(Reading time: 30 - 60 minutes)

 

பார்க்கத்துடிக்கும் கண்களையும் அடங்க மறுக்கும் உள்ளத்தையும் கட்டுப்படுத்துவது ஆதர்ஷிற்கு பெரும்பாடாய் இருந்தது…

அதுதான் இப்பொழுதெல்லாம் தவறாது அவளை தரிசிக்கிறாயே… இன்னும் ஏன் இப்படி சொல் பேச்சு கேளாமல் குதிக்கிறாய் என அவன் மனம் அவனிடத்தில் பொய்யான கோபம் கொண்டது…

என்னவளுக்கு என்னுள் ஒரு இடம் தந்ததில் உனக்கு ஏன் கோபம்???... உனக்கென்ன பிரச்சினையாம்???... என்று கேட்டது தான் தாமதம் என்பது போல் அது சினத்துடன் அவனை முறைத்தது….

உனக்கு மனசாட்சி இருக்கிறதா இல்லையாடா ஆதி?... என்று அது கேட்க, ஏனில்லை… அதுதான் நீ இருக்கிறாயே… என்று அவனும் விடை அளித்தான்…

ஆமாம்… இந்த பதிலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை… செய்வதெல்லாம் செய்துவிட்டு என்ன பிரச்சினை என்றா கேட்கிறாய்???.... அவளுக்கு இடமும் தந்து அவளையே எண்ணி நீ பகலில் கனா காண்பதும், இரவில் நீயும் தூங்காமல் உன்னுள் இருக்கும் என்னையும் தூங்க விடாது பேசிக்கொண்டிருக்கின்றாயே பாவி… போடா போய் அவளை விரைவில் கோவிலில் சந்தி… இல்லையென்றால் அய்யோ அவளுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க முடியவில்லையே என்று அதற்கும் புலம்பி என்னையும் துயில் கொள்ள விட மாட்டாய் இன்றும்… என அவன் மனம் உரைக்கவும் அவனுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது… சிரிக்கும்போது தான் எவ்வளவு வசீகரமாய் இருக்கிறாய் நீ…. ஹ்ம்ம்… சிரித்தே என்னையும் ப்ளாட் ஆக்கிவிட்டாய்…. ஹ்ம்ம்… போய் வா ஆதி… என்று இன்முகத்துடன் அவனை அனுப்பி வைத்தது அவனின் மனம்….

தூது போவாயோ மலரே

என்னவருக்காக….

உன் வாசம் கொண்டு என் உள்ளம் உரைப்பாயா???

உன் மென்மை கொண்டு என் நினைவை விதைப்பாயா???

உன் வண்ணம் தீட்டி என்னை வரைவாயா???

அவரின் நெஞ்சத்தில்

செல் மலரே….

இந்த சீதையின் ராமனைத் தேடி செல்

விரைந்து வந்துவிடு மீண்டும் என்னிடத்தில்

என்னவர் அனுப்பிய சேதியோடு…”

தேடுதல் கொண்ட விழிகளோடு அந்த நந்த வனத்தில் உள்ள மலரோடு கொஞ்சி கெஞ்சி கொண்டிருந்தாள் சாகரி… தூது அனுப்புகிறாளாம் மலரையே… விந்தையாக இருந்தது அவளுக்கு அவள் செயலை எண்ணி… காதலித்தால் புத்தி பேதலித்து போவது இதுதானோ… என்றெண்ணிக்கொண்டவள்…. எனில் மலர் தூது போகாதா???.. ஹ்ம்ம்.. பெரும் ஏக்கத்தோடு அங்கிருந்த சில மலர்களை பறித்துவிட்டு அகன்றாள்…

தூது வந்தாயோ மலரே

என்னவளுக்காக

அவள் வாசம் அன்றி என்னுள் மணம் ஏது???

அவள் நினைவில்லாத என் ஒரு நொடி ஏது???

அவள் முகவண்ணம் இன்றி என் தூரிகை ஏது???

என் மஞ்சத்தில்

செல் மலரே

இந்த ராமனின் சீதையிடத்தில்….

நான் வந்துவிட்டேன் என கூறு அவளிடத்தில்…”

கையில் அவளின் நினைவாக வைத்திருந்த மல்லிகையிடம் மானசீகமாக பேசிக்கொண்டிருந்தவன், அவளே அதை தூதாக அனுப்பியது போல் உணர்ந்தான்…. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மல்லிகை அவர்களுக்கு தூது தான்…

இது இது அவரின் மணம் அல்லவா???

இந்த அழுத்தமான காலடி ஓசை அவருடையது அல்லவா??...”

என்று விழி நிறைய தவிப்பையும் தேடுதலையும் பிரதிபலித்தவளின் கண்களை ஏமாற்றாமல் அங்கே வந்து கொண்டிருந்தான் ஆதர்ஷ்…

ளிச்சிடும் கண்களில் அவளைப் பார்த்த உற்சாகம் கொப்பளித்தது… உதடுகளில் அவளுக்கென்றே பூத்த அவள் மட்டுமே பார்த்து மகிழும் அந்த வசீகரப்புன்னகை… காற்றுக்கும் ஆசை வந்து கலைத்து விளையாடிய அவனது கேசத்தை காற்றிடமிருந்து மீட்டு தன் கையினால் கோதிவிட்டு அவளை மேலும் வசமிழக்க செய்தான் அந்த பொல்லாத காதலன்…

நேர் வகிடெடுத்து தளர பின்னியிருந்த கருங்கூந்தல்… அவனைப் பார்த்ததும் ஏற்படும் நாணத்தை மறைக்க கைகொடுத்து முன்வந்தது தானாய், அவளின் நாணச்சிவப்பை கன்னங்களிலிருந்து மறைத்தபடி… நெற்றி குங்குமம் நான் உனக்கானவள் என்ற எண்ணம் ஏற்படுத்தி மின்னிக்கொண்டிருந்தது அவனைக்கண்டதும்… சித்திரப்பாவையாம் இவள், உன் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றாள் உனக்கு பிடித்த என்னையும் அணிந்து கொண்டு என்று அவளின் பாவாடை-தாவணி அவனிடத்தில் சேதி சொல்ல, அதை தடுக்க முற்பட்டு முடியாமல் முகம் சிவந்து அவனை தலை கீழாக புரட்டி எடுத்து அவனையே மறக்கடித்துக்கொண்டிருந்தாள் அந்த பொல்லாத காதலி…

காதலில் சிறகடித்து பறப்பதென்றால் இருவருக்கும் கொள்ளைப் பிரியம் போல… ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் என்று ஒன்று உள்ளது என்பதை கோவிலின் பலத்த மணியோசை அவர்களுக்குப் பறைசாற்றியது… இதுவரை சஞ்சரித்துக் கொண்டிருந்த மாய காதல் உலகில் இருந்து வெளி வந்தவர்கள், தெய்வத்தை மனமார தரிசித்துவிட்டு வழக்கம் போல் அமரும் இடத்தில் அமரும் போது…

என் பேத்திக்கு பிறந்தநாள் இன்று… எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிறோம், இதை இருவரும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி அவளின் கையில் தாமரை இலை கொண்டு செய்த கிண்ணத்தில் இனிப்பை வைத்து கொடுத்துவிட்டு சென்றார் அந்த பெரியவர்…

அவள் அதை அவனிடம் நீட்ட, நீ முதலில் சாப்பிடு என்று அவன் சொல்ல, தயங்கிய அந்த மங்கையைப் பார்த்தவன், சரி இருவருமே நல்லா சாப்பிடலாம் என்றான் ஆதர்ஷ்…

எபப்டி என்று அவள் புரியாமல் பார்க்கையிலே சிறிது பொங்கலை கையிலெடு என்றதும் அவளும் எடுத்தாள்… அந்த கிண்ணத்தை அவன் எடுத்துக்கொண்டான்…. இதைத்தானே நான் முதலிலே சொன்னேன் என்றவாறு அவள் பார்க்க, கொஞ்சம் பொறு என்பது போல் கண்மூடி இமைத்தவன், உன் கையில் உள்ளதை எனக்குதா என்றான்…. என்ன என்று அவள் விழி விரிக்க, கையில் தான் டா… தா என்று புன்சிரிப்போடு அவன் கூறவும், உதடுகளில் சட்டென்று உதித்த முறுவலையும் அடக்கிக்கொண்டு அவனின் உள்ளங்கையில் அவள் அந்த சிறு விள்ளலை வைத்தாள் விரல் நடுங்க…

தேவாமிர்தம் கூட தோற்றுத்தான் போகும் தன்னவள் அள்ளித்தந்த இந்த சிறு விள்ளலின் முன் என்று நினைத்தவனாய் உள்ளம் மகிழ உண்டான் அதனை… இப்போது அவனும் அதே முறையில் அவளிடத்தில் தர, வெட்கத்துடன் வாங்கி உண்டாள் தன்னவனின் நேசம் மிகுந்த காதல் கொண்ட விள்ளலை அவளும்…

அருகிலிருந்த திருகு குழாயில் கை கழுவி விட்டு அவள் அகல, அவனோ கைக்குட்டையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்… தன் ஆடையிலேயே அதை துடைக்கலாம் தான் ஆனால் அதே உடையோடு தான் அவன் முக்கியமான மீட்டிங்கையும் முடித்தாக வேண்டும்… ஈரம் தோய்ந்த உடை காய்ந்து விடலாம்.. ஆனால் உடை கசங்கிவிட்டால் என்ன செய்ய முடியும் என்று அவன் தனக்குள் யோசித்துக்கொண்டிருக்க… எங்கே இவரைக்காணோம் என்று திரும்பியவள் அவன் அங்கேயே அசையாமல் நின்று தன்னைத்தானே பார்த்து கொள்வதை கண்டு என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அவனருகில் சென்றாள்… பக்கத்தில் வந்தவளிடம் நனைந்த இரு கைகளையும் என்ன செய்வதென்ற பாவனையில் அவன் முழிக்க, அவள் சற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் தாவணியின் தலைப்பை நீட்டினாள் குனிந்த தலை நிமிராமல்…

சட்டென உள்ளூர இதம் பரவி இதமான இன்ப அவஸ்தையை கொடுத்தது அவனுக்குள்… அவள் நீட்டியபடியே நிற்க அவனோ அசைவற்று நின்றிருந்தான்… அவள் என்னாயிற்று என்று விழி உயர்த்தி அவனைப் பார்க்க, அவனோ அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்…

சீதை… நான்… வந்து… நா……..ம…. இன்……..னு…………………..ம்………………. என்று இழுத்தவன் அவளின் அந்த ஒரு நொடி கண் அசைவில் நிலை குலைந்தான்… அது சொன்ன தேதியில் உறைந்து போனான்… துடைத்துக்கொள்ளுங்கள் என்று அவள் கெஞ்சல் மொழியில் சொல்லிய பின்பும் அவனால் தட்டமுடியவில்லை.. அவளின் தாவணி தலைப்பிற்கும் நோகாதவாறு அதைப் பற்றி கைகளைத்துடைத்துக்கொண்டவன் மெதுவாக அவற்றை கைகளிலிருந்து விடுவிக்க அவள் மௌனமாய் நடந்தாள் அவனின் முன்னே மிக மெதுவாக…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.