(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 14 - யாஷ்

விவேக்கின் மனசுக்குள் படபடப்பு வந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.

  

“போன் பேச வந்தேன் அம்மா.” ஈசியாக சொல்லி சமாளிக்க முயற்சி செய்தான்.

  

“அது என்னோட போன்.” ஹரிணி அவன் கையில் வைத்திருந்த போனை காண்பித்து சொன்னாள்.

  

“ஆமா, உங்க போன் தான், இந்தாங்க.”

  

போனை வாங்கிக் கொண்ட ஹரிணி தொடர்ந்துப் பேசிக் கொண்டே நடந்தாள்.

  

“நம்மக் குடும்பத்துல ஒவ்வொருத்தர் கிட்ட ஒவ்வொரு மாதிரியான கெட்டப் பழக்கம் இருக்கு. ஒருத்தர் கிட்டேயும் இல்லாம இருக்குறது ஒரே ஒரு பழக்கம் தான்.” ஹரிணி நடந்துக் கொண்டே விவேக்கை திரும்பிப் பார்த்தாள்.

  

விவேக் புத்திசாலி! ஒவ்வொரு நாளும் பல விதமான மக்களை சந்திக்கும் பினான்ஷியல் அட்வைசர் ஆக இருப்பவன். ஒவ்வொருவரின் பேச்சு, செய்கைகளை வைத்து அவர்களை புரிந்துக் கொள்வதும், எதிர்பார்ப்புகளை கணிப்பதும் அவனின் அன்றாட வேளைகளில் ஒன்று.

  

அவனால் எளிதாகவே ஹரிணி இயல்பாக பேசவில்லை என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவள் சொல்ல வருவது என்ன என்பது புரியாவிட்டாலும், அவள் அவன் சான்வியுடன் பேசியதை கேட்டு விட்டாள் என்பதை ஊகித்துக் கொள்ள முடிந்தது.

  

இப்போது ஹரிணி அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும், “எந்த கெட்ட பழக்கத்தை சொல்றீங்க அம்மா,” என ஒன்றும் தெரியாதவனைப் போல வினவினான்.

  

“அதான் சொன்னேனே, ஒவ்வொருத்தர் கிட்ட ஒவ்வொரு குணம். உன் அப்பாக்கு வேலையே கதின்னு குடும்பத்தை மொத்தமா மறந்திடுற குணம். உன் சித்தப்பாக்கு குடிக்குற பழக்கம். உன் மாமாக்கு சிகரெட் பழக்கம். இப்படி ஒவ்வொன்னு. ஆனால் இதுவரைக்கும் யாருக்கும் ஒரு பழக்கம் கிடையாது, என்ன தெரியுமா? பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, ஏமாத்துறது!

<hr class="system-pagebreak" />அதெல்லாம் நம்ம குடும்பத்துல கிட்டேயும் இதுவரைக்கும் கிடையாது.”

  

“நானும் அப்படி பட்டவன் கிடையாதுன்னு உங்களுக்கே தெரியும்.” விவேக் இப்போது சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பதில் சொன்னான்.

  

“நீ நியூயார்க்ல பிறந்து, நியூயார்க்லேயே வளர்ந்தவன் விவேக். நம்ம வீட்டுல பணம் இருக்கு, வசதிகள் இருக்கு. அதுப் போல எல்லோருக்கும் வாழ்க்கை அமையுறது கிடையாது. எல்லோருமே கஷ்டம்னா என்னன்னு தெரியாம வளர்ந்தவங்க கிடையாது.”

  

விவேக் வேகமாக நடந்து ஹரிணியின் முன்னே சென்று நின்றான்.

  

“மாம்!” சொன்னதோடு நிறுத்தாமல் செல்ல மகனாக அவள் தோள்களின் மீது கைகளை வைத்தான்.

  

“நான் சான்வி கிட்ட அப்படி என்ன தப்பா பேசிட்டேன்னு நீங்க என்னை வுமனைசர்ன்னு சொல்லாம சொல்றீங்க? என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?”

  

“எல்லா அம்மாக்கும் தன்னோட மகன் நல்லவன் தான் விவேக். உன் அம்மாக்கும் அப்படி தான்.”

  

“அப்புறம் எதுக்கு அப்படி பேசினீங்க?”

  

“சான்வி, ஆதியை பார்த்தா உனக்குத் தெரியலையா? அவங்க கஷ்டப் படுற குடும்பம். பாசம் மட்டும் தான் அதிகமா வச்சிருக்காங்க. அங்கே போய் நீ விளையாட நினைக்குறது சரி கிடையாது. நீ சும்மா ஜாலி, விளையாட்டுன்னு நினைக்கலாம். சான்வி பார்த்தா நல்ல பொண்ணா இருக்கா. வேண்டாம் விவேக். இதெல்லாம் உன் வயசுக் கோளாறு. இந்த மாதிரி விளையாட்டை எல்லாம் அவக் கிட்ட வச்சுக்காதே.”

  

“அழகா இருக்கேன்னு சொல்றது அவ்வளவு பெரிய குற்றமா? சாதாரணமா சொன்னேன்!”

  

<hr class="system-pagebreak" />

“ஆமாம், தப்பு தான்! அது மட்டும் கிடையாது. நீ எதுக்கு என் போனை எடுத்துட்டு கார்டனுக்கு போன?”

  

“அங்கே சிக்னல் சரியா வரலை!”

  

“ஆமாம்ப்பா! உனக்கு மட்டும் தான் வீட்டுக்குள்ளே இருக்க வை-பை தோட்டத்துல நல்லா வரும்! சான்வி வாட்ஸ்அப்ல தான் கூப்பிடுவா.”

  

விவேக் ஹரிணியின் துப்பறியும் மூளையின் திறமை கண்டு வாய் பிளந்தான்.

  

“எதுக்கு அம்மா இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க. ஓகே, நான் சரண்டர் ஆகிடுறேன். சான்வி கிட்ட பேச தான் கார்டன் போனேன். உங்க போன்ல அவ கூப்பிட்டா. நீங்க இருக்கும் போது நான் அவளோட பேச முடியாது. அதனால தோட்டத்துக்கு போய் பேசினேன்.”

  

“இதெல்லாம் நீ சொல்லாமலே எனக்கு புரிஞ்சிடுச்சு விவேக். இந்த மாதிரி அவக் கிட்ட விளையாடாதே.”

  

“விளையாடலை, சீரியஸா தான் இருக்கேன்.”

  

“விவேக்? இதுக்கு என்ன அர்த்தம்? நீ சான்வியை கல்யாணம் செய்துக்கப் போறேன்னு அர்த்தமா?”

  

ஹரிணி கோபமாக கேட்டக் கேள்வி விவேக்கை விழிக்க வைத்தது.

  

அவனுக்கு சான்வியை பிடித்திருந்தது. அவளை பற்றி நினைத்தாலே நன்றாக இருந்தது. அவளுடன் பேசுவது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  

அதற்காக கல்யாணம்???

  

அவன் அதை யோசிக்கக் கூட இல்லை!

<hr class="system-pagebreak" />

  

விவேக்கின் முகத்தைப் பார்த்து ஹரிணி முகத்தை சுழித்து நக்கலாக சிரித்தாள்.

  

அது விவேக்கின் கண்களில் படாமல் இல்லை. அவனின் மூளை விரைவாக வேலை செய்தது. பேக்டரியில் மெஷின் கியர்கள் ஒன்றாக வேலை செய்வதுப் போல அவனின் மூளை நரம்புகள் ஒன்றாக இயங்கி அவனுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தது.

  

“ஆமாம் அம்மா நான் சான்வியை கல்யாணம் செய்துக்கலாம்னு தான் இருக்கேன். ஆனால் அதுக்கு முக்கியமான காரணம் நீங்க தான்.” விவேக் குரலில் எந்த பிசிறும் இல்லாமல் சொன்னான்.

  

“நான் காரணமா?” ஹரிணிக்கு குழப்பமாக இருந்தது.

  

“ஆமாம் உங்களுக்காக தான். என் சந்தோஷத்துக்காக நீங்க எவ்வளவோ செய்திருக்கீங்க. உங்களுக்காக, உங்களை சந்தோஷப் படுத்துற மாதிரி நான் எதையும் செஞ்சதுக் கிடையாது. ஒருத் தடவை செய்யலாம்னு பார்த்தேன்.”

  

“எனக்கு இப்போவும் புரியலையே?”

  

“உங்க கூட உட்கார்ந்து யாரும் பேசுறதுக் கிடையாது, எதுவும் சொல்றது இல்லைன்னு எப்போவுமே புலம்புவீங்க. ஒரு நாள் சான்வி கூட எப்படி பேசுறீங்கன்னு பார்த்தேன், அவளும் உங்களுக்கு ஏற்ப பேசினா. அப்போ தான் இந்த ஐடியா எனக்கு வந்தது. சான்வியை நான் கல்யாணம் செய்துக் கிட்டா எனக்கு நல்ல மனைவி கிடைப்பா, உங்களுக்கு நல்ல மருமகள் கிடைப்பா.”

  

ஹரிணி இன்னும் கொஞ்சம் குழிப்பணியாரத்தை எடுத்து விவேக்கிற்கு பரிமாறினாள்.

  

“நீ வேற லெவல் விவேக். இப்படி கூசாம பொய் சொல்றீயே! எனக்குப் பிடிச்ச கலர்ல ஷர்ட் வாங்குன்னு சொன்னா கூட வாங்க மாட்ட! அப்படிப் பட்ட நீ, எனக்காக சான்வியை கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவுக்கு வந்த??? இதை நான் நம்பனும்?”

<hr class="system-pagebreak" />

  

“ஹி ஹி ஹி!” விவேக் தன் வண்டவாளம் வெளி வந்து விட்டதை உணர்ந்து அசடு வழிய சிரித்தான்.

  

“எனக்கு சான்வியை பிடிச்சிருக்கு அம்மா. அது நிஜம் தான். நான் உங்களுக்காகன்னு சொன்னதும் கூட உண்மை தான். சான்வி உங்களுக்கும் சரியா இருப்பாளா இல்லையா?”

  

“இருப்பான்னு தான் தோணுது. இதெல்லாம் சரியா வருமான்னு தெரியலையே? உங்கப்பாக்கு தெரிஞ்சா வானம் வரைக்கும் குதிப்பார்.”

  

“எப்படி பார்த்தாலும் என் கல்யாண விஷ்யத்தில கடைசி முடிவு எடுக்கப் போறவன் நான். நீங்க எனக்கு சப்போர்ட் செய்ய இருக்கீங்க, அப்பாவை மேனேஜ் செய்துக்கலாம் அம்மா.”

  

“அப்படியா சொல்ற? அப்போ சான்வி தான் என் மருமகளா??”

  

“சான்விக்கும் என்னை பிடிச்சா அப்படி தான்!”

  

“அவக் கிட்ட உன்னை பிடிச்சிருக்கான்னு இப்போவே கேட்டுடட்டுமா?”

  

ஹரிணி போனை கையில் எடுக்க, விவேக் அவள் கையை பிடித்து தடுத்தான்.

  

“அம்மா, அதெல்லாம் நான் கேட்கனும். நீங்க அப்பாக்கு விஷயம் தெரியும் போது கத்துவார், குதிப்பார்ன்னு சொன்னீங்களே, அந்த நேரத்துல எனக்காக பேசுங்க, அது போதும்.”

  

“நான் பேசினா அவர் எங்கே கேட்பார்?”

  

“அதெல்லாம் நாம மேனேஜ் செய்துக்கலாம். இப்போ போய் அக்ஷ்ராவையும், ஆதியையும் நான் பிக்கப் செய்துட்டு வரேன்.”

  

“விவேக்!”

<hr class="system-pagebreak" />

  

பேப்பர் நாப்கினில் கைகளை துடைத்துக் கொண்டிருந்த விவேக் அம்மாவை என்ன என்பதாகப் பார்த்தான்.

  

“உண்மையோ, பொய்யோ, சான்வியை கல்யாணம் செய்துக்க நினைக்குறது எனக்காகன்னு சொன்னீயே மனசுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு!” ஹரிணி சென்டிமென்டலாக சொன்னாள்.

  

“அதுக்கும் காரணம் சான்வி தான். அவளுக்காக தான் அப்படி பொய் சொன்னேன். உங்க சென்டிமென்ட் பேச்சை எல்லாம் அவக் கிட்ட பொறுமையா சொல்லிக்கோங்க.” விவேக் சிரிப்போடு சொல்லி விட்டு சென்றான்.,

  

அவன் போகும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்த ஹரிணி, அவன் உருவம் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் கையில் இருந்த போன் துணையோடு வாட்ஸ்அப்பில் சான்வியை அழைத்தாள்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.