“சீக்கிரமே கல்யாணம் செய்துக்க போறீங்க, அர்ஜுன் கூச்சப் படாம வைஷ்ணவி கிட்ட பேசு,” என ராகவி சொன்னதும், வைஷ்ணவி, அர்ஜுன் இரண்டுப் பேருமே பிடிக்காமல் நெளிந்தார்கள்.
ஆனால் இது தவிர்க்க முடியாது என்பதையும் இருவரும் உணர்ந்தார்கள்.
வேறு வழி இல்லாது, வைஷ்ணவியை பார்க்காமல், வேறு பக்கம் பார்த்துக் கொண்டு “ஹலோ” என முனுமுனுத்தான் அர்ஜுன்.
“ஹாய்,” என உதட்டை பிதுக்கி வெறுப்புடன் சொன்னாள் வைஷ்ணவி.
அங்கே சில வினாடிகள் அமைதி நிலவியது.
“லைட்டா சாப்பிட்டே பேசலாமே?” என சொல்லி அமைதியை குலைத்தாள் ஹேமா.
தொடர்ந்து வித விதமான உணவுகள் வழங்கப்பட்டது. பெரியவர்கள் சாப்பிட்டுக் கொண்டே தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.
“கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போட வேண்டாம். நாலு மாசத்துல ஒரு நல்ல நாள் வருது அன்னைக்கே வச்சிடலாம்,” என ராகவி சொல்ல,
“உன் விருப்பம் போல செய்யலாம் தங்கச்சி. நீ என்ன சொன்னாலும் சரியா இருக்கும். நாங்க என்ன எல்லாம் செய்யனும்னு மட்டும் சொல்லு,” என வாயெல்லாம் பல்லாக பதில் சொன்னார் ரமேஷ்.
வைஷ்ணவிக்கு அந்தப் பேச்சை கேட்க சுத்தமாக பிடிக்கவில்லை. அர்ஜுன் எப்படி சும்மா இருக்கிறான் என்றும் அவளுக்கு புரியவில்லை. ரகசியமாக அவனை கவனித்தாள். அவனோ தூக்கு தண்டனை தண்டனை கொடுக்கப் பட்டவனைப் போல இருந்தான். ஒரு விதத்தில் அவனை அப்படி பார்ப்பது வைஷ்ணவிக்கு சந்தோஷத்தையும் கொடுத்தது. ஆனால் இங்கே ஊசலாடுவது அவளுடைய வாழ்க்கையும் அல்லவா?