(Reading time: 12 - 24 minutes)

ஸ்வத்தா????... காரில் ஏறப்போனவன் சட்டென திரும்பினான்.

'நினைச்சேன்' என்றான் சஞ்சீவ். 'காரிலே ஏறுங்கடா ரெண்டு பெரும். மிச்சத்தை போலீஸ் கமிஷனர் கிட்டே நான் பேசிக்கறேன்'. 

'வேண்டாம் சஞ்சா' என்றான் ரிஷி. அவங்களை விட்டுடு.

ஏன்டா? திகைப்புடன் கேட்டான் எஸ்.கே.

அவனுக்கு பதில் சொல்லாமல் அந்த ரௌடிகளை பார்த்தவன் மெல்ல சொன்னான் 'நான் கொஞ்ச நாள் எஸ்.கே வோட திருவான்மியூர் கெஸ்ட் ஹவுஸ்லே தான் இருப்பேன். வேணும்னா உங்க அஸ்வத்தை நேரிலேயே வந்து கணக்கை தீர்த்துக்க சொல்லு. அப்போவாவது அவன் மனசு ஆறும்னா எனக்கு அது சந்தோஷம்தான்.

'சஞ்சா காரிலே ஏறுடா' என்றபடி சஞ்சீவை இழுத்துக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ரிஷி. கார் புறப்பட்டது. காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான் சஞ்சீவ்.

கார் கொஞ்சம் நகர்ந்தபிறகு கேட்டார் பரந்தாமன் 'நிஜமாவே அஸ்வத்தோட ஆளுங்கதானா சார் இவங்க. இல்லை பொய் சொல்றானுங்களா? ஆர்.கே சார் வர்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தானே தெரியும். அப்போ எப்படி இங்கே கரெக்டா வந்தானுங்க.? எனக்கு ஒண்ணுமே புரியலை. இவனுங்களை ஏன் சார் அப்படியே விட்டீங்க.? போலீஸ்லே ஒப்படைச்சு இருந்தா நிறைய உண்மைகள் தெரிஞ்சிருக்கும்.'

ரிஷி ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனை கண்களால் அடக்கினான் அருகில் இருந்த சஞ்சீவ். பரந்தாமன் எதிரில் எதையும் பேச விருப்பமில்லை அவனுக்கு.

'பார்க்கலாம் பரந்தாமன். எங்கே போயிடுவாங்க.? திரும்ப நம்ம கிட்டே தான் வரணும். ஒரு கை பார்த்திடலாம் விடுங்க. எல்லா உண்மையும் ஒரு நாள் வெளியே வரும்' பொதுப்படையாக சொன்னான் சஞ்சீவ்.

ஆனாலும் அவனுக்குள்ளும் அந்த கேள்வி உறுத்தியது. இவர்கள் வருவது  அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

அடுத்த சில மணி நேரங்களில் கெஸ்ட் ஹவுசை அடைந்திருந்தனர். அந்த பிரம்மாண்ட பங்களாவினுள் நுழைந்தது கார். கடற்கரையை ஒட்டிய பங்களா அது.

அங்கே இருந்த வேலையாட்களிடம் உத்தரவுகளை பிறப்பித்து விட்டு அவர்களை. ரிஷிக்கு அறிமுக படுத்திவிட்டு, அவனை மாடி அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான் சஞ்சீவ்.

அடுத்த நொடி அங்கே இருந்த கட்டிலில் அப்படியே கண்மூடி சாய்ந்தான் ரிஷி. மனம்   பல்வேறு உணர்வுகளின் தாக்கத்தில் அலைப்பாய்ந்துக்கொண்டிருந்தது.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பட்டென வெடித்தான் அவனருகில் நின்றிருந்த சஞ்சீவ் 'பைத்தியக்காரன்டா நீ. இமோஷனல் ஃபூல். அவனுங்களை போலீஸ்லே ஒப்படைச்சு இருந்திருக்கலாம். நாளைக்கு காலையிலே எல்லா விஷயமும் பேப்பர்லே, இன்டர்நெட்லேன்னு பறந்திருக்கும். எல்லாருக்கும் ஒரு பயமும் வந்திருக்கும்.'

கண் திறக்காமல் இடம் வலமாக தலை அசைத்தான் ரிஷி. ' 'அதனாலே தான் வேண்டாம்னு சொன்னேன்' போதும்டா எல்லாம் போதும். நான் யார் கூடவும் மோத விரும்பலை. இதுக்குதான் இங்கே வரவே வேண்டாம்னு நினைச்சேன்......' ஒரு நொடி மௌனம் அவனிடம் .

'என்னை பிடிச்சு இழுத்திட்டாடா அவ. பிடிச்சு இழுத்திட்டா என்னை.' எதற்குள்ளோ நழுவிப்போனவன் போல் தன்னையும் மறந்து சொல்லிவிட்டிருந்தான் ரிஷி.

'அப்படி சொல்லு' தனது ஒரு காலை தூக்கி கட்டிலின் மீது வைத்துக்கொண்டு சிரித்தான்  சஞ்சீவ். 'அவ என்னடா உன்னை பிடிச்சு இழுக்கறது.? நீ அவளை உன் பக்கம் இழுத்துக்கோ. எல்லாம் சரியாயிடும்.'

அவன் குரலில் உணர்வுகள் மீண்டவனாக எழுந்து அமர்ந்தான் ரிஷி. 'என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் நான்???'

சில நொடிகள் வாஞ்சையுடன் அவனையே ஊடுருவினான் சஞ்சீவ். 'என்னாச்சுடா???"

'ம்ஹூம். ஒண்ணுமில்லை சும்மா ஏதோ.....'

'அப்படியா சரி அப்போ அம்மாகிட்டே சொல்லுவோம் யாரோ உன்னை பிடிச்சு இழுத்திட்டாங்கன்னு....'

ரிஷி தடுப்பதற்குள் ரிஷியின் லண்டன் எண்ணை அழுத்திவிட்டிருந்தான் சஞ்சீவ்.

'அம்....மா.. வந்திட்டான்மா.......' நாங்க விட்டுடுவோமா?....... கூட்டிட்டு வந்திட்டோமில்ல!!! வரும் வழியில்  நடந்தது எதையும் சொல்லாமல் அம்மா கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டே போனவன்,

'அம்மா இவனை யாரோ இந்தியாக்கு பிடிச்சு இழுத்துட்டாங்களாமே? யாரு என்னனு விசாரிங்க' சொல்லியே விட்டிருந்தான்.

அவனை முறைத்தபடியே சட்டென கைப்பேசியை பிடுங்கியவன். 'அம்மா... அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. இவன் ஏதோ சும்மா விளையாடுறான்.' என்றான்.

அம்மாவிடம் அவளைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை ரிஷி .அவன் மனம் படித்தவர் அப்பா மட்டுமே. அவரும் அம்மாவிடம் சொல்லவில்லை என்றே தோன்றியது.

அவன் திடீரென்று கிளம்பி சென்றது அம்மாவை கொஞ்சம் உறுத்திக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.

'ரிஷி.......'  அவனை கொஞ்சம் நிமிர்த்தியது அம்மாவின் அழுத்தமான குரல். 'யாரவது பொண்ணா பா?

'ம்.......? அ... அது இ...ல்லை மா...' குரல் கொஞ்சம் தடுமாறியது. அம்மாவிடம் பொய் சொல்லி பழக்கம் இல்லை.

அம்மாவுக்கு என்ன தோன்றியதோ?' 'ரிஷி.... ' பொண்ணுங்க மனசோட விளையாடதே.! அது அம்மாவுக்கு பிடிக்காது.  புரிஞ்சுதா?'  அம்மாவின் குரலில் நிறையவே கண்டிப்பு கலந்திருந்தது.

'ச... சரிம்மா....'

'பார்த்து நடந்துக்கோ. வெச்சிடறேன்.'

அழைப்பை துண்டித்துவிட்டு ரிஷி நிமிர, அங்கே நின்றால் தன்னை ஒரு சும்மா விட மாட்டான் என்றே உணர்ந்தவனாக 'நீ ரெஸ்ட் எடுடா. நான் வீட்டுக்கு போயிட்டு நைட் வரேன்' ஓடியே விட்டிருந்தான் சஞ்சீவ்.'

சட்டையின் பட்டன்களை கழட்டி விட்டபடியே கட்டிலில் சாய்ந்தான் ரிஷி. அம்மாவின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது.

'பார்த்து நடந்துக்கோ'!!! ஒரு தவறு நடக்கும் முன் இப்படித்தான் வெளி வரும் அம்மாவின் வார்த்தைகள். தனது கண் முன்னே நடக்கும் தவறுகளை அவர் என்றுமே கண்டும் காணாமல் இருந்தது இல்லை.

அம்மா அவன் அம்மா.!!! சராசரி அம்மாக்களிலிருந்து கொஞ்சம் மாறுப்பட்ட அம்மா. அம்மாவுக்கு பிடிக்காத முதல் விஷயம் கண்ணீர். அம்மா எதற்கும் அழுததே இல்லை!. இதுவரை  இல்லை.!

ஒரு பெண் அழாமல் இருப்பது கூட தவறா? அவன் மனதை பல வருடங்களாக வருத்திக்கொண்டிருக்கும் கேள்வி. இது !!!

அவன் அம்மாதான் அவனது உயிர். எப்படி வாழவேண்டுமென்று அவன் கற்றுக்கொண்டது அவனது அம்மாவிடம்தான்.

'வைதேகி' இது அம்மாவின் தாய் தந்தையர் அவருக்கு வைத்த பெயர். அவர்கள் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமோ?  இந்த வைதேகிக்கு ஒரு கல்யாண ராமன் கிடைப்பான் என அறிந்துதான் இந்த பெயரை வைத்தனரோ.!!!

அவனது அப்பா கல்யாண ராமன். இந்த வைதேகிக்கு ஏற்ற கல்யாண ராமன். தனது வைதேகியை எந்த சூழ்நிலையிலும் தீயினில் இறக்க நினைக்காத கல்யாண ராமன்.!!!

ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று அவன் கற்றுக்கொண்டது அப்பாவிடம். ஏதேதோ நினைவலைகள் அவனுக்குள்ளே. கண் மூடி அப்படியே உறங்கிப்போனான் ரிஷி.

நேரம் காலை ஏழு மணியை தாண்டிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ரிஷி.

அப்போது அந்த கெஸ்ட் ஹவுஸ் வாசலில் வந்து நின்றது அவள் கார்.. அவன் வந்து விட்ட செய்தி கிடைத்த பிறகும் எப்படி வராமல் இருக்க முடியுமாம்?

வாசல் கேட் திறந்தே இருந்தது. செக்யூரிட்டியை காணவில்லை. காரை விட்டு இறங்கி கேட்டை தாண்டி நடந்தாள்.

படபடத்தது அவள் இதயம். 'வந்துவிட்டேன். ஏன் வந்தேன்.? நான் வந்தது சரியா தவறா? எதுவுமே புரியவில்லை அவளுக்கு'.

வேலையாட்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. நேரே வீட்டினுள் நுழைந்தாள் அவள். ரிஷி மாடியில் தான் இருக்கவேண்டுமென்று ஒரு கணிப்பு.

மாடிப்படியும் ஏறிவிட்டிருந்தாள் அவள். பார்த்தவுடன் என்ன சொல்வான்? எங்கே வந்தாய் என்பானா? ஏன் வந்தாய் என கேட்பானா? முகத்தை திருப்பிக்கொள்வானா? எது வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் அவனை ஒரே முறை பார்த்தே ஆக வேண்டும்.

அறையின் கதவு சாத்தி இருந்தது. அறை வாசலில் வந்து நின்றாள் அவள்.

Episode # 01

Episode # 03

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.