(Reading time: 18 - 35 minutes)

அதையெல்லாம் உணராதவராக மஞ்சுளா, "யாதவி விபு வந்திருக்கிறான் போல? வெளியே அவனோட காரை பார்த்தேன்.. இந்த நேரம் எதுக்கு வந்திருக்கான்னு கேட்டீயா?" என்று கேட்டார்.

"ம்ம் ஏதோ முக்கியமான வேலையை வீட்ல வச்சு பார்க்க வந்திருக்காங்க போல.. இப்போ தான் காபி போட்டு கொடுத்தேன்.. குடிச்சிட்டு வேலை பார்க்கறதா சொன்னாங்க.. நீங்க வேணும்னா போய் பாருங்க.."  என்று யாதவியும் சொல்ல,

"வேலை நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம், நான் அப்புறம் பார்த்துக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, அர்ச்சனாவும் அவருடன் கீழே இறங்கிச் சென்றாள்.

"நல்லவேளை அவங்க எதுவும் சொல்லல.." என்று யாதவி நினைத்து அமைதியாக,

ஆனால் அர்ச்சனாவாவது அமைதியாக இருப்பதாவது, மாலை தொடங்கியதும், விபாகரன் திரும்ப அலுவலகத்திற்குச் செல்ல, அதுவும் யாதவியை அழைத்து வேறு, "திரும்ப ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.. அதனால கிளம்பணும், வரேன்.." என்று வேறு அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு செல்லவும், அதில் கடுப்பான அர்ச்சனா, மஞ்சுளா அவர் அறையில் இருக்கும் நேரமாக பார்த்து, யாதவி எதற்காகவோ அவள் அறையிலிருந்து வெளியே வந்த போது,

"என்ன ரெண்டு நாளா நீ எங்க இருக்கன்னு கூட கண்டுக்காம இருந்த என்னோட அண்ணன், இன்னைக்கு போகும் போது.. போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போகுது, காபியில் சர்க்கரைக்கு பதிலா, சொக்குப்பொடி ஏதாவது கலந்துக் கொடுத்திட்டீயா?

சமையல் செஞ்சு கொடுத்து அக்கறையா கவனிச்சு கொஞ்சம் கொஞ்சமா என் அண்ணனை மயக்க பார்த்த.. அதுக்கு நான் தடைப்போட்டதும், இப்போ வேற வழியில் முயற்சி செய்ய பார்க்கிறீயா? உனக்கே இது அசிங்கமா இல்ல.." என்று மிகவுமே மோசமாக பேசவும்,

அதை பொறுத்து கொள்ள முடியாதவளாக யாதவி, "ச்சே ஏன் இப்படி தப்பா பேசறீங்க.. வேலையிலிருந்து உங்க அண்ணன் டயர்டா வரவே, நீங்களும் அம்மாவும் வீட்ல இல்லன்னு, அவருக்கு காபி போட்டு கொண்டு போய் கொடுத்தது தப்பா.. அதை எப்படியெல்லாம் பேசறீங்க..

நான் தெரியாம தான் கேட்கிறேன்.. அவரோட ரூம்க்கு நான் போக கூடாதா? நான் அவரோட மனைவி தானே, நான் அவர் ரூம்க்கு போறதுல என்ன தப்பு? இல்ல அவரை மயக்கறதில் தான் என்ன தப்பு?" என்று கொஞ்சம் கோபமாகவே கேட்க,

"ம்ம் மனைவியா? மனைவின்னு சொல்றீயே உன்னோட கழுத்தில் தாலி எங்க? அதை கழட்டிப் போட்டுட்டு நீதானே என்னோட அண்ணனை வேண்டாம்னு சொல்லிட்டு போன.. இப்போ எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவனோட மனைவின்னு உரிமை கொண்டாட்ற.. நீ எவனுக்காகவோ தானே என்னோட அண்ணனை விட்டுட்டு போன.. நீ தொலைஞ்சு போய் 5 வருஷம் ஆகுது.. இன்னுமே நீ என் அண்ணனுக்கு மட்டும் தான் பொண்டாட்டியா இருப்பேன்னு என்ன நிச்சயம்?" என்று அர்ச்சனா கேட்கவும், மஞ்சுளா அங்கு வரவும் சரியாக இருக்க,

"அர்ச்சனா இதெல்லாம் என்ன பேச்சு, ஏதோ நீ சொன்னாலும் கேட்க மாட்டேன்னு நீ பேசறதுக்கெல்லாம் நான் அமைதியா இருந்தா, ரொம்ப அதிகமா பேசற.. யாதவி இந்த 5 வருஷமா பாலாவோட வீட்ல தான் இருந்தான்னு தெரிஞ்சப்பிறகும் நீ இப்படி பேசறது சரியில்லை.. இங்கப்பாரு இது கணவன், மனைவியான அவங்களுக்கான தனிப்பட்ட விஷயம், உன்னோட அண்ணன் தான் யாதவியை இங்க கூட்டிட்டு வந்தான்..  அவன் மனைவியோட அவன் வாழ முடிவெடுத்துட்டான்.. அதில் நீ மூக்கை நுழைப்பது ரொம்ப தப்பு.. முதலில் யாதவிக்கிட்ட மன்னிப்பு கேளு.." என்று அவர் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.