“அடி சக்கை!...பார்த்தியா?...என் கிட்டக் கூட மறைச்சு...ரகசியமா போயி...பொண்ணு பார்த்திட்டு...இன்னிக்கு வந்து “கல்யாணமே முடிவாயிடுச்சு”ன்னு சொல்றியா?...ம்ஹ்ஹும்...இது நியாயமேயில்லை....நான் ஒத்துக்கவே மாட்டேன்...நிச்சயதார்த்தத்துக்கு ஏன் என்னைக் கூப்பிடலை?” என்று சொல்லியபடியே எழுந்து தள்ளிச் சென்றான்.
“டேய்...டேய்...டேய்....கோவிச்சுக்காதடா!...என்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கே தெரியாமல் பண்ணிட்டாங்க!..” தனசேகர் முரளியின் பின்னால் வந்து நின்று கெஞ்சலாய்ச் சொன்னான்.
“அதெப்படிடா?...பொண்ணு பார்க்கும் படலம்ன்னு ஒண்ணு நிச்சயமா நடந்திருக்கும்..அதுக்கு நீ போய் “பொண்ணைப் பிடிச்சிருக்கு”ன்னு சொல்லாம...அவங்க முடிவு பண்ணிடுவாங்களா?...”
“அந்தக் கதையைக் கேளு...எங்க சொந்தத்துல நடந்த வேறொரு கல்யாணத்துக்கு என்னை வரச் சொல்லி ரொம்ப வற்புறுத்தினாங்க!...நானும் ஓரளவுக்கு மேலே மறுக்க முடியாமல்...போனேன்...!...பொண்ணு வீட்டுக்காரங்களும்...பொண்ணும் அந்த விசேஷத்துக்கு வந்திருந்தாங்க!....அங்கேயே எங்க ரெண்டு பேரையும் பார்க்க வெச்சு...பேச வெச்சு...எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டாங்க”
“ஓ.கே..ஓ.கே!..நீ சொல்றது நம்பற மாதிரி இல்லை!...இருந்தாலும் உனக்காக .நம்பறேன்” என்றான் முரளி.
“சரி... “பொண்ணு யாரு?”ன்னு நீ கேட்கவே இல்லையேடா?” தனசேகர் ஆசையோடு கேட்டான்.
“ஓ...நான் கேட்டால்தான் சொல்லுவியா?...சும்மா சொல்லுடா!” என்றான் முரளி.
“நம்ம கிழக்குச் சீமை பண்ணையாரு ராமலிங்க பூபதி...தெரியுமல்ல” ஆட்காட்டி விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான் தனசேகர்.
“தெரியும்...ஆட்டுக்கடா மீசை வெச்சுக்கிட்டு.... “பள..பள” ஜிப்பா போட்டுக்கிட்டு...புலிப்பல் சங்கிலியை நெஞ்சு வரை தொங்க விட்டுட்டு...பார்த்தால் எம்.ஜி.ஆர்.படத்துல வர்ற நம்பியார் மாதிரித் திரிவாரே?...அவரா?...” சிரிப்போடு கேட்டான் முரளி.
“ஆமாம்...ஆமாம்...அவரோட மொதல் பொண்ணு!...பேரு...மல்லிகா” அசடு வழியச் சொன்னான் தனசேகர்.
“ம்...பணத்தோட பணம் கை கோர்க்குது!...ஓ.கே...ஓ.கே...கொண்டாடுங்க!” என்ற முரளி, “டேய் சேகர்....பண்ணையார் வீட்டு மாப்பிள்ளை ஆனதும்...இந்த பரதேசிப் பயல் கூடப் பேசுவியா?..பழகுவியா?...இல்லை...பார்த்தும் பார்க்காத மாதிரிப் போயிடுவியா?” முரளி சோகமாய்க் கேட்க,
“ச்சீய்...வாயைக் கழுவுடா!...” என்று கோபமாய்ச் சொன்ன தனசேகர், “ஏண்டா முரளி...இத்தனை வருஷம் என் கூடப் பழகி....நீ என்னைப் புரிஞ்சுக்கிட்ட்து இவ்வளவுதானா?...ஒண்ணு