(Reading time: 20 - 40 minutes)

னால் கொண்டல்புரம் அடையவும் “ரொம்ப இருட்டிடுமா…இன்னைக்கு இங்க இரு, நாளைக்கு உங்க கனி ஆன்டி வீட்டுக்கு போகலாம்” என  பொற்பரனும் மரகதமும் எவ்வளவோ சொன்னதை இவர்கள் வீட்டு முற்றத்தை தாண்டி உள்ளே வராமல் முரட்டடியாய் மொட்டையாய் அவள் மறுத்ததை அதிபனுக்கு அவ்வளவு எளிதாக அசட்டை செய்ய முடியவில்லை….

ஆனாலும் அவள் அத்தனை பிடிவாதம் பிடிக்கும்போது இவன் என்ன செய்துவிட முடியும்? அந்த அவளது கனி ஆன்டியின் கணவர் நவமணியின் தகப்பனார் வீடு  அதாவது அதிபனுக்கு ஒன்றுவிட்ட  சித்தப்பா வீடு அதிபனின் இப்போதைய வீட்டிற்கு பின் புறம் இருந்தது.

இரவு இத்தனை மணிக்கு இவர்களது ரைஸ்மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரை வரச் சொல்லி, அவர்களோடு அவனும் அந்த வீட்டிற்கு சென்று,

அது இவனது சித்தப்பா குடும்பம் வசதியாக இருக்கும்போது கட்டிய வீடு என்பதால் ஓரளவு பெரிய வீடுதான்….அதை அத்தனை மணிக்கு சுத்தம் செய்து….. ஈ.பி கனெக்க்ஷன் இருந்தும் ஏனோ பவர் சப்ளை இல்லாமல் இருந்த வீட்டிற்கு இவனது வீட்டிலிருந்து கனெக்க்ஷன் குடுத்து…

இவர்கள் வீட்டிலிருந்து சில குடம் தண்ணீரைக்  கொண்டு வந்து அந்த வீட்டு தொட்டியில் நிரப்பி என இப்போதைக்கு அவளுக்கு உடனடி தேவை என்னதாய் இருக்கும் என பார்த்து பார்த்து செய்து வைத்தாலும்    

இது இத்தனையும் நடக்கும் போது அந்த வீட்டு முற்றத்தில் சற்று அரண்ட பார்வையுடன் சுருங்கிய முகத்துடன் கால் கடுக்க நின்றிருந்தவளை தனியே விட்டு கிளம்பும் போது

“ஆனாலும் உனக்கு திமிர் ரொம்ப ஜாஸ்தி.... நாங்க என்ன அன்டச்சபிளா….? ஒருத்தர்ட்டயும் சேராம இங்க எப்படி இருந்தர்னு பார்ப்போம் “ என சீறிவிட்டு வந்தான்.

குரலை உயர்த்தி கத்தினான் என்றெல்லாம் இல்லை. முகம் கடுக்க அவன் சொன்ன விதத்திலேயே அனுவுக்கு தூக்கி அடித்தது. அதில் அவள் முகம் போன போக்கிலேயே அதிபனுக்கு கொஞ்சம் ஒருமாதிரி ஆகிவிட்டதென்றால்

அந்த வீட்டு முற்றத்தை தாண்டி கேட்டை மூடுவதற்காக திரும்பும் போது அனு அந்த வீட்டு நுழைவு வாசல் படியை தன் கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில் படுகிறது இவனுக்கு….

ஏதோ அம்மா தன் குழந்தையை தடவிக் கொடுப்பது போல் அப்படி ஒரு தடவல்….. ஏன் என்று புரியவில்லை…. அந்த செயலின் அர்த்தம் தெரியவில்லை இவனுக்கு…..ஆயினும் அந்த காட்சியைப் பார்க்கும் போது மனதிற்குள் இன்னுமாய் கஷ்டமாகிவிட்டது அதிபனுக்கு.

அதில் வீட்டுக்கு வந்தால் அவனது அம்மா வேறு “அனுக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லையோ என்னமோ…சரியாவே சாப்டலை….நம்ம ஊர் சாப்பாடு பழக்கமிருக்காதே அதனால போலன்னு நினச்சேன்….அவ அதெல்லாம் இல்ல சின்ன வயசிலிருந்தே சாப்டுறுக்கேன்னு சொல்றா…. என்னமோ சரியில்லை” என இன்னுமாய் இவன் மனதை தவிக்க வைத்தார்.

உடம்பு சரியில்லையோ…… ஒரு நாள் பழக்கத்துல எதையெல்லாம் அவள் இவன் அம்மாட்ட சொல்லிட முடியும்? தேவையில்லாம நான் திட்டிட்டனோ ? என்ற ரீதியில் இவன் மனம் ஓடிக் கொண்டிருக்க…..

ஐயோ! என்ற அவனது அம்மாவின் குரல்தான் அதற்கு தடை போட்டது.

“என்னம்மா? என்னாச்சு?” அவர் அதிர்ந்த சத்ததில் இவன் மட்டுமல்ல அருகிலிருந்த அபயனும் வந்திருந்தான்.

“என் அரும்பு மாலைய காணோம்….” அதை சொல்லிய அவர் குரலையும் முகத்தையும் தாண்டி அது எத்தனையாய் அம்மாவுக்கு கஷ்டமாயிருக்கும் என மகன்கள் இருவருக்கும் தெரியும்…. மரகதத்தின் அம்மாவுடைய நகை……

 “ இதை போடுறப்ப என் அம்மாவ தொடுற மாதிரியே இருக்கும்…. அவிய கழுத்த தொட்டது இப்ப என் மேலயும் படுதேன்னு….” மரகதம் சொல்லி பிள்ளைகள் அனைவருமே கேட்டதுண்டு.

ரொம்ப முக்கியமான தருணங்கள் தவிர அதை வெளியில் எடுக்க கூட மாட்டார் மரகதம். அவரது அம்மா ஞாபகமாக இருக்கும் ஒரே விஷயம் இந்த நகைதானாம்.

இதில் இது காணாமல் போய்விட்டதென்றால்? கார் வீடு என எல்லா இடத்தையும் தேடி மனம் வாடிப் போன அம்மாவை ஒரு வழியாய் தூங்க வைக்கும் வரைக்கும் கூட அதிபனுக்கு அனு மேல் எதுவும் சந்தேகம் வரவில்லைதான்.

றுநாள் காலை இவன் கண்விழிக்கும் போதே அம்மாவுக்கு ஜுரம் என்ற செய்திதான் முதலில் காதில் விழுந்த விஷயமே…. மனம் வலித்துப் போனது இவனுக்கு….. அம்மாவின் வயதும் உடலும் இதில் எத்தனை பாடு படுமோ?

முதல் வேலையா அம்மாவிடம் தான் போய் நின்றான் அதிபன்.

“ஏன்மா….. ஒரு நகைக்காகவா இவ்ளவு வருத்தப் பட்டுகிறீங்க…. போங்கம்மா வர வர சின்ன பிள்ள மாதிரி போய்ட்டு இருக்கீங்க….”

“அதுக்கெல்லாம் இல்லைடா….. நான் போய்ட்டா நீ கடைசி வரை கல்யாணம் செய்யாமலே இருந்திருவியா அதிபா?” அவரது அடி மன பயத்திற்கு வந்து நின்றார் அந்த அன்னை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.