அன்று இரவும் பூர்வி தூங்கவில்லை. ராகுல் இது போல நடந்துக் கொள்ளும் விதத்தில் அவள் அவனுக்கு சமிக்ஞை ஏதாவது கொடுத்தாளா என்று முதலில் யோசித்தாள். அப்படி எதுவும் இருந்ததாக அவளுக்கு தெரியவில்லை. பிறகு ராகுல் திடீரென்று எதற்கு இப்படி நடந்துக் கொண்டான்?
ஒரு சில நிமிடங்கள் இதையே நினைத்து மனதை அலைபாய விட்டவள் மெதுவாக சுதாரித்துக் கொண்டாள்.
நடந்ததை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்தால் பயன் இல்லை. அடுத்து என்ன என யோசிப்பதே புத்திசாலித்தனம்.
ராகுல் அடுத்து என்ன செய்வான்? நடந்த நிகழ்வின் தாக்கத்தினால் அவள் முன் வராமல் இருப்பானா? வாய்ப்பே இல்லை, கட்டாயம் மீண்டும் வருவான். அது தான் அவனின் குணம்!
ராகுல் அடுத்து வரும் போது அவனை எப்படி எதிர் கொள்வது என்று யோசித்து, மனதுக்குள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டாள்.
ஒரு முடிவுக்கு வந்ததும் அவளின் மனம் மீண்டும் தெளிவானது. அப்போது தான் ராகுலின் வருகைக்கு முன் யோசித்துக் கொண்டிருந்த விஷயம் மீண்டும் பூர்வியின் நினைவுக்கு வந்தது. ராகுள் வந்த நேரத்தில், அனில் நிகிதா வழக்கு பற்றி ஆன்லைனில் வாசித்துக் கொண்டிருந்தாள்! ராகுல் வேறு விதமாக மனதை குழப்பி விட்டதில் அதைப் பற்றி மறந்தே போய் விட்டாள்.
இப்போது தூக்கம் வரவில்லை! போய் அந்த வழக்குப் பற்றி படித்தால் என்ன?
பூர்வி சத்தம் எழுப்பாமல் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். அதே நேரம் நிரவியும் எழுந்து அமர்ந்தாள்.
“நிரவி? தூங்கலையா நீ?”