(Reading time: 31 - 61 minutes)

வள் சென்றதும்,

“நான் தான் சொன்னேனே மகத்… இவளை எல்லாம்…” என்றபடி குருமூர்த்தி கோபமாக வர

“சார்…” என்றபடி அவன் நதிகாவினை கண்காட்டி சொல்ல அவர் சற்று அமைதியானார்…

“துருவ்… இப்போ வந்துட்டு போனாங்கல்ல அவங்க யாரு?... நான் அவங்களைப் பார்த்ததே இல்லையே…. யாரு இவங்க?... நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க…” என அவள் கேள்வி கேட்க

அவள் முன் மண்டியிட்டவன், சில நிமிட யோசனைக்குப் பிறகு,

“அப்பா என்ன சொன்னாலும் கேட்பீயாடா…”

“நீ சொன்னா மட்டும் தான் நான் கேட்பேன்…”

“அவங்களுக்கு அப்பா மேலயும், இதோ இங்க இருக்குற இந்த தாத்தா மேலயும் கொஞ்சம் கோபம்… அதனால எங்களை கொஞ்சம் திட்டுவாங்க… நீ அதை புரிஞ்சி நடந்துக்கணும் சரியா?...”

“சரிப்பா… அவங்க திட்டினாலும் நான் அழமாட்டேன்… பொறுத்துப்பேன்…” என அவள் சொல்ல, மகளை அணைத்துக்கொண்டான் மகத்…

“சரிப்பா… அவங்க திட்டினா பொறுத்துக்கணும்னு சொல்லுறல்ல, அப்பன்னா அவங்க யாரு நமக்கு சொந்தமா?...” என அவள் கேட்டதும்,

சட்டென குருமூர்த்தி, “நான் உனக்கு யாரு நதிகா?... சொந்தமா?...” எனக் கேட்க

“நீங்க என் தாத்தா… சொந்தம் தான்…” என அவளும் பட்டென்று சொல்ல

“ஹ்ம்ம்… அப்போ அவளும் உன் சொந்தம் தான்….” என்றார் குருமூர்த்தி…

“எப்படி???....” என அவள் தன் கையை ஆட்டி கேட்க

“நீ யாரு உன் அப்பாக்கு?...”

“நான் என் துருவோட பொண்ணு….”

“அதே மாதிரி தான் அவளும் எனக்கு…. இப்போ புரியுதா?...” என விளக்கம் சொல்ல

“ஓ… அப்போ அவங்க உங்க பொண்ணா?... ஹ்ம்ம்… அவங்க பேர் என்ன?...”

“அவ பேரு விசித்திர கன்யா….”

“நைஸ் நேம்… சரி தாத்தா…. நான் அவங்களை எப்படி கூப்பிடணும்?...”

“அது வந்து….” என குருமூர்த்தி மகத்தினை பார்த்துக்கொண்டு இழுக்க,

“அம்மான்னு கூப்பிடணும் நீ… அவங்க உன் அம்மா…” என்றான் மகத் அழுத்தமாய்…

“அம்மாவா?.... என் அம்மாவா?...” என அவள் தன் சின்னக்கண்களை உருட்டி ஆச்சரியமாய் கேட்டுக்கொண்டே மகத் அருகில் வர,

“ஆமாடா… உன் அம்மாதான்…” என்றான் அவனும்….

“ஹைய்யா… எனக்கு அம்மா கிடைச்சிட்டாங்க… என் அம்மா… அப்படித்தானே துருவ் ஜாலி… ஜாலி….…” என தன் இருகைகளையும் தட்டி அவள் சிரிக்க,

குருமூர்த்தியோ அதிசயமாய் மகத்தினைப் பார்த்தார்…

“நதி குட்டி… உன் ரூமில் அப்பா உனக்காக சில பொம்மை வாங்கி வச்சிருக்கேன்… உனக்கு பிடிச்சிருக்கான்னு போய் பாரு….” என அவன் சொன்னதும்,

“ஐ… பொம்மையா?...” என்றபடி ஓடினாள் நதிகா…

அவள் செல்வதற்காகவே காத்திருந்தது போல், மகத்-ன் கைகளைப் பிடித்துக்கொண்ட குருமூர்த்தி,

“மகத்… நீங்க… சொன்னது… உங்க பொண்ணு…. அந்த பிடிவாதக்காரிக்கும் பொண்ணா?.... நிஜமா தானா?...” என நெகிழ்ச்சியுடன் அவர் கேட்க

“நிஜமாதான் சார் சொன்னேன்… நதிகாவுக்கு கன்யா அம்மாதான்…”

“நீங்க சொல்லுறது தற்சமயத்துக்கு மட்டும் இல்லலை…” என அவர் பரிதவிப்புடன் கேட்க

“இப்போ இல்ல… இனி எப்பவுமே நதிகாவோட அம்மா கன்யா மட்டும் தான்…”

அவன் வார்த்தைகளை கேட்டதும், “ரொம்ப சந்தோஷம் மகத்… நிஜமாவே ரொம்ப சந்தோஷம்…” என்று கண்கலங்கினார் குருமூர்த்தி…

“நான் ஹாஸ்பிட்டல் போகணும் சார்… நீங்க வர்றீங்களா?... இல்ல ரெஸ்ட் எடுக்குறீங்களா?...”

“இல்ல மகத் நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்குறேன்… நீங்க போயிட்டு வாங்க….”

“சரி சார்…” என்றவன் சமையலறை நோக்கி போக,

“எங்க போறீங்க மகத்?...” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு, “இதோ வந்திடுறேன் சார்…” என்றபடி சற்று நேரத்தில் காபியோடு வெளிவந்தான் மகத்…

“இதை குடிங்க சார்… நான் உங்களுக்கு டிபன் ரெடி பண்ணி வைச்சிட்டு கிளம்புறேன்…”

“அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கறேன்…”

“இல்ல சார்… நீங்க நேரத்துக்கு சாப்பிடணும்… அப்பதான் உங்க ஹெல்த்க்கு நல்லது…”

“இப்ப என்ன நான் சாப்பிடணும்… அவ்வளவுதான?...” என்றவர், தன் வீட்டுக்கு போன் செய்து பேசி முடித்து வைத்துவிட்டு,

“அங்க இருந்து இரண்டு பேரை வர சொல்லியிருக்கேன்… சமைக்க… இன்னைக்கு மட்டும் இல்ல இன்னும் கொஞ்ச நாளைக்கு…”

“அதெல்லாம் எதுக்கு சார்… நான் மேனேஜ் பண்ணிப்பேன்….”

“தனியா இருந்தா நீங்க மேனேஜ் பண்ணிடுவீங்க மகத்… நான் இல்லன்னு சொல்லலை… இப்போ நதிகா, அப்புறம் கன்யா வேற இருக்கா… அதுக்கும் மேல நானும் கொஞ்ச நாள் இங்கேயே தங்க விரும்புறேன் மகத்… அதனால தான் சொல்லுறேன்… எங்க எல்லாருக்கும் சேர்த்து நீங்க சமைச்சு வச்சிட்டு கிளம்ப முடியாது மகத்…”

“சார்… நான் என்ன சொல்ல வர்றேன்னா…”

“நான் இங்க தங்குறதுல எதுவும் பிரச்சினையா மகத் உங்களுக்கு?...”

“அப்படி எல்லாம் எதுவுமில்ல சார்… நீங்க தாராளமா இங்க தங்கலாம்….”

“தேங்க்ஸ் மகத்….”

“இட்ஸ் ஓகே சார்…”

“நதிகாவை இங்க விட்டுட்டு போறீங்களா மகத் எனக்கு துணையா?...”

“இல்ல சார்… பேத்தி கூட நேரம் அப்புறம் கழிக்கலாம்… முதலில் உங்க பொண்ணு கூட நேரத்தை கழிங்க… அதுதான் இப்போ முக்கியம்….”

“அவளை நினைச்சாலே எனக்கு கோபம் தான் மகத் வருது…”

“அப்படி கோபப்படுறவர் தான சார் இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி கன்யா நதிகாவோட அம்மாதான்னு சொன்னதுக்கு அப்படி சந்தோஷமும் பட்டார்… அப்போ எது உண்மை சார்?...” என அவன் கேட்க, அவர் பதில் சொல்லவில்லை…

“கன்யா மேல உங்களுக்கு எந்த அளவு கோபம் இருக்கோ, அத விட அதிகமா பாசமும் இருக்கு… மூணு, நாலு வயசு கூட ஆகாத என் பொண்ணை விட்டுட்டே என்னால இருக்க முடியலைங்கிறப்போ, இருபத்தைந்து வருஷமா வளர்த்து ஆளாக்கின பொண்ணை எப்படி சார் எக்கேடும் கெட்டுப்போகட்டும்னு நீங்க விடமுடியும்?...”

“மகத்….”

“புரியுது சார்… எனக்கும் உங்க நிலைமை… ஒரே பொண்ணு… கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து செல்லமா வளர்த்தீங்க… என்னை மரியாதைக்குறைவா பேசினான்னு அந்த பொண்ணை இன்னைக்கு கைநீட்டி அடிக்க வேற செய்தீங்க…. உங்க மனசை என்னால உணர முடியுது சார்… நானும் சரி என் பொண்ணும் சரி உங்களை தொந்தரவு பண்ண மாட்டோம்… மனசை போட்டு குழப்பாம கன்யாகிட்ட பேசுங்க… நீங்க விலகிப்போறீங்கன்றதே அவ மனசுல ஒரு பெரும் காயத்தை கொடுத்து கோபமாக்கும்…. உங்களுக்கு எடுத்து சொல்லுற அளவுக்கு என் வயசு இல்லதான்… ஆனாலும் என் மனசுல பட்டதை சொல்லிட்டேன் சார்…” என்றவன் அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு, அவனும் சென்றுவிட்டான் மௌனமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.