(Reading time: 17 - 34 minutes)

ஹாய் தங்கச்சி… என்ன காலையிலேயே உன் அண்ணிகிட்ட சண்டை போட்டிட்டிருக்குற?...”

“வாங்க அண்ணா… வாங்க… உங்களைத்தான் காணோம்னு தேடிட்டிருந்தேன்…”

“என்னைத் தேடுனியா?... ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே… சொல்லும்மா என்ன விஷயம்??...”

“உங்க அருமை காதலியை இங்க இருந்து கூட்டிட்டு போங்கன்னு சொல்லத்தான் உங்களைத்தேடினேன்…”

“ஹாஹா… நான் ரெடிதான் மா… அவதான் வரமாட்டிக்குறா…” என்றான் மையன் மஞ்சரியைப் பார்த்து கண்ணடித்தபடி…

“ஹேய்… என்னடி… என்னை வச்சு… காமெடி பண்ணிட்டிருக்கீங்க இரண்டு பேரும்?... கொன்னுடுவேன்… ஜாக்கிரதை… அண்ணனாம் அண்ணன்… பெரிய அண்ணன்… உன் அண்ணன் சப்போர்ட்டுக்கு இருக்குற தெனாவட்டுல ரொம்ப ஆடாதடி…” என்று மஞ்சு பொரிய…

“ஆமா மஞ்சு… நான் தான் ஆடுறேன்… நீ வேணா வீடியோ ரெக்கார்ட் பண்ணு…” என்றாள் பாலாவும்…

“ஹேய்… என்னடி எங்கிட்டேயா?...”

“ஆமாடி உங்கிட்டதான்… அதுக்கு இப்போ என்னாங்குற நீ?...”

இரண்டு பேரும் மாறி மாறி பேசி சண்டைப்போட்டுக்கொண்டிருக்கையில் மைவிழியன் மஞ்சுவைப் பார்த்து சைகையில் எதுவோ கூற, அவளும் புரிந்து கொண்டு சட்டென்று பேச்சை மாற்றினாள்…

“அய்யய்யோ…. மஞ்சு இப்படி சொதப்பிட்டியேடி… சார் மட்டும் இப்போ கூப்பிட்டாரோ செத்தேன் நான்…” என்று மஞ்சு புலம்ப…

“மஞ்சு… என்னாச்சுடி?... சொல்லித்தொலை…” என்றாள் பாலா…

“அது வந்து பாலா… சார் ஒரு ஃபைல் கேட்டார் கொண்டு வர சொல்லி… நான் மறந்துட்டேன்… இப்போ ஃபைலோட நான் உள்ள போனா என்னை திட்டுவாரே… அதான்…”

“இதுக்குத்தானா?... சரி… விடு… நீ போக வேண்டாம்… நான் போய் கொடுக்குறேன்… ஃபைல் எடுத்து தா…” என்ற பாலாவை இமைக்காது பார்த்த மஞ்சரி,

“பாலா, அங்க சார் கூட வள்ளி இருப்பா… நீ???... எப்படி?...” என கேட்க…

“யார் இருந்தா எனக்கென்ன?... ஃபைல் கேட்டீங்கல்ல… அதான் கொண்டு வந்தேன்னு சொல்லி அவர் கையில கொடுத்துட்டு வந்திடுவேன்… சிம்பிள்… நீ ஃபைல் எடுத்து தா…” என்று மஞ்சுவை அவசரப்படுத்தினாள் பாலா…

ஃபைலை வாங்கிக்கொண்டு அவர்கள் முன் தைரியமாக எதுவுமே என்னை பாதிக்காது என்று காட்டிக்கொண்டவளுக்கு சற்று தூரம் வந்ததுமே, மனம் அடித்துக்கொண்டது…

“அவங்க முன்னாடி தைரியமா நீ பேசினது என்ன?... இப்போ நீ செய்யறது என்ன?...” என அவள் மனம் அவளிடம் கேட்டுக்கொண்டே வந்ததையோ, எப்படி அவனைப் பார்க்க போகிறாய் அதுவும் வள்ளியின் முன்னிலையில்… என சிந்தித்ததையோ கவனத்தில் வைத்திடாது, வந்தவள் நேரே வ்ருதுணனின் அறை முன் வந்து நின்றாள்…

ஏனோ அதற்கு பிறகு அவளுக்கு ஓரடி கூட எடுத்து வைக்க தெம்பில்லை… கடவுளே காலைக் கனவு போல எதுவும் நடந்திருக்கக்கூடாது… நடக்கவும் கூடாது… என வேண்டிக்கொண்டே கதவைத்தட்டினாள்…

“மே ஐ கம் இன் சார்?...”

“யெஸ்… கம் இன்…”

கதவைத் திறந்து உள்ளே வந்தவளுக்கு சந்தோஷம் தாளவில்லை..

வ்ருதுணனைத் தவிர அங்கே யாருமே இல்லை…

அவளின் பார்வை அறையை சுற்றி துளாவ, அதை கண்டு கொண்டவனின் இதழ்களில் புன்னகை ஒன்று பூத்தது…

“மீட்டிங்க்… அந்த ரூமில் நடக்குது பாலா…” என்று சொல்லவும் தான், அவளின் தேடல் நின்றது…

“சாரி… இந்த ஃபைலை மஞ்சரிகிட்ட கேட்டீங்களாம்… லேட்டா ஃபைலை எடுத்துட்டு வந்து கொடுக்க பயப்பட்டா… அதான் நான் வாங்கிட்டு வந்தேன்…”

“ஃபைல் நான் கேட்டேனா?... எப்போ?... இது என்னடா புது குழப்பமா இருக்கு” என்று சிந்தித்தவனுக்குள் சட்டென்று ஒளி பரவியது…

“சரி… யார் புண்ணியமோ, காலையிலேயே உன்னை பார்த்து, பேச ஒரு வாய்ப்பு கிடைச்சது… அது போதும்…” என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன்,

“பயமா?? எதுக்கு??...” என பாலாவிடம் கேட்டான்…

“அது… வந்து… நீங்க திட்டுவீங்கன்னு…. அதான்…”

“ஓ…. நான் திட்டிப் பார்த்திருக்கீங்களா?...”

“ஹ்ம்ம்… இல்லை…”

“அப்புறம் ஏன் மஞ்சு பயப்படணும்?... இதை நீங்களே சொல்லி அவங்களை ஃபைல் எடுத்துட்டு வர சொல்லியிருக்கலாமே… பாருங்க… இப்போ தேவை இல்லாம உங்களுக்கு வேற வீண் அலைச்சல்…” என அவன் சொல்லிமுடித்ததும்,

“எனக்கு எந்தவித அலைச்சலும் இல்லை… இந்த ஒரு ஃபைலைக்கொண்டு வந்து கொடுக்குறதால நான் ஒன்னும் குறைஞ்சு போயிடமாட்டேன்…” என்றாள் பட்டென்று…

அவளின் பட்டென்ற பதிலில் மனதிற்குள் சிரித்தவன், வெளியே அதைக் காட்டிக்கொள்ளவில்லை…

“ஹ்ம்ம்… ஃபைல் கொடுங்க பாலா…” என்று அதனை வாங்கிக்கொண்டவன் ஃபைலை புரட்டினான்…

சில நிமிடங்கள், அவன் ஃபைலை புரட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே அவனையே இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தாள்…

சின்ன நெற்றி, அழகான கண்கள், கூர் நாசி, வட்ட முகம், நல்ல நிறம், என அவனை அளவெடுத்துக்கொண்டிருந்தவள், அவன் சட்டென்று நிமிரவும், அவள் தனது பார்வையை விலக்கிக்கொண்டாள்…

அவசரம், அவசரமாக அவள் பார்வையை விலக்கியதைக் கண்டுக்கொண்டவன் மனதினுள் மெல்லிய சாரல் அடித்தது இதமாய்…

“ஹ்ம்ம்… பாலா… ஃபைலில் எல்லா விவரங்களும் இருக்கு… தேங்க்ஸ்…” என்று சொல்ல…

“ஹ்ம்ம்…” என்றபடி அங்கிருந்து நகர மனமில்லாது அகல முயன்ற போது, அவனது குரல் தடுத்தது…

“எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா பாலா?...”

“சொல்லுங்க…”

“தேங்க்ஸ்… என்ன உதவின்னு கூட கேட்காம செய்யுறேன்னு சொன்னதுக்கு…”

“ஹ்ம்ம்… பரவாயில்லை…”

“நான் சொல்லுறதை நோட் செஞ்சு லெட்டர் டைப் பண்ணித்தர முடியுமா பாலா இப்போ?... மத்த ஸ்டாஃப்ஸ் எல்லாரும் மீட்டிங்க்ல இருக்காங்க… அதான்…”

“ஓ… சரி…. நீங்க மீட்டிங்க் போகலையா?...”

“ஹ்ம்ம்… யுவி தான் மீட்டிங்க் வைக்கணும்னு சொன்னான்… அதான் அவன் அங்க இருக்கான்… நான் இங்க இருக்கேன்…” என்றான் அவளுக்கு புரியும்படி…

“ஓகே… ஒகே… நீங்க சொல்லுங்க… நான் லெட்டர் ரெடி பண்ணுறேன்…” என்றவளிடம் “ஷ்யூர்…” என்றபடி முக்கியமான குறிப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான் அவன் நடந்தபடி…

அவளும் சிரத்தையாக அதை எழுதி வைத்துக்கொண்டிருந்தாள்… அப்போது ஒரு நிமிடம் என அவன் தனக்கு வந்த போன் காலை அட்டெண்ட் செய்து பேச, அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தாள் மறுபடியும்…

அசாத்திய உயரமும், அவளை சிதற வைக்கும் அவனது முகமும், காற்றில் கலைந்து முன் நெற்றியில் விழுந்த தனது கேசத்தை அவன் தனது விரல் கொண்டு சரி செய்யும் விதமும், அவளை ஒட்டு மொத்தமாக ஈர்க்க… தன் வசமிழந்து இடம், பொருள், மறந்து அவனை ஆசையோடு பார்த்திருந்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.