(Reading time: 17 - 33 minutes)

……..ன்…………..ன…………!!!!!!!!!!!!!!!????????????????? என்றவளுக்கு தலை சுற்றியது…

நீ எதுக்கு இப்போ இவ்வளவு அதிர்ச்சியாகுற?... உனக்கு உன் அப்பா அம்மாவை பிடிக்கும்தானே… அப்புறம் என்ன?... அவங்க பார்க்குற பையனை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு… என்னைக்கும் பெத்தவங்க நம்ம நல்லதுக்கு தான் எல்லாம் செய்வாங்க… அது நான் சொல்லி உனக்கு தெரியணும்னு இல்லன்னு நினைக்குறேன்… என்றவன் நகர முயல,

அ…ப்…போ….. என்…..னை காதலிக்குறேன்னு சொன்னது?....

உண்மைதான்…. உன்னை காதலிச்சேன் தான்… நான் இல்லன்னு சொல்லலையே… ஆனா, காதலா பெத்தவங்களான்னு பார்க்குறப்போ, பெத்தவங்க தான் முதலில்… ஹ்ம்ம்… நீ கூட அதுதான் எங்கிட்ட சொன்னதா நினைவு… என்று அவளின் பிறந்த நாள் அன்று அவள் அவனிடம் பேசியதை அவன் அடிக்கோடிட…

அவள் வலியுடன்,,, அப்போ, நீ என் பொண்டாட்டி… நான் இருக்கேன் உனக்குன்னு நீங்க சொன்னது எல்லாம்???..

ஹ்ம்ம்… அன்னைக்கு அந்த சந்தர்ப்பத்துல சொல்லணும்னு தோணுச்சு… சொன்னேன்… இப்போ, உன் வழியைப் பார்த்து போன்னு சொல்லுறேன்ல… போ… அதுதான் எல்லாருக்கும் நல்லது… என்றவன் அவள் பதிலை எதிர்பாராது சட்டென்று சென்றுவிட,

கன்னங்களில் வழிந்த கண்ணீரையும் பொருட்படுத்தாது, அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் மஞ்சரி…

ஆக… அவ்வளவுதானா?... தன் காதல்..???

முடிந்தேவிட்டதா அத்தனையும்???

இதற்காகவா இதை சொல்வதற்காகவா என் வாழ்வில் வந்தாய் நீ???

இத்தனை நாட்கள் பார்த்து பழகியது, பேசியது எல்லாம் கானல் நீரா?...

நான் இருப்பேன் என்று சொன்னாயேடா?.... இன்றும் என் மனதில் நீ மட்டும் தானடா இருக்கிறாய்… அது உனக்கு ஏனடா புரியவில்லை?...

இப்படி என் மனதை கூறு போட்டு விட்டாயே… ஏனடா இப்படி செய்தாய்?... நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்?...

எனக்கு எதற்கு இப்படி ஒரு தண்டனை???

உனக்கு என் மனதில் இடம் கொடுத்ததற்கா இன்று நீ என்னை போ என்கிறாய்?...

இன்னொருவருடன் திருமணமா???... எப்படி இப்படி பேச உனக்கு மனம் வந்தது?...

சொன்னது நீ தானா?....” என்ற கேள்வியுடன் அப்படியே உடைந்து போனவளாய் இருந்தாள் மஞ்சரி…

நடந்த அனைத்தையும் தோழிகள் இருவரிடத்திலும் அவள் சொல்லிமுடித்த போது, பாலாவுக்கோ, தாங்க முடியாத கோபம் உண்டாக, வள்ளிக்கோ கடவுளே இது என்ன புது சிக்கல் என்றிருந்தது…

என்னால தாங்க முடியலை பாலவள்ளி…. அவர் இப்படி சொல்லுவாருன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை… என்றவளுக்கு கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வர, அதை மென்மையாக வள்ளி துடைத்துவிட்டு,

ஒன்னுமில்லைடா… கவலைப்படாதே… மைவிழியன் சார்கிட்ட பேசலாம்… அழாத… தைரியமா இரு… என்றாள்…

எனக்கு நம்பிக்கை இல்ல வள்ளி… அவர் தான் உன் வழியில போன்னு சொல்லிட்டாரே…  என்ற மஞ்சரியின் விழிகளில் மீண்டும் நீர் சூழ,

ஹேய்… நிறுத்துடி… இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ அழற?... அவர் சொன்னாராம்… இவளும் கேட்டுகிட்டு பேசாம வந்துட்டாளாம்?... லூசாடி நீ?... அவர் சட்டையைப் பிடிச்சு உலுக்காம இங்கே உட்கார்ந்து கோழை மாதிரி அழுதுட்டிருக்குற?... எந்திடி நீ… இப்போவே எனக்கு ஒரு பதிலை சொல்லுன்னு அவர்கிட்ட கேளு… போ… போடி… போன்னு சொல்லுறேன்ல… என பாலா அதட்ட..

மஞ்சுவோ… என்ன போய் கேட்க சொல்லுற?... அதான் அவர் சொல்லிட்டாரே… இன்னும் என்ன பதில் சொல்லப்போறார்?... என்று விரக்தியுடன் சொல்ல…

நீ எல்லாம் திருந்த மாட்ட… இதை இப்படியே விட்டா சரிவராது… என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்… நீ முதலில் அழாம வேலையைப் பாரு… மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்… என்ற பாலா அவள் இடத்தில் சென்று அமர,

நீ அழாதே மஞ்சு… நான் மைவிழியன் சார்கிட்ட பேசுறேன்… அவர் ஏன் அப்படி சொன்னாருன்னு கேட்கலாம்… நீ கவலைப்படாதே… கொஞ்சம் அழாம இரு… ப்ளீஸ்… என வள்ளி கெஞ்ச…

சரி…வள்ளி… நான் அழலை… நீ போ… வேலையைப் பாரு… நானும் வேலையைப் பார்க்குறேன்… என்றவள் வள்ளியை வலுக்கட்டாயமாக அவளிடத்திற்கு தள்ள, வள்ளியும் அரைமனதோடு சென்றாள்…

வள்ளியை அனுப்பிவைத்துவிட்டு, தன் இடத்திற்கு அருகே உள்ள அவனது இடத்தை பார்த்தவளுக்கு மனதில் கவலை உண்டாக,

உனக்கு இப்போதான சொன்னேன்… ஒழுங்கா இருன்னு… இங்கே என்ன பார்வை உனக்கு?... உருப்படியா வேலையைப் பாரு… என்று பாலா அதட்ட,

மஞ்சரியும் அதற்கு மேல் அவனது இடத்தை பார்க்காமல் தனது வேலையை கொஞ்சமாவது செய்ய ஆரம்பித்தாள்…

ஆரம்பித்தாள் தான், ஆனால் அவளால் அது முடியவில்லை… வேலை செய்ய அவள் மனமும் ஒப்புக்கொள்ளவில்லை… உடலும் ஒத்துழைக்கவில்லை… விண் விண் என்று தலை வலி அவள் உணர்ந்தாலும், அமைதியாக இருந்தாள் எதுவும் காட்டிக்கொள்ளாமல்…

வேலை செய்வது போன்ற பாவனையிலே இருந்தாள் மஞ்சரி மதிய உணவு இடைவெளி வரை…

மைவிழியன் வருவானோ என்ற தன் மனதின் தேடலும் குறைந்தபாடாயில்லை மஞ்சரிக்கு…

வள்ளியும், பாலாவும் மஞ்சரியை வற்புறுத்தி மதியம் சாப்பிட வைக்க, அவர்கள் இருவருக்காகவும் கொஞ்சம் உண்டாள் அவள்…

இரண்டு மணி போல் வ்ருதுணன் அலுவலகத்தை அடைய, அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவளாக வள்ளி அவனது அறைக்குள் சென்றாள்…

அன்றைய நாளின் வேலையை அவள் சொல்லி முடித்துவிட்டு வெளியே நகர போனபோது, மஞ்சரியின் அழுதமுகம் அவளுக்கு நினைவு வர, மைவிழியனைப் பற்றி விசாரித்தாள் அவள்….

மைவிழியன் சார் இன்னைக்கு லீவா?...

இல்ல… வள்ளி… காலையிலேயே வந்துட்டானே அவன்… ஏன் கேட்குற?..

இல்ல அவர் இடத்துல இல்ல… அதான்… என்றாள் அவளும் தயங்கியபடியே…

அவள் தயக்கம் அவனுக்கு எதுவோ சரியில்லை என்று புரியவைக்க, என்னாச்சு வள்ளி?... எதும் பிரச்சினையா? என்று கேட்டான் அவன்…

அவனிடம் சொல்வது சரியா? தவறா?... என்ற யோசனையில் அவள் இருக்க…

வ்ருதுணன் அதற்கு முடிவு கட்டும் விதமாக, பேசினான்…

மஞ்சரிகிட்ட எதும் பிரச்சினை பண்ணிட்டானா வள்ளி???

அவனின் கேள்வியில் அதிர்ச்சியானவளாக, அவள் இருக்க…

எனக்கு தெரியும் வள்ளி… மஞ்சரியும், மைவிழியனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கன்னு நம்ம ஆஃபீஸ்ல பேசிக்கிறத நானே கேட்டிருக்கேன்.. அதுபற்றி நானே அவனிடம் கேட்டேன்… ஆனா அவன் பதிலே சொல்லலை…

இப்போ நீ அவனைப் பற்றி விசாரிக்கிறன்னா, கண்டிப்பா அவன் எதோ பிரச்சினை பண்ணியிருக்கான்னு தான் அர்த்தம்… சொல்லு வள்ளி… என்னாச்சு?... என்ன செஞ்சு தொலைச்சான் அந்த குரங்கு???

அவனிடம் மஞ்சு சொன்னதை சொன்னவள், வ்ருதுணனின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்…

என்ன வள்ளி சொல்லுற?... அவனா இப்படி சொன்னான்?... அவன் கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருப்பான் தான்… அவனுக்கு நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் கூட உண்டு… எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான்… ஆனா, காதல்ன்னு அவன் விழுந்தது கிடையாது… இந்த காலத்துல இருக்குற மாதிரி ஜாலியா, ஃப்ரெண்ட்லியா இருப்பான் எல்லாரோடவும்… ஆனா, மஞ்சரி கிட்ட அவன் பேசி பழகுற முறை வித்தியாசமா தெரிஞ்சது எனக்கு… அதனால தான் அன்னைக்கு நான் உன் திருவிளையாடல் எல்லாம் அந்த பொண்ணுகிட்ட காட்டாதடா… அவ நல்ல பொண்ணுன்னு சொன்னேன்… ஆனா அவன் என் பேச்சை காதுலேயே வாங்காம போயிட்டான்… அதுக்கப்புறம் எங்கிட்ட பேசுறதையே முடிஞ்ச அளவு அவாய்ட் பண்ணுறான் வள்ளி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.