காலையில் தூக்கம் களைந்து கண் திறந்த வைஷ்ணவியின் தலை விண் விண் என வலித்தது. ஆனப் போதும் பழக்க தோஷத்தில் மொபைலை தான் முதலில் பார்த்தாள்.
‘வைஷ், தலைவலிக்கு மாத்திரை உன் பேக்ல வச்சிருக்கேன். எடுத்துக்கோ. ஒரு வேலையும் செய்யாதே. அர்ஜுன் ஏதாவது பேசினா, அவன் அம்மா கிட்ட தயங்காம போட்டுக் கொடு.’
ரியாவின் மெசேஜ் வைஷ்ணவிக்கு புது தெம்பைக் கொடுத்தது.
கட்டிலைப் பார்த்தாள். அது காலியாக இருந்தது.
கண்ணை சுற்றிப் பார்த்தாள். அர்ஜுனை எங்கேயும் காணோம். நல்லதாக போனது என்ற முடிவோடு அடுக்கப்பட்டிருந்த அவளுடைய சூட்கேஸில் இருந்து உடை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றாள்.
குளித்து உடை மாற்றி கொஞ்சமாக மேக்கப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அரண்மனை போல தோன்றிய பங்களா அவளை பயமுறுத்தி மிரட்டியது.
எந்த பக்கம் போவது என்றே தெரியாமல் நின்றாள்.
அவளுடைய வீடும் பங்களா தான். ஆனால் இந்த பங்களாவிற்கு முன் அது ரொம்பவும் சிறியது.
வைஷ்ணவி எங்கே போவது எனப் புரியாமல் அதே இடத்தில நின்றுக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெண்ணின் குரல் எங்கேயோ இருந்து சத்தமாக கேட்டது.
“நீ கேட்ட எல்லா பொருளும் இங்கே இருக்கு. சமையல் அமர்க்களமா இருக்கனும். தப்பா போனா இன்னைக்கே சீட்டை கிழிச்சிடுவேன். புரியுதா?”