூடி இருந்தவள், விழித் திறந்தாள். அவள் பார்வையில் ஒரு கர்வம்!! தன் அன்பிற்கு உரியவன் எந்நிலையிலும் தன்னிலை மாறாத ஆண்மகன் என்றால் எந்தப் பெண்ணிற்கு தான் கர்வம் ஏற்படாது?? கர்வத்தின் பிரதிபலனாய் காதலால் ஏற்பட்ட நாணம் அவளை தலையணைக்குள் முகம் புதைக்க வைத்தது.

மறுநாள் காலை…

எங்கோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அசோக்.

“என்னங்க! இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க? முக்கியமான வேலையா?” புத்தகத்தில் கண்களை மேயவிட்டிருந்தவள் வினவினாள்.

“ஆ…ஆமாம்மா! கொஞ்சம் முக்கியமான வேலைம்மா!” அவசரமாக சட்டையை மாட்டினான்.

“இருங்க…நான் டிபன் எடுத்து வைக்கிறேன்!” என்று எழுந்தவள், சில நொடிகள் தலை சீவிக் கொண்டிருந்தவனை கூர்ந்து நோக்கினாள்.

“என்னம்மா?அப்படி பார்க்கிற?”

“நீங்க அவசரத்துல இருக்கீங்கன்னு நான் புரிந்துப்பேன். ஆனா, போற இடத்துல புரிந்துக்க மாட்டாங்க!” என்று அவன் சட்டை பொத்தான்களை ஒன்றன்பின் ஒன்றாக கழற்றினாள். எதிர் நின்றவனது இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. சீரின்றி இருந்த பொத்தான்களை சரியான முறையில் பொருத்தினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.