(Reading time: 21 - 41 minutes)

“இருந்தாலும் அஜய், பொண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை, எங்கேஜ்மெண்ட் ரிங்ல்லாம் நாம தான் வாங்கணும்.. அதனால சுஜனாவை கூட்டிட்டு போய் அதெல்லாம் வாங்கிட்டு சீக்கிரம் ரெடியாகி நேரா பங்ஷன்க்கு வந்துடுங்க..

அப்புறம் உங்க அம்மாக்கு விஷயத்தை சொல்லி ரெடியா இருக்க சொல்லு, ஆளை அனுப்பி அவங்களை கூட்டிட்டு வந்துட சொல்லலாம்.. விஜய்க்கு நானே விஷயத்தை சொல்லி, உடனே அடுத்த ப்ளைட் பிடிச்சு வர சொல்லிட்றேன்.. அம்மாக்கும் அர்ச்சனாவிற்கும் நானே சொல்லிட்றேன்..” என்று சரியாக திட்டமிட்டு அனைத்தையும் கூறிய விபாகரன்,

அங்கிருந்த மதுரிமாவை அழைத்து, “மதுரிமா நீங்க அஜய், சுஜனாவோட போய் அவங்களுக்கு ட்ர்ஸ், ரிங் செலக்ட் செய்ய ஹெல்ப் செய்றீங்களா?” என்று கேட்கவும்,

இத்தனை நேரம் இங்கிருந்தும் தன்னை ஒரு பார்வை கூட பார்க்கவில்லையே என்று ஏங்கியவளின் ஏக்கம் நீங்கி, முகம் முழுக்க புன்னகையை பூசி, “ம்ம் கண்டிப்பா விபாகரன்.. நானே இவங்களை கூட்டிட்டு போறேன்..” என்றுக் கூறினாள்.

“நீங்க 3 பேரும் தான் இன்னைக்கு எங்களுக்கு வாழ்க்கையே கொடுத்திருக்கீங்க.. வாழ்நாள் முழுக்க உங்க 3 பேரையும் மறக்க மாட்டோம்..” என்று அஜய் நெகிழ்ச்சியோடு கூறினான். சுஜனாவும் அதை ஆமோதிப்பது போல் நின்றிருந்தாள்.

“என்ன அஜய் நல்ல நேரத்தில் இப்படி தேங்க்ஸ் சொல்லியே கழிக்கப் போறீங்களா? வாங்க சீக்கிரம் போகலாம்..” என்று மதுரிமா அந்த சூழ்நிலையை மாற்றினாள்.

“சரி நானும் வீட்டுக்கு போய் சுஜனா அம்மாக்கிடேயும் நெருக்கமான சொந்தக்காரங்கக்கிட்டேயும் விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வரேன்..” என்று வீரராகவன் கூறினார்.

பின் அனைவருமே அந்த இடத்தை விட்டு வெளியே வரும்போது, “சாத்விக் இனி நீங்க தேவி கூட சேர்றதுல எந்த பிரச்சனையுமில்லை..” என்று மதுரிமா கூற,

“ஆமாம்..” என்றவன், “யாதவி இந்த நிச்சயதார்த்ததிற்கு வருவா தானே..” என்றுக் கேட்டான்.

“கண்டிப்பா கூட்டிட்டு வரச் சொல்லி பெரியம்மாக்கிட்ட சொல்லியிருக்கேன்..” என்று மதுரிமா கூறினாள்.

“யாதவி இந்த பங்ஷன்க்கு வர வேண்டியது ரொம்ப அவசியம்..” என்று சாத்விக் சொல்லவும்,

அதுவரை இருவரும் பேசிக் கொண்டதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த விபாகரன் யோசனையோடு தன் காரில் ஏறினான்.

நிச்சயதார்த்த விழாவிற்கு விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தனர். ஆனால் இன்னும் சாத்விக்கையும் காணவில்லை, வீரராகவனின் குடும்பமும் வரவில்லை, விருந்தினர்கள் வரும்போது வரவேற்க அவரும் முன் நிற்க வேண்டாமா? வசந்தன் தவிப்போடு அவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் அவர் மனைவி சுமதி வரவும், “சாத்விக் ஏதாவது உன்கிட்ட சொல்லிட்டு போனானா? இன்னும் அவனை காணோம், இன்னிக்கு அவனுக்கு தான் நிச்சயதார்த்தம்னு அவனுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? எங்க போனான்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான்..” என்று கோபமாக கேட்க,

“என்கிட்ட அவன் எதுவும் சொல்லலைங்க.. காலையிலேயே வீட்டை விட்டு போனவன், நீங்க வீட்டுக்கு வந்து என்னை கூட்டிட்டு வர வரைக்கும் கூட வரலங்க..” என்று அப்பாவியாக கூறினார்.

“இதுதான் நீ அவனுக்கு அம்மாவா இருக்க லட்சணமா? பையனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம், அவனை வீட்ல இருக்க சொல்லணும், நேரத்துக்கு கிளம்ப சொல்லணும்னு உனக்கு தெரியாதா?” என்று எரிந்து விழுந்தார்.

“ஆமாம் பையனுக்கு நிச்சயதார்த்தம், ஆனா அது ஒரு செய்தி போல நேத்து தான் எனக்கே சொன்னீங்க.. பொண்ணு பார்த்ததிலிருந்து நிச்சயதார்த்ததிற்கு தேதி குறிச்சது வரை எதையாவது என்கிட்ட கலந்து செஞ்சீங்களா? நீங்க உங்க இஷ்டத்துக்கு செஞ்சா, உங்க பையன் அவன் இஷ்டத்துக்கு செய்றான்.. இதுல என்ன குறை சொன்னா என்ன அர்த்தம்?” என்றுக் கேட்டார்.

எத்தனை நாள் தான் கணவன் சொல்வதெற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டே இருப்பது? மகனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்துமே அதை செய்கிறாரே என்ற கோபம் சுமதிக்கும் இருக்கவே, எப்போதும் போல் அதை மனதிற்குள் போட்டு புதைக்காமல் இன்று வாய் திறந்து கேட்டுவிட்டார்.

“அவனுக்கு எது நல்லதுன்னு தெரிஞ்சு தான் செய்றேன்.. அது இப்போ உங்களுக்கு புரியாது.. போய் நீ ஒருமுறை அவனுக்கு போன் போட்டு பேசு..” என்று சொல்லிவிட்டு மீண்டும் வாசலுக்கு போய் பார்க்க, வீரராகவன் குடும்பத்தோடு காரில் இருந்து இறங்கினார்.

“என்ன வீரராகவன் சார்.. நம்ம பசங்க நிச்சயதார்த்தம், நாம தான் முன்ன நின்னு எல்லோரையும் வரவேற்கணும்.. நீங்களே லேட்டா வரலாமா?” என்று வீரராகவன் அருகில் வந்து வசந்தன் சொல்லவும்,

“ம்ம் உண்மை தான்..” என்ற வீரராகவன்,

“சுஜனா அஜய் வீட்ல எல்லாம் வந்துட்டாங்களா? வரலன்னா எவ்வளவு நேரம் ஆகும்னு கேளு..” என்று சொல்லி மகளை அனுப்பிவிட்டு,

“கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன்..” என்று மனைவியிடமும் கூறிவிட்டு, வசந்தனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்தவர்,

“உங்க மேல ரொம்ப கோபத்தில் இருந்தேன் வசந்தன்.. ஏதோ உங்க மகன் சாத்விக்கை மனசுல வச்சு கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டேன்..” என்றார்.

“என்னாச்சு வீரராகவன்.. நான் என்ன தப்பு செஞ்சேன்.. எதுக்காக என்மேல கோபம்?”

“இந்த கல்யாணத்தில் உங்க மகனுக்கு விருப்பம் இல்ல.. ஆனா அவனை கட்டாயப்படுத்தி நிச்சயதார்த்தம் வரைக்கும் கொண்டு வந்திருக்கீங்க.. இன்னிக்கு உங்க மகன் வந்து இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு சொல்றான்.. என் மகளோட வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போச்சா வசந்தன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.