(Reading time: 31 - 61 minutes)

வ்வளவு சொல்லுறேன்… இன்னமும் உனக்கு திமிர் அடங்கலைல்ல… உன்னைப் பெத்த பாவத்துக்கு நான் தான் தண்டனையை அனுபவிக்குறேன்… பாவம் அவரையும் இதுல தண்டனையை சுமக்க வைச்சிட்டனேன்னு அணுதினமும் நான் துடியா துடிச்சிட்டிருக்கேன்… நீ அவரை மரியாதை இல்லாம பேசுறீயா?...” என்றபடி அவள் கழுத்தினை அவர் பிடித்துவிட,

மகத் வந்து அவரை விலக்க முயற்சித்தான்..

“சார்... என்ன காரியம் செய்றீங்க… விடுங்க… விடுங்க… விடுங்கன்னு சொல்லுறேன்ல….” என அவன் கடினப்பட்டு அவர் கையினை அவள் கழுத்திலிருந்து விலக்க,

“அந்த பையனால தான் இன்னைக்கு இந்த சமூகத்துல நான் மானத்தோடவும், மரியாதையுடனும் இருக்குறேன்… இவ்வளவு ஏன் நீ இப்படி கண்டபடி ஊர் ஊரா அலைஞ்சிட்டு வந்தாலும் ஊரும் உலகமும் உன்னை தப்பா பேசாததுக்கு உன் கழுத்துல கிடக்குதே தாலி அதுதான் காரணம்… அதை புரிஞ்சி நடந்துக்குற வழியைப் பாரு.. தேவையில்லாம பேசி என் கோபத்துக்கு வீணா ஆளாகாத…”

மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டவள், தன் கழுத்தில் கிடந்த தாலியினை தகப்பனிடம் காட்டி,

“இந்த தாலியா?... இதையே நான் மதிக்கலை… அப்புறம் எங்க இதை என் கழுத்துல கட்டின இவனை நான் மதிக்குறதுக்கு?...” என அவள் திமிராய் சொல்ல

“உன்னை கொன்னு புதைச்சாதான் என் ஆத்திரம் அடங்கும்…” என அவர் மீண்டும் அவளை நோக்கி அடிஎடுத்து வைக்க, மகத் இடைமறித்து தடுத்தான்…

“என் ஆத்திரமும் உங்க இரண்டு பேர் நிம்மதியும் சுக்கு நூறா சிதறி போறதுல தான் அடங்கும்… அதுவரைக்கும் உங்க இரண்டு பேரையும் நான் நிம்மதியா இருக்கவிடமாட்டேன்…” என்றவள், பட்டென்று அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ள,

குருமூர்த்தியோ பட்டென்று தரையில் அமர்ந்தார் உடலெல்லாம் ஒடுங்கியபடி….

“சார்… என்னாச்சு… இங்க பாருங்க….” என மகத் ஓடிவந்து அவரை பலம்கொண்ட மட்டும் தூக்கி சோபாவில் அமர வைத்துவிட்டு குடிக்க சிறிது தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை குடிக்க செய்து அவரை படபடப்பிலிருந்தவரை சற்று வெளிவர செய்ய முயற்சிக்க,

“போச்சு… மகத்… எல்லாமே போச்சு… இதுக்காகத்தான் நான் வெளிநாடு போகணும்னு துடிச்சேன்… இவ வரப்போறான்னு நேத்து தெரிஞ்சதிலிருந்தே என் மனசு படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும் மகத்…” என அவர் கலங்கியபடி சொல்ல

“சார்… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர்செல்ஃப்….”

“முடியலையே மகத்… இப்படி ஒரு அடங்காதவளைப் பெத்து வளர்த்து ஆளாக்கினதை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு மகத்… இந்த அசிங்கம் இப்ப இல்ல பல வருஷமாவே என் நெஞ்சை அரிச்சிட்டிருக்கு மகத்… இங்க இருந்தா இவ முகத்துல விழிக்க வேண்டி வரும்னு தான் நான் யாருமே இல்லாம தனியா வெளிநாட்டுல என் காலத்தை போக்கினேன்… உங்களை பார்க்கணும்போல இருந்துச்சு, உங்ககூட சில நாள் இருக்கணும்னும் தோணுச்சு… அதான் வந்தேன்… வந்த இடத்துல இப்படி இந்த ராட்சஸியை பார்க்க வேண்டிவரும்னு நான் கனவுலயும் நினைக்கலை மகத்… நினைக்கலை… அவ பேசின பேச்சுக்கு அவளை கொன்னுருக்கணும்னு மகத் நான்… விட்டுட்டேன்… பாதகி…” என அவர் குமுற,

“சார்… ப்ளீஸ்… டென்ஷன் ஆகாதீங்க…”

“எப்படி மகத் டென்ஷன் ஆகாம இருக்க முடியும்?... உங்களை என்ன வார்த்தை எல்லாம் பேசிட்டா?... எனக்கே தாங்கலை மகத்… நீங்க எப்படிதான் பொறுத்துட்டிருக்கீங்களோ?...” என கவலையுடன் குருமூர்த்தி அவனைப் பார்க்க

“நான் எதும் நினைக்கலை சார்… விடுங்க… கன்யா பேசிட்டு போனதுக்கு நான் வருத்தமும் படலை…” என அவன் இயல்பாக முகத்தில் எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் சொல்ல

“என்னை மன்னிச்சிடுங்க மகத்… அவளை உங்க வாழ்க்கையில கொண்டு வந்து உங்க வாழ்க்கையையும் நான் பாழாக்கிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க மகத்… என் மானத்தையும் மரியாதையையும் காப்பாத்தின உங்களை, இப்படி கொஞ்சமும் மரியாதை இல்லாம அவ பேசுறத கேட்க என்னால முடியலை மகத்… இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான…. என்னை மன்னிச்சிடுங்க மகத்…” என அவர் அழ ஆரம்பிக்க

“ப்ளீஸ்… சார்… இமொஷனல் ஆகாதீங்க… ப்ளீஸ்… நம்ம வாழ்க்கையில நடக்குற எதுக்கும் நீங்களோ நானோ காரணம் இல்ல… கடவுள் தான் காரணம்… அதனால தேவை இல்லாம மனசை போட்டு அலட்டாம ரெஸ்ட் எடுங்க… வாங்க…” என அவன் அவரின் கைப்பிடித்து தூக்க முயல,

“இல்ல மகத்… நான்…” என்று எழுந்தவரிடத்தில்

“நீங்க வாங்க சார்… சொல்லுறேன்ல… வாங்க….” என அவன் தன் அறைக்கு அழைத்துச்செல்ல

“உங்க பொண்ணு எங்க மகத்?... ஆளையேக் காணோம்?... இங்க நடந்த இந்த களேபரத்தை பாவம் அவ பார்த்திருக்கக்கூடாது…” என கவலையுடன் அவர் சொல்ல

“இல்ல சார்… அவ பார்த்திருக்க வாய்ப்பு இல்ல… அவ தோட்டத்துல இருப்பா… நீங்க வாங்க… வந்து ரெஸ்ட் எடுங்க…” என கைத்தாங்கலாக அவரை தனது படுக்கையில் படுக்க வைத்துவிட்டு ஓசையின்றி கதவை சாத்திவிட்டு மகளைத் தேடிச் சென்றான்…

தோட்டத்திற்கு செல்லும் வழியில் இருந்த கண்ணாடிக் கதவு வழியே மகளைப் பார்த்தான்… அவள் அங்கு பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியை பிடிப்பதற்காக அதன் பின்னாடியே ஓடிக்கொண்டிருந்தாள்…

கதவைத்திறந்தவன் நதி என அழைக்க, “அப்பா…” என அவனருகில் ஓடிவந்தவள்,

“பாருப்பா… அந்த பட்டாம்பூச்சி என் கைக்கு எட்டவே மாட்டிக்குது… உன்னை மாதிரி உயரமா இருந்தா நான் பிடிச்சிருப்பேன்ல… நான் எப்பப்பா உயரமாவேன்?...” என தகப்பனிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள் நதிகா…

“நீ உயரமா ஆகணும்னா நல்லா சாப்பிடணும்ல… அப்பதான சீக்கிரம் அந்த பட்டாம்பூச்சியை பிடிக்க முடியும்?... ஹ்ம்ம்…” என அவனும் புருவம் உயர்த்திக்கேட்க

“ஆமாப்பா… நான் நல்லா சாப்பிடுவேன் இனி… சீக்கிரம் வளர்ந்து அந்த பட்டாம்பூச்சியை பிடிச்சிடுவேன்… அப்படித்தானப்பா?...”

“ஆமாடா குட்டி… சரி… வா அப்பா பால் ஆத்தி தரேன்… போலாமா?...” என அவன் கேட்க

“சரிப்பா… போகலாம்…” என அவளும் அவன் கைப்பிடித்துக்கொள்ள,

வந்த வழியில் இருந்த கண்ணாடி கதவினை அவன் திறந்துவிட, அவள் கதவின் அந்தப்பக்கம் சென்றதும்,

“துருவ்… நீ ஈசியா திறந்துட்ட பாரு… நான் வரும்போது திறக்க கஷ்டமா இருந்துச்சு…”

“இன்னைக்கு இந்த கதவு மட்டும் இங்க இல்லன்னா, அங்க நடந்ததெல்லாம் உன் காதிலேயும் விழுந்திருக்கும்… நல்லவேளை… இந்த கதவினால நீ எதும் கேட்கமுடியலை….” என மனதிற்குள் சொல்லிக்கொண்டான் அவன்…

“நீ எனக்காக கீழே ஒரு லாக் ரெடி பண்ணி குடுத்தல்ல போன தடவை வரும்போது… அதப்பிடிச்சு தான் திறந்தேன்… ஆனாலும் ரொம்ப டைட்டா இருந்துச்சு… கை வலிச்சிட்டு…” என அவள் சொல்ல

“அப்பாவை கூப்பிட்டிருக்கலாம்தானடா… காட்டு… கையை…” என்றவன், அவள் கையை விரித்ததும், அதில் மெதுவாக தடவி விட்டு, முத்தமிட்டு,

“இனி கதவு டைட்டா இருக்காது… நான் சரி பண்ணிடுறேன்… சரியாடா…” எனக் கேட்க

“ஓகேப்பா…” என்றாள் அவளும்…

“ஹ்ம்ம்… வா….” என்றபடி மகளைத்தூக்கிக்கொண்டு அவன் சமையலறைக்குள் சென்றான்…

சமையலறைத்திண்டில் அவளை உட்காரவைத்தான்… அடுப்பில் பால் வைத்து காய்ச்சி, மகளுக்கு சூடில்லாமல் ஆற்றி மெல்ல மெல்ல குடிக்க வைத்தான் அவளை….

“போதும்ப்பா… நீ குடி…” என அவள் விளையாட்டுத்தனத்தில் கீழே இறங்க முற்பட,

“இன்னும் கொஞ்சம் குடிடா…”

“போதும்ப்பா… வயிறு நிறைஞ்சிட்டு…”

“அப்பா சொல்லுறேன்ல… ப்ளீஸ்…. கொஞ்சம் குடிடா…”

“ஹ்ம்ம்… சரி உனக்காக….” என்றவள் அவன் ஆற்றி கொடுத்த மீதி பாலையும் குடித்து முடிக்க,

“வெரி குட்… சமத்து குட்டி என் நதி…” என அவன் அவள் கன்னத்தில் இதழ் ஒற்ற,

“என் துருவ்-ம் சமத்து….” என அவள் இருகைதட்டி சிரிக்க…

அந்த நேரம் அங்கு வந்த விசித்திர கன்யா நதிகாவை தீண்ட தகாதது போல் பார்த்து முறைக்க, மகத் நதிகாவை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டான்…

“இனம் இனத்தோட தான சேரும்… அநாதைக் கழுதைகள்…” என ஆங்கிலத்தில் திட்டிவிட்டு அவள் அகல, மகத் பல்லைக்கடித்துக்கொண்டான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.