அர்ஜுன் வைஷ்ணவி ஜோடியாக ஆடம்பர உணவகத்திற்கு வந்தார்கள். வீட்டில் இருந்துக் கிளம்பும் போது தவறாமல் ராகவியிடம் அவர்கள் போகும் இடத்தைப் பற்றி சொல்லி விட்டே வந்தான் அர்ஜுன். அவர்கள் ஜோடியாக செல்வது ராகவிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதை இருவராலுமே உணர முடிந்தது.
அர்ஜுன் முன்பே அவர்களுக்காக ரிசர்வ் செய்திருந்ததால் அவனின் பெயர் சொன்னதுமே உணவகத்தில் மரியாதையுடன் அவர்களை அழைத்துச் சென்றார்கள்.
இரண்டுப் பேரும் வசதியாக அமர்ந்ததும் அவர்களிடம் மெனு கொடுக்கப்பட்டது.
அர்ஜுன் அவனுக்கு வேண்டியதை தேர்வு செய்தான். பெயருக்கும் வைஷ்ணவியிடம் கேட்கவில்லை. வைஷ்ணவியும் அதைக் குறித்து கவலைக் கொள்ளாமல் அவளுக்கு பிடித்ததை தேர்வு செய்தாள்.
“அரை மணி நேரம் ஆகும்,” என்ற தகவலை சொல்லி செர்வர் போய் விடவும் அர்ஜுனும் வைஷ்ணவியும் கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
திடீரென, “அப்போ உன் கிட்டேயும் யாராவது பேசினாங்களா? யாரு என் அம்மா தானா?” எனக் கேட்டான் அர்ஜுன்.
வைஷ்ணவியால் உடனடியாக அவன் எதைப் பற்றி பேசுகிறான் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“எதை சொல்ற?”
“உனக்கும் லெக்சர் கொடுத்தாங்களான்னு கேட்டீயே? என் கிட்ட அம்மா பேசினாங்க. உன் கிட்ட யாரு பேசினது?”
“அதைக் கேட்குறீயா? ஆமாம், அப்பா பேசினார். இவங்க பேசுறது எல்லாமே தப்பா இருக்கு. நாம இரண்டுப் பேரும் எப்படி வாழப் போறோம்னு அவங்க யாரு முடிவு செய்றதுக்கு?”