(Reading time: 11 - 21 minutes)

அவரின் கடைசி பேச்சைக் கேட்டு, "அப்பா யாதவியை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.. அவ என்னப்பா தப்பு செஞ்சா.. அன்னைக்கு நடிக்க சான்ஸ் கேட்டு அவளோட அப்பாவோடு வந்தப்போ தான் என்னை பார்த்தா.. அதுக்குப்பிறகு அவளை போய் அடிக்கடி பார்த்து அவ மனசில் சலனத்தை உண்டு பண்ணிட்டு சொல்லாம கொள்ளாம வந்தது நான் தான் ப்பா..

ஒருவேளை அவளை காதலிக்கிறதா அப்பவே சொல்லிட்டு வந்திருந்தா கூட அவ எனக்காக காத்திருந்திருப்பா, ஆனா அதையும் செய்யாம அவளுக்கு வாழ்த்து அட்டை மூலமா மறைமுகமா காதலை சொல்ல நினைச்சு அவ வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்திட்டு வந்தது நான்,

ஒருவேளை அன்னைக்கு நான் அந்த காரியத்தை கூட செய்யாம வந்திருந்தா, அவளுக்கும் விபாகரனுக்கும் நடந்த கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கிட்டு அவ நல்லப்படியா வாழ்ந்திருந்திருப்பா.. ஆனா நான் செய்த முட்டாள்தனம் பாவம் அப்போ அந்த சின்ன பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிடுச்சு,

இதோ அப்போ தான் செய்தது தப்புங்கிற உறுத்தல் இருக்க போய் தான், நாங்கல்லாம் பக்கத்தில் இருந்தும் எங்கக்கிட்ட அவளை தெரியப்படுத்திக்க விரும்பாம மறைஞ்சு வாழ்ந்தா..

அவளை நேருக்கு நேராக பார்த்தேனே, அப்போயாவது அவளோட பிரச்சனை என்னன்னு நான் கேட்டு தெரிஞ்சிருந்திருக்கணும், ஆனா அதை கேட்டு தெரிஞ்சிக்காம அவசரப்பட்டது நான் தான், எனக்கோ மதுரிமாவுக்கோ இப்படி நியூஸ் பேப்பர்ல எங்களைப் பத்தி வர்றது அடிக்கடி நடக்கறது தான், ஆனா என்னோட தப்பால யாதவி, விபாகரனை இப்படி அசிங்கப்படுத்திட்டேன்.. இதில் நீங்க மத்தவங்களை தப்பா பேசறதை நிறுத்துங்க.."

"எனக்கென்னடா அவங்களை பத்தி பேசணும்னு தலையெழுத்தா, நான் கட்டி வச்ச கோட்டை இடிஞ்சு தரைமட்டமா ஆயிடுச்சே.. யாதவியை கல்யாணம் செய்துக்க நினைச்சு, நீ சுஜனாவை வேண்டாம்னு சொன்ன, அந்த விபாகரன் அவனோட மச்சானுக்கு அந்த பொண்ணை கல்யாண செஞ்சு வைக்க வீரராகவன் கிட்ட பேசினான். அப்போ நமக்கு ரூட் கிளியரா ஆயிடுச்சு யாதவியை கல்யாணம் செய்துக்கலாம்னு கனவுக் கோட்டை கட்டின.. கடைசியில் உனக்கே வச்சான் இல்ல ஆப்பு..

இப்போ உனக்கு யாதவியும் கிடைக்கல.. சுஜனாவும் கிடைக்கல.. முன்னாடியே விபாகரன் இதை சொல்லியிருந்தா நீ சுஜனாவை கல்யாணம் செஞ்சுருப்பல்ல..  எதிர்காலத்தில் உனக்கு அது எத்தனை நன்மை.. வசதியில் நாம ஒன்னும் அவங்களை விட குறைச்சல் இல்லை தான், ஆனா நாம சினிமாவில் பணத்தை போட்றோம், அதில் நஷ்டத்தை பார்த்தோம்னா அவரோட உறவு நமக்கு கை கொடுக்கும் டா.. இதை தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்றேன், ஆனா நீதான் புரிஞ்சிக்கல.. சுஜனா உனக்கு கிடைக்காம போயிட்டா.." என்று தன் மன ஆதங்கங்களை அவர் கொட்டிக் கொண்டிருக்க,

"என்னப்பா இப்படி மட்டமான எண்ணங்களை மனசில் வச்சிருக்கீங்க.. யாதவி விஷயத்தில் அவசரப்பட்டது நான், அவக்கிட்ட கலந்துக்காம பேசினது நான், அது தப்புன்னு இப்போதும் என் மனசு உறுத்துது.. இதில் யாதவி என்கிட்ட சொல்லலைன்னோ இல்ல விபாகரன் சொல்லலைன்னோ நான் அவங்களை தப்பா நினைக்கல.. அந்த இடத்தில் அத்தனை பேர் முன்ன நான் இப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு ரெண்டுப்பேருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..

அதேபோல ஆரம்பித்தில் இருந்தே சுஜனாவை கல்யாண செய்துக்கும் எண்ணம் எனக்கில்ல.. அது அப்போ யாதவியை மனசுல வச்சு நான் வேண்டாம்னு சொன்னதா கூட இருக்கலாம், ஆனா சுஜனா என்கிட்ட பேச வரும்போதெல்லாம் அவளை நான் உதாசீனப்படுத்தியிருக்கேன்.. இப்போ யாதவி எனக்கில்லன்னு நான் சுஜனாவை கல்யாணம் செய்துக்க நினைக்கிறது மகா கேவலம்,

அதுமட்டுமில்லாம அஜயும் சுஜனாவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க.. அது தெரிஞ்சப் பின் அவளை நான் கல்யாணம் செஞ்சுக்க நினைச்சா அப்புறம் நான் மனுஷனே இல்லப்பா.. நீங்க பணத்தை வச்சு உறவுகளை தேட்றீங்க.. நான் மனசை வச்சு உறவுகளை பார்க்கிறேன்.. இங்க எல்லா தப்பும் என்மேல தான், மத்தவங்களுக்கு இதில் சம்மந்தம் கிடையாது.. அதனால் இப்படி மத்தவங்களை தப்பா பேசறதை விடுங்க.. அதான் உங்களுக்கு சொல்ல முடியும்.. புரிஞ்சுதா.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் அகன்றுவிட்டான்.

விபாகரன் கோபத்தோடு நாளிதழை வெறித்துக் கொண்டிருந்ததை பார்த்த புவனா, "என்னாச்சுப்பா.. அப்படி பேப்பர்ல என்ன வந்திருக்கு.." என்றுக் கேட்டார்.

"என்னம்மா வந்திருக்கும், நேத்து நிச்சயதார்த்த பங்ஷன்ல நடந்ததை அப்படியே எழுதியிருக்காங்க.. சாத்விக் எதுவும் யோசிக்காம செஞ்ச விஷயம், யாதவி பத்தி என்னை பத்தியெல்லாம் பேப்பர்ல போட்டிருக்காங்க..

இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் முன்ன அது விஷயமா யாதவிக்கிட்ட கேக்கணும்னு சாத்விக் யோசிச்சிருக்க வேண்டாமா ம்மா.. இப்போ யாதவியை கல்யாணம் செய்ய நினைச்ச சாத்விக் அப்போ யாதவியை ஏன் வேண்டாம்னு சொல்லணும்?"

"எனக்கும் அதுதான் தெரியல விபா.. சாத்விக் பார்க்க தப்பானவனா தெரியல, ஆனா அவனை தேடி போன யாதவிக்கிட்ட உன்னை காதலிக்கவேயில்லைன்னு சொன்ன சாத்விக், இப்போ யாதவியை கல்யாணம் செஞ்சுக்க துடிக்கிறது ஏன்னு புரியல.. ஆனா நடந்ததெல்லாம் நல்லதுக்கு தான், ஏன்னா அன்னைக்கு மட்டும் சாத்விக் யாதவியை ஏத்துக்கிற முடிவில் இருந்தா என்னாகியிருக்கும்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.