அந்த அமைதியான சூழலில் கேட்ட சத்தம் பூர்வியை அதிர வைத்தது.
கடிகாரத்தை பார்த்தாள். நேரம் இரவு ஒன்பதை கடந்து இருந்தது.
வந்திருப்பது யாராக இருக்கும், என்ற கேள்வி எழவும் செக்யூரிட்டி கேம் டாஷ்போர்டை பார்த்தாள்.
வாசலில் நின்றிருந்த உருவம் இருட்டின் காரணமாக கரிய உருவமாக தெரிந்தது. ஆனால் அது யார் என்று பூர்வியால் அடையாளம் காண முடிந்தது.
இவன் எதற்கு இப்போது வந்திருக்கிறான் என்ற கேள்வியில் அவளின் முகம் சுருங்கியது. இருப்பினும் கதவை திறக்க எழுந்து சென்றாள்.
“ஹாய் பூர்வி!” என்றதுடன் புன்னகை சிந்தினான் ராகுல்.
பூர்வி சிரிக்கவும் இல்லை அவனை வரவேற்கவும் இல்லை.
“என்ன ராகுல் இந்த நேரத்துல வந்திருக்கீங்க?” என்றாள்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு ஜாவேத் சொன்னார். தெரிஞ்சதுக்கு மேல விசாரிக்காம இருக்க மனசு வரலை. ஹொவ் ஆர் யூ?”
“பெருசா எதுவும் இல்லை, ப்ளூ மாதிரி தான் இருக்கு.’
“ஈஸியா எடுத்துக்காதீங்க பூர்வி. ஏதாவது ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க.”
பூர்வி தலையை ஆட்டினாள், அத்துடன் அவன் கிளம்பட்டும் என்ற பாவனையில் நின்றாள்.
ராகுலோ அதைப் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.