(Reading time: 39 - 77 minutes)

 

ப்பறம் அங்கிள் நான் உங்களை இதுக்கு முன்னாடி இந்த கோவிலில் பார்த்ததே இல்லையே…”

“இல்ல… சித்து…. இன்னைக்கு தான் முதன் முதலா வந்தேன்…. இன்னைக்கே மனசு குளிர தரிசனம் கிடைச்சிட்டு… என்று அவளைப் பார்த்துக்கொண்டே கூறியவன், அவள் தரையைப் பார்த்த வண்ணம் இருப்பதை பார்த்துவிட்டு, இனி அடிக்கடி வருவேன்…” என்றான்…

“ஓ… இவர் சக்தியுள்ள சாமி அங்கிள்… கண்டிப்பா என்ன கேட்டாலும் தந்திடுவார் தெரியுமா?...” என்றாள் நந்து பக்தியுடன்…

“ஹ்ம்ம்… அப்படி என்னல்லாம் கொடுத்தார் சாமி உனக்கு?...”

“நிறைய கொடுத்திருக்கார் அங்கிள்… இவள் கூட அவர் எங்களுக்கு கொடுத்த ஃப்ரெண்ட் தான்… தெரியுமா?...” என்றாள் பெரும் மகிழ்ச்சியுடன்…

“ஐ..சி… எனக்கு தெரியாதே…”

“உங்களுக்கே நாங்க இன்னைக்கு தானே அங்கிள் சொன்னோம்…” என்று சிரித்தான் சித்து…

“ஹ்ம்ம்… காமெடி… சரி சரி… ஆமா… அதென்ன, இன்னும் அங்கிள் சொல்லுறீங்க?...”

“அது வந்து…” என்று நந்து இழுக்கும்போதே,

“இன்னைக்கு என்ன விஷயமா இந்த கோவிலுக்கு வந்தீங்க, இதுவரைக்கும் வராம…” என்றான் சித்து…

“அது…. இன்னைக்கு என் அம்மாவோட பையனுக்கு பிறந்தநாளாம்… அதான் என்னை கோவிலுக்கு போய்விட்டு வர சொன்னாங்க…” என்றான் சாகரியைப் பார்த்தபடி…

அவளுக்குப் புரிந்து போயிற்று… புரிந்து கொண்டதின் அடையாளமாக அவளது இதழ்கள் மென்மையான சிரிப்பை உதிர்த்துவிட்டு, ஏதேதோ முணுமுணுத்தது… பின், கன்னங்கள் இரண்டு புறமும் தொட்டுவிட்டு இதழ் ஒற்றிக்கொண்டாள்…

அதைக் கண்டவனின் உள்ளம் சுகமான இன்பம் கொண்டது… எனக்காக வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறாளாம்… ஹ்ம்ம்… அய்யோ… என் சீதை… ஏன் இப்படி?... என்னைப் பிடித்திருக்கிறதா உனக்கு?... நான் யாரென்று தெரியாமலே எனக்காக வேண்டிக்கொள்கிறாயா?... இவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவளா என்னவள்?... ஹ்ம்ம்…

“என்ன சொல்லுறீங்க… புரியலையே எனக்கு…” என்றான் சித்து குழப்பத்துடன்…

சாகரி அவனை தலையசைத்து கூப்பிட்டாள்… அவள் தலையசைக்கும்போது அவள் காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கியும் சேர்ந்தாட, தன்னை மறந்திருந்தான் ஆதர்ஷ்… அவள் பக்கம் சாய்ந்த சித்துவிடம் அவள் விவரத்தைக்கூற, அவனோ “இருங்க அங்கிள் இப்போ வந்துடுறோம்… நந்து நீ வா…” என்று சாகரி பேச வாயெடுக்கும் முன்பே, தங்கையை அழைத்துச் சென்றுவிட்டான் சித்து…

இருவரும் இருக்கும்போதே, அவளை விட்டு அவன் பார்வை அகலவில்லை… இனி கேட்கவா வேண்டும்?... அவளின் எதிரே இருந்தவன் ஒரு கையை தன் மடி மீது ஊன்றி கன்னத்தில் விரல் வைத்து அவள் விழிகளில் சிக்கிவிட துடித்துக்கொண்டிருந்தான்….

அவளுக்கோ, என்ன செய்வதென்று தெரியவில்லை… இப்படி திடீரென அவர்கள் விட்டு செல்வார்கள் என கனவிலும் அவள் எண்ணவில்லை… இருவரும் இருக்கும்போதே, தரையை விட்டு பார்வையை அகற்றாதவள், இப்பொழுது இன்னும் அதிகமாக கீழே பார்த்தாள்…

விழிகளில் கலந்த உறவை

நீங்கும் போது பிரிவோடு தவித்த என்னவள் அழகா?

இல்லை அவளின் அந்த கண்கள் அழகா?

யாரும் பார்த்திடுவார்களோ என அஞ்சி அஞ்சி

பாத சுவடு அருகில் பாதம் வைத்து நடந்த என்னவள் அழகா?

இல்லை அவளின் அந்த செயல் அழகா?

என் பிறந்த நாள் கேட்டதும்

தனக்குள் வேண்டிக்கொண்ட என்னவள் அழகா?

இல்லை அவளின் அந்த மனம் அழகா?

காதுகளில் பச்சைக்கல் ஜிமிக்கியாட

சிதம்பர ரகசியம் பேசிய என்னவள் அழகா?

இல்லை அவளின் அந்த அசைவு அழகா?

பக்கத்தில் உடன்வந்தவர்கள் இல்லையென

தரையோடு மௌன மொழி பேசும் என்னவள் அழகா?

இல்லை அவளின் அந்த தோற்றம் அழகா?...”

கண்களோ, செயலோ, மனமோ, அசைவோ, தோற்றமோ..

எதுவாயினும் அது என்னவளுக்கு அழகு தான்

இவை அனைத்தும் அவளுக்குரியதே

இந்த ராமனும் சேர்த்து…”

என்று நெஞ்சில் கை வைத்து பேசியவனின் கடைசி வார்த்தை அவள் இதயம் திறந்து உள்நுழைய, சட்டென்று அவனைப் பார்த்தவள், அவனின் விழிகளுக்குள் கட்டுண்டாள்… இதைவிட அழகாய் உணர்வு பூர்வமாய் தனது காதலை யாரும் சொல்லிட முடியாது என்றே அவளுக்கு தோன்றியது… இருந்தும் அவனிடம் பேச தயங்கினாள்… அவள் அறியாமல் கண்கள் நீர் கொண்டது… உதடுகள் துடித்தது… கைகள் நடுங்கியது…

அவளின் நிலை புரிந்தவன், மெதுவாக தலையசைத்தான்…  “என் சீதையின் கண்ணீரை நான் காண வேண்டுமா?... எனில் என் இதயம் வடிக்கும் உதிரத்தை அவள் காண தயாரா?...” என்று அவன் சொன்னது தான் தாமதம் என்பது போல், அவனது வாயருகே தனது கையை கொண்டு சென்றவள் வேகமாக வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்…

“ஹ்ம்ம்… சீதை… என் சீதை… ஹ்ம்ம்…” என்றான் சிரிப்புடன்…

அவனது சிரிப்பில் அவள் தொலைந்து போனாள்….

“யாரோ, என்னைப் பார்க்க மாட்டேனென்று தரையைப் பார்த்துட்டிருந்தாங்க கொஞ்ச நேரம் முன்னாடி… அவங்க தானா இது?... இப்படி என்னை வச்ச கண்ணு வாங்காமப் பார்க்குறாங்க?...ஹ்ம்ம்…” என்று புருவம் உயர்த்தி கேட்ட விதத்தில் அவளுக்கு உலகமே மறந்து போனது… நாணம் பலமாக எட்டிப்பார்க்க, கைகளினால் முகத்தை மூடிக்கொண்டாள்…

அந்த செய்கை… அவளை இன்னும் அழகாக்கியது… அதை ரசித்துக்கொண்டிருந்தவன் மனம் காதலில் நனைந்து கொண்டிருந்தது மெல்லிய சாரலாய்…

“சீதை என்னைப் பிடிச்சிருக்கா?...”

அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காத அவள் கையை எடுத்துவிட்டு அவனைப் பார்த்தாள்…

மீண்டும் அங்கே கண்களின் சங்கமம் அரங்கேறியது இனிதே…

சில நாழிகைகள் முன், என்னிடம் யாரேனும்

உன் விழித்தூண்டிலில் சிக்கிக்கொள்வேனென

சொல்லியிருந்தால் மறுத்திருப்பேன் தீர்மானமாய்..

ஆனால்இப்பொழுது காலமெல்லாம்

உன் இமைக்கதவுகளில் மறைந்து, இதயச்சுரங்கத்துள் புதைந்து

உன் கைச்சிறைக்குள் வாழ ஆசைப்படுபவளைப்

பார்த்து பிடித்திருக்கிறதா என்று கேட்கின்றாயே என்னவனே

உன்னை எனக்கு பிடிக்கவில்லை எனில்

இந்த உலகத்தில் எனக்கு பிடிப்பென்று ஏதேனும் உண்டோ?...

உயிரே நீ என்று ஆன பின்பு

பிடிக்குமா என்று நீ கேட்டால் அது நியாயமா?...

உன் சீதையை நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா?...

என் ஸ்ரீராமா…”

அவளின் பதில் கேட்டு ஓரிரு வினாடிகள் அவனிடத்தில் அசைவு இல்லை…

“என் சீதை…” என்று உருகிய குரலில் கூறிவிட்டு தன்னவளுடன் இணைந்து காதல் நதியில் பயணிக்க ஆரம்பித்தான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.