(Reading time: 20 - 40 minutes)

வள் பார்வை, உடல் மொழி, மன நிலை எல்லாவற்றிலும் வந்திருக்கும் மாற்றம் அவனுக்கும் புரிகிறது தானே…. இனி பேசி ப்ரயோஜனம் இல்லை…. அதோடு கன்வின்ஸ் செய்தெல்லாம் கல்யாணம் செய்ய கூடாது….

“அப்றம் உன் இஷ்டம்….. உங்க வீட்ல சொல்லி இந்த மேரேஜ் வேண்டாம்னு எங்க வீட்டுக்கு சொல்லி அனுப்பு…..நான் என் பேரண்ட்ஸை பிரிபர் செய்யனும்” அவன் திரும்பி நடக்க தொடங்க

“ஒரு நிமிஷம்…..” தயங்கிய இவள் அழைப்பில் சற்று கடுத்திருந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தான்.

“உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு போங்களேன்…. நான்…. நான் ….எங்க வீட்ல எப்ப உங்க வீட்டுக்கு சொல்லுவாங்கன்னு…..அன்னைக்கு இன்ஃபார்ம் பண்றேன்…. உங்க பேரண்ட்ஸை பார்த்துக்க அது…” திக்கி திணறி அவனுக்கு விஷயம் புரியும் அளவு சொல்லிவிட்டாள்.

முகத்திலிருந்த இறுக்கம் குறையாமல் வாலட்டிலிருந்து தன் கார்டை எடுத்துக் கொடுத்தவன்…. “இதுக்குன்னு இல்லை…..எந்த ஹெல்ப்க்குனாலும் கால் பண்ணலாம்…. நோ பெர்சனல் க்ரட்ஜஸ்” சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவன் செல்வதை பார்க்க எப்படி உணர்கிறோம் என்றே நிலவினிக்குப் புரியவில்லை….. அழுகை அதாக வந்தது. அடிவயிற்றில் பயமும்.

நேராக வந்து தன் அறையில் சுருண்டாள்.…. லொக்‌ஸோடொன்டா உட்பட யாரையும் அவள் சட்டை செய்யவே இல்லை… மொபைலை கூட தொடவில்லை.

பின் வெகு நேரம் கழித்து எழுந்து வெளியில் வந்தால் அக்காவும் அம்மாவும்  பேசிக் கொண்டிருப்பது காதில் விழுகிறது.

“நிலு முதல்ல மாப்ளயப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்த மாதிரி இருந்துச்சு…..நல்லபடியா அவரைப் பத்தி சொல்லவும் செய்தா….அப்றம் அவங்க வீட்ல கிளம்புறப்ப பார்த்தா இவ முகம் சரியில்லாத மாதிரி இருந்துச்சு….. சும்மா விளையாட்டு தனமா கல்யாணம் வேண்டாம்னு சொல்றா…..நல்ல குடும்பம் …..நல்ல பையன்……விரும்பி வர்றாங்க….சொந்த மக மாதிரி பார்த்துப்பாங்க….பக்கத்து ஊர்லயே இருப்பா…. மாப்ளையையும் அவளுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நம்பி இவ்ளவு தூரம் கொண்டு வந்துட்டேன்…. இப்ப மனசுக்குள்ள கொஞ்சம் உதறலா இருக்குது…இவ மனச்சுல என்னன்னு தெரியலையே…” அம்மா தன் மனதை அக்காவிடம் கொட்டிக் கொண்டு இருந்தார்.

“நல்லா சொன்னீங்க போங்க சித்தி….. அவங்களுக்குள்ள அதெல்லாம் நல்லாவே பிடிச்சிருக்குது…… மாப்ள கிளம்புறார்னு இவ முகத்தை தூக்கி வச்சுட்டு இருப்பாளா இருக்கும்…. நீங்க தேவையில்லாம குழப்பிகாதீங்க….

“ப்ச்….. என்னதான் பிடிச்சாலும் ஒரே நாள்ள அப்டிலாம் தோணிடாது…. இவ முகம் சரி இல்லயே தம்மு….. எனக்கு நெஞ்ச பிசையுது……இவ சந்தோஷமா இருக்காளேன்னு அவங்க அப்பாட்ட அவளுக்கு பிடிச்சிருக்குன்னுட்டேன்….. பேசாம என்னவாது சொல்லி நிறுத்த….” அதற்கு மேல் சுசிலாவை பேசவிடவில்லை அக்கா தமிழினி… அவர் வாயை தன் கையால் மூடி இருந்தாள்.

“நல்ல விஷயத்துக்கு எதிரா நீங்களே எதுவும் சொல்லிடாதீங்க சித்தி….. உங்க வாயல இந்த கல்யாணத்தை நீங்க ஆசீர்வதிக்கனும்…எதிர்மறையா பேசிடாதீங்க… நம்ம நிலு நிறைஞ்ச வாழ்க்கை வாழனும்….”

டைனிங் டேபிள் சேரில் அம்மா உட்கார்ந்திருக்க  அருகில் நின்றிருந்த அக்கா எதையோ செய்து கொண்டிருக்க பேச்சு இப்படி ஓடிக் கொண்டு இருக்கிறது….. இப்ப இவ அங்க போலாமா வேண்டாமா?

“நீ சொல்றதெல்லாம் கேட்க நல்லா இருக்கு தம்மு பாப்பா…. ஆனா அவ முகம் சரியில்லாம எனக்கு மனசு ஆற மாட்டேங்குதே….. இப்ப போய் எதையாவது சொன்னா நிலு அப்பா வேற அதை எப்படி மாப்ள வீட்டுக்கு சொல்ல முடியும்னு தெரியலையே….. நினச்சா நெஞ்ச அடைக்குடி…” அம்மா இப்போது தன் நெஞ்சை தன் கையால் நீவுவது தெரிய  நிலவினிக்கு உயிர்  போகிறது தவிப்பில்….

இவள் இங்கிருந்து ஓட்டமாய் ஒரு எட்டு எடுக்க அதற்குள் அம்மா அருகில் இருந்த அக்காவோ “ஐயோ என்ன சித்தி நீங்க….மாப்ள கிளம்புறப்ப தோட்டத்துல இவ என்ன செய்துட்டு இருந்தா தெரியுமா….. தன் தாவணியால அவர் கன்னத்தை துடச்சு விட்டுகிட்டு இருந்தா….. இதுக்கு மேல ஏன் எதுக்குன்னு கேட்காதீங்க….இதையே நான் சொல்லியிருக்கவும் கூடாது நீங்க கேட்டிருக்கவும் கூடாது….” அவசர அவசரமாக படபடத்தாள்.

அம்மா இப்போது அதிசயமாய் அக்காவைப் பார்ப்பது இவளுக்கும் தெரிகிறதுதான். அதோடு அம்மா முகத்தில் மகிழ்ச்சி கோடு….

ஐயோ கடவுளே மானம் மாறி மாறி மாரத்தான் போகுதே!!!! இது நிலவினியின் நிலைப் பாடு.

“எனக்கு புரிஞ்ச வரை மாப்ளயும் நிலுவும் முன்னமே ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்களா இருக்கும்…. அவருக்கு கல்யாணம் ஆகாத அண்ணன் இருக்றதாலே அவரால முன்னமே வந்து நம்ம வீட்ல பொண்ணு கேட்டிருக்க முடியாது……அதானல நிலு இங்க வந்த மாப்ளையெல்லாம் கட்டோட பிடிக்கலை…கத்தரிக்கா விளையலைனு கதை சொல்லி தட்டி இருப்பா….இப்ப தான் வீட்ல சொல்லி செஞ்சு மாப்ள இவ்ளவு தூரம் அவர் வீட்ட கூட்டிட்டு வந்தாச்சு……  இதெல்லாம் கண்டும் காணாம நீங்க சந்தோஷமா இருங்க…. அதோட..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.