“அன்னைக்கு நாம தி நகர்ல் பார்த்ததும் இதே கலர் தானே வர்ஷா?” என்றாள் ராஜம் சந்தேகமாக.
“அது இன்னும் கொஞ்சம் டார்க்கா இருந்துச்சு அம்மா...”
“என்னவோ போ!” என மகளிடம் சொன்ன ராஜம், வைஜெயதியிடம், “இவளுக்கு இந்த ரெட் ஷேட்ல் புடவை வேணும்னு என்னை கொஞ்சம் மாசமாவே அலைய விட்டுட்டு இருக்கா... இது ப்ரியாவுடையதா, எங்கே வாங்குனீங்க?” என்று வினவினாள்.
“நேத்தைக்கு தி.நகர்ல தான் வாங்கினோம்... எனக்கு கடை பேர் எல்லாம் தெரியலை... உலக அதிசயமா இந்த ஸாரீயை பார்த்த உடனே பிடிச்சிருக்குன்னு வாங்கினா ப்ரியா!”
“ஹை! எங்க இரண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்... ரொம்ப நல்லா இருக்கு இந்த ஸாரீ...” சொல்லிக் கொண்டே அந்த சேலையை தன் மீது வைத்து அழகுப் பார்த்தாள் வர்ஷா.
“உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தா அதை நீங்களே எடுத்துக்கோங்க...”
திடீரென ஒலித்த குரலை கேட்டு ஆர்வத்துடன் குரல் வந்த திக்கில் பார்த்தாள் வர்ஷா. அப்போது தான் பள்ளியில் இருந்து திரும்பி இருந்த ப்ரியா கைப்பையுடன் அறையின் கதவருகில் நின்றிருந்தாள்.
“நிஜமாவா?” ஆசையும் ஆவலுமாக ப்ரியாவிடம் கேட்டாள் வர்ஷா.
“ஆமாம்... எடுத்துக்கோங்க...”
வர்ஷாவின் முகம் மலர்ந்தது! ஆனால் ராஜம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை!
“இல்லை ப்ரியா வேண்டாம்... வர்ஷா, உனக்கு அதே கடையில் போய் தேடி பார்த்து வாங்குவோம்...”