(Reading time: 42 - 84 minutes)

 

ரி வேகமாய் ரிகாவின் அறையில் புயலென நுழைந்தான், ஆனால்… அங்கு அவள் இல்லை…

அவனுக்கு என்ன செய்வதென்று ஒரு நொடி புரியவில்லை… அருகிலிருந்த நர்சைப் பார்த்தவன் “என்ன நிகழ்ந்தது?...” என்று கேட்டான்….

“யாரோ ஒரு லேடி வந்தாங்க… இவங்க பெயர் சொல்லி… சிறிது நேரம் பேசிட்டிருந்தாங்க…. அப்பறம் வந்து பார்த்தால் இரண்டு பேரையும் காணவில்லை…”

“ஷிட்… யார் வந்தாலும் பார்க்க அனுமதிப்பதா?... ரிகா விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள் என்று எத்தனை முறை கூறியிருப்பேன்… அவங்க வந்ததும் எனக்கு தகவல் சொல்லாமல் என்ன செய்தீர்கள் அனைவரும்…” என்று கோவமாக கத்திவிட்டு காரில் ஏறினான்…

இரவு முழுவதும் கண் அயராமல் தேடினான்… பொழுதும் விடிந்தது… எனினும் அவளைப் பற்றிய எந்த தகவலும் இல்லை… சோர்ந்து வீட்டிற்கு வந்தவன், ஒரு புகைப்படத்தை கையிலேந்தினான்…

“நீ தான் என்னை விட்டு சென்றுவிட்டாய்… இப்போது இவளுமா?... வேண்டாம்…. எங்கிட்ட கொடுத்துடு அவளை… ப்ளீஸ்…” என்று மனமார வேண்டிக்கொண்டான்…

ரிகா காணாமல் போய், இன்றோடு மூன்று நாட்கள் முடிவடைந்து விட்டது… அந்த மூன்று நாட்களும் அவனுக்கு உடல் நலமில்லை… அவளைத் தேடி தேடி அலைந்தவன், அவனை கவனிக்க தவறினான்… அதன் விளைவு அவனுக்கு முடியவில்லை… மூன்றாம் நாள் இரவில், அவளைத் தேடி சென்று கொண்டிருந்தவனின் கண்களில் அந்த கோவில் தென்பட்டது…

வளுக்குப் பிடித்த ஸ்ரீராமர் குடிகொண்டிருக்குமிடம்… என்ன நினைத்தானோ… கோவிலுக்கே செல்லாதவன், அவளுக்காக முதன் முறையாக அதனுள் அடி எடுத்து வைத்தான்…. அவனைப் பார்த்து சிரித்த ஸ்ரீராமனிடம், கோபமாக இறைஞ்சினான்…

“உன்னை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினாளே… அவளுக்கு நீ என்ன செய்தாய்?... அவளைத் தேடி அலைகின்றேனே… எனக்கு ஒரு வழி ஏன் காட்ட மாட்டேன் என்கிறாய்?... உண்மையில் அவள் உனது பக்தை என்றால் அவளை எனக்கு காட்டு… நீ சக்தியுள்ள தெய்வம் என்றால் அவளை என்னிடத்தில் ஒப்படைத்துவிடு… என் தங்கையை என்னிடத்தில் சேர்ப்பித்துவிடு…” என்று கண்ணீர் விட்டவன், அங்கிருந்து நகர்ந்து கோவிலைச் சுற்றி நடந்தான் கால் போன போக்கில்… பிறகு, மீண்டும் கர்ப்பகிரகத்தை அடைந்தவனின் விழிகள் இமைக்க மறந்து தான் போனது…

அங்கே அவனின் ரிகா இருந்தாள்… குற்றுயிராய், உடல் முழுவதும் இரத்தமுடன், உடைகளில் லேசான கிழிசலுடனும் கசங்கிய பூவாய் அவள் இருந்த கோலம், அவனை பேதலிக்க செய்தது… கண்ணீர் பெருக்கெடுத்தது…. இதயம் கதறும் சத்தம் அவனுக்கு கேட்டது…

ஒடி சென்று அவளை மடியில் ஏந்தியவன், அவளுக்கு சுவாசம் இருக்கிறதா என்று பார்த்தான்…. இருந்தது… அவளைத் தூக்கி கொண்டு காரில் ஏறியவன், நேரே அவனது வீட்டிற்கு சென்றான்…

ஒரு நர்ஷை அழைத்து, அவளது உடைகளை மாற்ற சொல்லிவிட்டு சென்றவன், அவளது காயங்களுக்கான மருந்தை எடுத்து வைத்தான்…

“டாக்டர் சார், அவங்க உடம்பில் நிறைய இடங்களில் காயம் மற்றும் …………………..  தெரிகிறது”

“என்ன!!!!!!!”

“... ஆமாம்… சார்…”

“… நான் இங்கே இரவு தங்கி ரிகாவைப் பார்த்து கொள்ளவா?...”

“வேண்டாம்… நான் பார்த்து கொள்கிறேன்… உங்களுக்கேன் சிரமம்… நீங்க கிளம்புங்க… ரொம்ப நன்றி… நான் கூப்பிட்டதும் வந்து உதவியதற்கு…”

“இதிலென்ன சார் இருக்கு… உங்களின் மருத்துவமனையில் நான் வேலைப் பார்க்கிறேன்… என் கடமையை தானே நான் செய்தேன்… வருகிறேன்…”

“சிஸ்டர்… அப்பறம்…”

“புரிகிறது சார்… நீங்க இவங்களை அங்கே கொண்டு வராமல், வீட்டில் வைத்திருக்கும்போதே, புரிந்து கொண்டேன்… அதுவும் அவர்களை இந்த நிலையில் பார்த்த பிறகு, நிச்சயம் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று அறிந்து கொண்டேன்… அதனால், நான் இங்கே வந்த விவரத்தை கூட மறந்து விடுவேன்…”

“நன்றி சிஸ்டர்…” என்று கைக்கூப்பியவனைப் பார்க்க அவளுக்குள் ஏதோ செய்தது…

அவள் சென்றதும், ரிகாவின் அருகில் அமர்ந்தவன், அவளது தலையை மெல்ல வருடினான்…

மூன்று நாட்களுக்கு முன் அவள் அவனுக்கு போன் செய்து பேசியது நினைவுக்கு வந்தது….

“அண்ணா, நான் காலேஜ் கூட படிச்சிருக்கேன்… என்ஜினியரிங்… சென்னையில்…. அதுவும் மூன்று வருடங்கள் மட்டுமே நியாபகம் இருக்கிறது… அதன் பிறகு இல்லை அண்ணா…” என்று குரல் கம்ம சொன்னவளிடம்,

“விடுடா,,, கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் உனக்கு நியாபகம் வந்துடும்…” என்றான்….

“”ஹ்ம்ம்…”

“என்ன..ஹ்ம்…. அப்புறம் மேடம்… இந்த அண்ணனை மறந்துடுவீங்க…”

“நீங்க தான் என்னை மறந்துடுவீங்க….”

“உன்னையா?... நானா?... நெவர்….” என்றான் அழுத்தமாக…

“ஏன்?...”

“நீ நாளைக்கு வீட்டுக்கு வருவல்ல, அப்போ சொல்லுறேன்…”

‘ஹை… நாளைக்கு உங்க வீட்டுக்கு நான் வரேனா?...”

“அதென்ன உங்க வீடு… நம்ம வீடு…. சரியா?...” என்று அதட்டினான் அவன்…

“அவனின் அதட்டலில் பாசமே இருந்தது கோபம் துளியும் இல்லை… அதை உணர்ந்தவளுக்கு ஒரு வித நிம்மதி பரவியது நெஞ்சில்…

“ஹ்ம்ம்… சரிண்ணா… நம்ம வீட்டுக்கு நான் வரேன்… பட் அங்கே பூ, செடி, மரம் எல்லாம் இருக்கு தானே?...”

“இருக்குடா… ஏன் கேட்குற?...”

“இல்லை அண்ணா, எனக்கு அதெல்லாம் ரொம்ப பிடிக்கும்… அதுல பட்டாம்பூச்சி வந்து உட்காருமா, அதை நான் பிடிக்க போகும்போது அது அடுத்தச் செடிக்கு பறக்குமா, அப்படியே விளையாட எனக்கு ரொம்ப இஷ்டம்… அதான் கேட்டேன்… இந்த ஹாஸ்பிட்டலியே இருந்து எனக்கும் போர் அடிக்குது அண்ணா, வெளி உலகத்தை எப்போ பார்ப்பேன்னு இருக்கு… அதும் நான் இங்கே இருந்து வெளிய வந்து பார்க்குற முதல் இடம் என் அண்ணன் வீடா தான் இருக்கணும்… அதுலே இருக்குற வண்ண வண்ணப் பூக்கள் தான் நான் ரசிக்கிற முதல் விஷயமா இருக்கணும்.. இது எல்லாத்துக்கும் மேல்… நான் வெளிய வந்து பார்க்குற முதல் மனிதன் என் அண்ணனா தான் இருக்கணும்…”

அவளின் வார்த்தைகள் அவனுக்கு பெரும் உவகையை அளித்தது… நீண்ட நாட்களுக்குப் பின் சந்தோஷம் அவனது வாழ்க்கையில் குடிகொண்டது…

“அண்ணா… என்னாச்சு…. ஹலோ… இருக்கீங்களா?...”

“ஹ்ம்ம்… இருக்கேண்டா…”

“சரி சரி… கனவுல மிதந்தது போதும்… நாளைக்கு நான் சாப்பிட என்ன என்ன வாங்கி வைக்கலாம்ன்னு யோசிங்க… ஒரே மருந்து மாத்திரையும் சாப்பிட்டு நாக்கே போச்சு….”

“ஹ்ம்ம்… சரிடா… உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு…. செஞ்சு வைக்குறேன்…”

“எதுக்கு… மறுபடியும்… நான் ஹாஸ்பிட்டல் வர்றதுக்கா?...”

“ஏண்டா.. அப்படி சொல்லுற?...”

“பின்னே நீங்க சமைக்கிறதா சொல்லுறீங்களே…”

‘ஹேய்…. வாலு… உன்னை…”

“போதும் போதும்… தங்கைகிட்ட பாசமழை பொழிந்தது… போயி ஆப்பரேஷன் பண்ணுங்க… கிளம்புங்க… காத்து வரட்டும்…”

“இரு இரு உன்னை… நாளைக்கு பார்த்துக்கிறேன் என் பட்டாம்பூச்சி…”

“பட்டாம் பூச்சியா?... ஹ்ம்ம்.. சரிங்க… டாக்டர் சார்…” என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தவளை எண்ணி எண்ணி பார்க்கையில் அவனுக்கு தொண்டை அடைத்தது…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.