(Reading time: 12 - 23 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 12 - ராசு

காலட்சுமி உறக்கம் வராமல் அருகில் படுத்திருந்த கணவனைப் பார்த்தாள். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவளுக்குத்தான் உறக்கக் கலக்கத்தில் அவன் மீது தன் உடம்பு பட்டுவிடுமோ என்ற பயத்தில் உறக்கம் வரவில்லை. அப்படி பட்டுவிட்டால் அதற்கும் ஏதாவது குறை கூறுவான். சண்டை வளர்ப்பான்.

தூங்கும்போது கூட பிடிவாதம் முகத்தில் தெரிய உறங்கும் கணவனை இப்போதுதான் இத்தனை அருகில் பார்க்கிறாள். எப்போதும் அவனிடம் இருந்து ஒதுங்கியே செல்லும் அவளுக்கு இந்த ஒற்றை அறை அவனருகில் இருக்கச் செய்தது.                         

அந்த அறையில் இரவு விளக்கு கூட இல்லை. ஜன்னல் வழியே தெரிந்த தெருவிளக்கு வெளிச்சம் மட்டும்தான். இந்த அறையில்தான் கணவன் வளர்ந்திருக்கிறான் என்று தெரிந்த போது அவள் மனம் நெகிழ்ந்தது.

அதுவும் அவன் எத்தனை சிரமப்பட்டிருக்கிறான் என்று பரத் சொன்னபோது அவளுக்கு கணவன் மீது மரியாதை உண்டாகியிருந்தது. அவனது மனதிடத்தையும் அவள் பெருமிதமாய் உணர்ந்தாள்.

சிறுவயதில் இருந்தே மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் மாதவனின் விருப்பம். ஆனால் சரியாக அவனுக்கு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின் போது அம்மை போட்டுவிட்டது. முதலில் அவன் பரிட்சை எழுதுவதற்கே பள்ளி தலைமையாசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை. அவனால் மற்றவர்களுக்கு அம்மை நோய் பரவிவிடும் என்று அவர் அவனை பரிட்சை எழுத முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் ராஜசேகர் அவரை அத்துடன் விட்டுவிடவில்லை.

தலைமையாசிரியரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

“சார். அவனை பரிட்சை எழுத விடவில்லை என்றால் அவனுடைய எதிர்காலமே பாழாப்போகிரும் சார். அவன் நல்லாப்படிக்கிற பையன். அது உங்களுக்கே தெரியும். படிப்பு இல்லாமப் போச்சுன்னா அவனே கூட இல்லாமல் போயிருவான். படிப்பு ஒன்னுதான் அவன் வாழ்க்கைன்னு இருக்கான் சார். அதுதான் அவன் வாழ்க்கைக்கு ஒரு விடிவு தரும்னு நினைக்கிறான் சார். என்னால் அவன் வயிற்றுக்கு சாப்பாடுதான் போட முடியும். அவன் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்ட முடியாது. அதை அவனுடைய படிப்புதான் சார் தரும்.” என்று அவர் பேசப்பேச தலைமையாசிரியருக்கு மாதவனின் நிலை புரிந்தது.

அத்துடன் அவன் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். அவன்தான் பள்ளியின் முதல் மாணவனாய் வரக்கூடியவன் என்பதையும் அவர் அறிவார். அவர் மட்டும் என்ன செய்வார்? இந்த மாதிரி அம்மை நோய் வந்தவனை பரிட்சை எழுத அனுமதித்தால் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் நோய் தொற்றிக் கொண்டால் என்ன செய்வது என்று சண்டைக்கு வருவர்.

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.